புரதம் மிகுந்த சுருள்பாசி!

சுருள்பாசி

கால்நடைகளின் உணவுத் தேவை கூடியபடி உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், விவசாய நிலங்களைப் பிற தேவைகளுக்காக மாற்றுவது தான். மேலும், காலநிலை மாற்றத்தால் பருவமழை காலங்கடந்து பெய்வதால் தீவன உற்பத்திக் குறைகிறது. இந்நிலையில், அதிகச் சத்துகள் மற்றும் அதிகளவில் உற்பத்தியாகும் ஸ்பைருலினா என்னும் சுருள்பாசி மூலம், நிலம் மற்றும் நீரின் தேவை குறைகிறது.

சுருள்பாசி மனித உணவாகவும், கால்நடைகளின் உணவாகவும் பயன்படும் ஊட்டப் பொருளாகும். இது, ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் ஆன நுண்ணிய உடலமைப்பைக் கொண்ட ஆர்த்ரோஸ்பைரா என்னும் நீலப்பச்சைப் பாசி வகையைச் சேர்ந்தது.

உலகம் முழுதும் இதில் 30 ஆயிரம் வகைகள் உள்ளன. சுருள்பாசியில் உள்ள சத்துகளை, மனித உடலிலுள்ள செல்கள் எளிதில் உறிஞ்சும். ஓரளவு உப்பு மற்றும் காரமுள்ள நீரில் இப்பாசி வளரும்.

ஆப்பிரிக்காவில் 1965 இல் கடும் பஞ்சம் நிகழ்ந்த போது, அங்கிருந்த மக்கள், இன்றைய சோமாலிய மக்களைப் போல மெலிந்து இருந்தார்கள். ஆனால், சார்டு என்னும் இடத்தைச் சேர்ந்த மக்கள், பஞ்சப் பாதிப்பின்றி, நலமாக இருந்தார்கள். நீரை மட்டும் குடித்தே அவர்கள் நன்றாக இருந்தனர்.

இதை வியப்புடன் ஆய்வு செய்த பெல்ஜிய அறிஞர்கள், அப்பகுதி மக்கள் அருந்திய நீரில் சுருள்பாசி கலந்திருந்ததைக் கண்டனர். இந்த ஆய்வின் மூலம், இந்தப் பாசியைத் தினமும் சாப்பிட்டால் உடல் நலம் மேம்படும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து, சுருள்பாசி இந்தியாவில் அறிமுகமானது. இது, விண்வெளி ஆய்வாளர்களின் முக்கிய உணவாகும்.

சுருள்பாசியை உற்பத்தி செய்து பல வழிகளில் பணம் ஈட்டலாம். கால்நடைத் தீவனமாக்கி வருவாயைப் பெருக்கலாம். இதை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக மாற்றலாம். தாய்ப்பாசியாக விற்கலாம்.

சத்துக் குறையைச் சுருள் பாசியால் மட்டுமே அகற்ற முடியும் என, ஐ.நா. அவை கூறியிருப்பதால், எதிர்காலத்தில் இந்தப் பாசிக்கு நல்ல வரவேற்பு இருக்கும். பெரு முதலாளிகள் சுருள்பாசியை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்தாலும், விவசாயிகள் இதைச் சிறு தொழிலாகச் செய்ய முடியும்.

பயன்கள்

உலகளவில் உற்பத்தியாகும் சுருள்பாசியில் பாதியளவு, கால்நடை, கோழி மற்றும் மீன்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. இதை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால் கறிக்கோழியின் எடை கூடுவதுடன், அதன் சதையிலுள்ள கெட்ட கொழுப்பும் குறையும்.

இளம் குஞ்சுகளுக்குக் கொடுத்தால், நோயெதிர்ப்பு சக்தி கூடும். முட்டைக் கோழிக்குக் கொடுத்தால், முட்டையில் உள்ள கரோட்டின் நிறமி மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்களின் அளவும் கூடும். இதில், மனித உடல் நலத்துக்குத் தேவையான புரதம் மிகுதியாக உள்ளது.

சத்துகள்

நூறு கிராம் சுருள்பாசியில், புரதம் 55-69 மி.கி., மாவுப்பொருள் 15-25 மி.கி., கொழுப்பு 5-6 மி.கி., ஈரப்பதம் 25-45 மி.கி., கரோட்டின் 160-260 மி.கி., சாந்தோபில் 170-240 மி.கி., பபைக்கோ சயனின் 1300-1700 மி.கி., குளோரோபில் 15000-19000, கரோட்டினாய்டுகள் 400-500 அளவில் உள்ளன.

சுருள்பாசியில் 15 வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில், மேக்சிமா சுருள் பாசியைப் பெரியளவில் உற்பத்தி செய்யலாம். பிளான்டெனிஸ் வகை வீட்டளவில் உற்பத்தி செய்ய ஏற்றது.

வளர்ப்பு முறை

முதலில் 18×12 அடி பரப்பைச் சமப்படுத்தி, ஒரு அங்குல உயரத்துக்கு மணலைப் பரப்ப வேண்டும். பின்பு, நாற்புறமும் 2 அடி உயரத்தில் 12 கட்டைகளை ஊன்றி, உள்பகுதியில் தார்ப்பாய் மூலம் தொட்டியை அமைக்க வேண்டும்.

அதை, அரைக்கிலோ கல்லுப்புக் கலந்த கலவையால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, ஆய்வகத்தில் சோதிக்கப்பட்ட நீரைத் தொட்டியில் 23 செ.மீ. வரையில் நிரப்ப வேண்டும். இதற்குச் சுமார் 750 லிட்டர் நீர் தேவைப்படும்.

