எந்தச் சூழ்நிலைக்கும் ஏற்ற குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி

ந்தக் காலத்துக்கும் ஏற்ற சாகுபடி என்றால், அது குதிரைவாலி சாகுபடி தான். குதிரைவாலிப் பயிர், கடும் வறட்சியையும் தாங்கி வளரும். தொடர் மழையிலும் பயிரிடலாம்.

குதிரைவாலிப் பயிர், வறட்சி மற்றும் உவர்ப்புத் தன்மையைத் தாங்கி வளரும். மிகக் குறைந்த நீரே போதுமானது. ஆடி, மார்கழியில் இறவைப் பயிராகவும், ஆடி, புரட்டாசியில் மானாவாரிப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். எல்லா வகை நிலங்களிலும் இதைப் பயிரிடலாம் என்றாலும், செம்மண் நிலமும், இருமண் கலந்த நிலமும் மிகவும் உகந்தவை.

குதிரைவாலி அரிசியில், மற்ற சிறுதானியங்களில் இருப்பதைப் போலவே, அதிகளவில் சத்துகள் உள்ளன. நூறு கிராம் குதிரைவாலி அரிசியில், 6.2 கிராம் புரதம், 65.5 கிராம் மாவுச்சத்து, 2.2 கிராம் கொழுப்பு, 9.8 கிராம் நார்ச்சத்து, 4.4 கிராம் தாதுகள், 11 மி.கி. சுண்ணாம்பு, 280 மி.கி. பாஸ்பரஸ், 15 மி.கி. இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன.

உணவுகள் தயாரிப்பு

சத்தான குதிரைவாலி அரிசியைச் சோறாகச் சமைத்துச் சாப்பிடலாம். அல்லது மாவாக அரைத்து, இட்லி, தோசை, உப்புமா, கூழ், பக்கோடா, முறுக்கு, சீடை போன்ற உணவுகளாகத் தயாரித்தும் உண்ணலாம். கால்நடைகள் மற்றும் பறவைகளின் தீவனமாகவும் இந்தத் தானியம் பயன்படும்.

குதிரைவாலி மற்றும் பிற சிறு தானியங்களில் உள்ள சத்துகள், அவற்றின் மருத்துவக் குணங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் மிகுந்து வருகிறது. அதனால், எதிர்காலத்தில் குதிரைவாலியின் பயன்பாடு மக்களிடம் அதிகமாகும்.

சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்ய, ஏக்கருக்கு ரூ.5,000 செலவு செய்தால், நிகர இலாபமாக, ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கிடைக்கும். எனவே, நிலத்தில் கோடை உழவு செய்து, மண்ணரிப்பைத் தடுத்து, மழைநீரைச் சேமித்து வைத்து, ஆடி மற்றும் புரட்டாசியில் மானாவாரியாகப் பயிரிடலாம்.

அல்லது பாசன வசதி இருந்தால், ஆடி மற்றும் மார்கழியில் இறவைப் பயிராகவும் பயிர் செய்யலாம். விவசாயிகளுக்கு வேண்டிய சிறுதானிய விதைகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்தில் கிடைக்கும்.

அல்லது ஐதராபாத், இராஜேந்திரா நகரில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்தில் கிடைக்கும். தொலைபேசி: 0402 – 4599382.


மா.அவின்குமார், வேளாண்மை அலுவலர், சேலம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!