அடுத்து, 7.5 கிலோ பொட்டாசியம் பை கார்பனேட்டைத் தொட்டியில் இட்டுத் துடுப்பால் கலக்க வேண்டும். தொடர்ந்து, 4.750 கிராம் கல்லுப்பு, 190 கிராம் யூரியாவை இட்டுக் கலக்க வேண்டும்.

மேலும், ஒரு கிலோ பெரஸ் சல்பேட், ஒரு லிட்டர் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம், 10 லிட்டர் நீர் ஆகியன கலந்த கலவையில் இருந்து 47.5 மி.லி. மற்றும் 49.4 மி.லி. பாஸ்பாரிக் அமிலத்தை, கையுறை அணிந்து, தொட்டியில் கவனமாகத் தெளிக்க வேண்டும்.

நீரின் பி.எச். அளவு 10.5, நீரின் அடர்த்தி 1.010-1.20 என இருக்க வேண்டும். பிறகு, பூனம் சேலையை இரண்டாக மடித்து, அதில் 750 கிராம் தாய்ப்பாசியை இட்டு, சுருட்டிப் பிடித்துக் கொண்டு, அதைத் தொட்டி நீரில் ஆங்காங்கே மூழ்கச் செய்து, பாசியை விட வேண்டும். தினமும் பத்து முறை கலக்கி விட வேண்டும்.

அறுவடை

துண்டைக் கொண்டு மீனைப் பிடிப்பதைப் போல, சேலை மூலம் தொட்டியின் அடியிலிருந்து வெள்ளை நிறத்தில் படியும் கழிவை அகற்ற வேண்டும். இதைத் தினமும் காலை மாலையில் இருவர் சேர்ந்து செய்ய வேண்டும்.

இறுதியாக, 8-9 நாளில் தொட்டியின் மேலே குறுக்காக இரண்டு கட்டைகளை வைத்து, அதில் சல்லடை, அதற்கு மேல் சேலையை விரித்து, தொட்டியில் மிதக்கும் பாசியை, நீருடன், குவளை மூலம் அள்ளி ஊற்ற வேண்டும். அப்போது, கழிவுகள் சேலையிலும், பாசிகள் சல்லடையிலும் தங்கி விடும். நீர் மீண்டும் தொட்டிக்குள் போய் விடும்.

இதைப்போல, தினமும் சூரியன் வருமுன் அறுவடை செய்ய வேண்டும். இதை நீரில் நன்கு கழுவி நிழலில் உலர்த்தி வைத்துப் பயன்படுத்தலாம். அறுவடை முடிந்த பிறகு, முதன் முதலாக இட்ட ஊட்டத்தின் அளவில் பாதியை இட வேண்டும்.

பாசியில் புரதம் 65 சதம் இருந்தால் மனித உணவாகவும், 50-65 சதம் இருந்தால் கால்நடை உணவாகவும், 50 சதத்துக்கும் குறைவாக இருந்தால் மீனுக்கும் கொடுக்கலாம். பாசியை வேக வைக்கக் கூடாது. சிறுநீரக நோயாளிகளைத் தவிர மற்ற அனைவரும் உண்ணலாம்.

வீட்டில் வளர்க்கும் முறை

தேவையான பொருள்கள்: சாண எரிவளிக் கழிவு, 2-3 கிராம் கடல் உப்பு அல்லது பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட், சமையல் சோடா, சோடியம் குளோரைடு, சுத்தமான சுருள்பாசி.

செய்முறை: 35-40 லிட்டர் பிடிக்கும் மற்றும் 25 ச.செ.மீ. வாயுள்ள மூன்று மண் பானைகளை, அவற்றின் கழுத்தளவு வரையில் மண்ணில் புதைத்து விட வேண்டும்.

பிறகு, இவற்றில் சாண எரிவாயுக் கழிவு, கடல் உப்பு அல்லது அடுத்துக் குறிப்பிட்டுள்ள உப்புகளில் ஒன்றைக் கலந்து ஊற்ற வேண்டும். அடுத்து, சுருள்பாசியை அந்தப் பானைகளில் இட வேண்டும்.

இந்தக் கலவையைத் தினமும் 3-4 முறை கலக்கிவிட வேண்டும். கலக்கி விடா விட்டால் பாசி வளராது. பாசி வளர 3-4 நாட்களாகும். அதனால், வெய்யில் படும்படிப் பானைகளை வைக்க வேண்டும்.

வெளிர் நிறத்திலுள்ள கலவை அடர் பச்சையாக மாறிய பிறகு, துணியில் வடிகட்டிப் பாசியை எடுக்கலாம். பிறகு, நன்கு கழுவி, சப்பாத்தி, சட்னி, நூடுல்ஸ், காய்கறிகள் போன்றவற்றில் கலந்து உண்ணலாம். நிழலில் உலர்த்திச் சேமித்து வைக்கலாம்.

இந்தப் பானைகளில் இருந்து ஒருநாளில் கிடைக்கும் பாசி, ஒரு நாளைக்கு ஒருவருக்கு, 100 சத வைட்டமின் ஏ, 200 சத வைட்டமின் பி12 சத்துகளைத் தரும். மண்பானையில் வளரும் பாசிகள் சுத்தமாக இருக்கும். நெடுநாட்கள் பயன்படுத்தலாம்.


முனைவர் இரா.பூர்ணியம்மாள், சோ.பிரபு, த.ஜானகி, ஜெ.கண்ணன், தோட்டக்கலைக் கல்லூரி, பெரியகுளம், தேனி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!