கால்நடைகளுக்கான உணவில் தாதுப்புகளின் அவசியம்!

னித உணவானாலும், கால்நடை உணவானாலும், இவை இரண்டிலும் தாதுப்புகள் அவசியம் இருக்க வேண்டும். இவை மற்ற முக்கியச் சத்துகளான மாவு, புரதம், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் நீரைப் போல முக்கியமாகும். ஏனெனில், உடல் கட்டமைப்பில் எலும்புகள், பற்கள் உருவாகவும் உறுதியாக இருக்கவும் மற்றும் இனப்பெருக்கம், செரிமானம் நடக்கவும் தாதுப்புகள் தேவை. அன்றாடத் தேவையின் அடிப்படையில் இவற்றை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

மேக்ரோ தாதுகள்: இவை கால்நடைகளின் தினசரி உணவில் அதிகமாக, அதாவது, கிராம் கணக்கில் தேவைப்படும். கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சல்பர் போன்ற தாதுகள், உடலின் எலும்புகள் மற்றும் பற்களின் சரியான வளர்ச்சி மற்றும் உறுதிக்கும், உடல் உறுப்புகளின் இயக்கம் மற்றும் உடலில் நிகழும் வேதி வினைகளுக்கும், பாலுற்பத்திக்கும் அவசியம். கன்றை ஈன்ற ஓரிரு வாரங்களில் கறவை மாடுகளின் இரத்தத்தில் கால்சியம் குறைந்தால் அவை பால் காய்ச்சலால் அவதிப்படும். இதனால், முக்கியக் கறவைக் காலத்தில் பாலின் அளவு குறைந்து பண்ணைப் பொருளாதாரம் பாதிக்கப்படும். 

உணவில் சேர்க்கப்படும் உப்பிலுள்ள சோடியம் மற்றும் குளோரைடு, கால்நடைகளின் இரத்த அழுத்தத்தைச் சமன்படுத்த உதவும். எனவே, கறவை மாடுகளின் தினசரி உணவில் 50 முதல் 100 கிராம் வரை, அவற்றின் உடல் அளவைப் பொறுத்து உப்பு அவசியம் இருக்க வேண்டும். 

மைக்ரோ தாதுகள்: இவை பசுக்களின் தினசரி உணவில், குறைந்தளவில், அதாவது மில்லி கிராம் கணக்கில் தேவைப்படும். உதாரணமாக, நார்ச்சத்துச் செரிப்பதில், துத்தநாகம் முக்கியப் பங்காற்றும். கோபால்ட் மற்றும் காப்பர் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு மிகவும் தேவை. மாங்கனீசு போன்ற சில தாதுகள், உணவு செரிக்கத் தேவைப்படும் முக்கிய நொதிகளை இயக்கும் ஊக்கிகளாகச் செயல்படும். 

கால்நடைகளின் நோயெதிர்ப்புத் தன்மை, தோல் மற்றும் குளம்புகளின் நலன், சரியான தருணத்தில் கருத்தரித்தல் போன்றவற்றில், பாஸ்பரஸ், காப்பர், கோபால்ட், இரும்பு, அயோடின், குரோமியம், செலினியம் போன்ற தாதுகள், வைட்டமின்கள் ஏ, ஈ ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றும்.

மேக்ரோ மற்றும் மைக்ரோ தாதுகள், செரிப்பதிலும், சிறுகுடலில் கிரகிக்கப்படும் அளவு மற்றும் திறனிலும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. கால்நடைகளின் உணவில், குறிப்பிட்ட ஒரு தாது தேவைக்கு அதிகமாக இருப்பின், அது மற்ற தாதுகளுடன் இணைந்து அவற்றின் கிரகிக்கும் திறனைப் பாதிக்கச் செய்யும். பொதுவாக, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் 2:1 என்னும் விகிதத்தில் அளிக்கப்பட வேண்டும். ஆனால், நாம் தினமும் கொடுக்கும் கோதுமை மற்றும் அரிசித் தவிட்டில் பாஸ்பரஸ் மிகுதியாகவும், கால்சியம் மிகக் குறைவாகவும் உள்ளன. 

கால்நடைகளுக்குத் தினமும் கொடுக்கும் புல், வைக்கோல் மற்றும் தட்டையின் மூலம் கிடைக்கும் தாதுகளின் அளவைக் கொண்டே, கால்நடைத் தீவனத்தில் தாதுகளும், உப்பும் சரியான அளவில் சேர்க்கப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுகள், சிறுகுடலில் நன்கு கிரகிக்க, வைட்டமின் டி சரியான அளவில் தேவை. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டே கால்நடைத் தீவனம் தயாரிக்கப்படுகிறது.

எனவே, சிறந்த கால்நடைத் தீவனத்தைத் தேர்ந்தெடுத்தால், கறவை மாடுகளுக்கு அன்றாடம் தேவையான தாதுகளை வழங்கி, பால் உற்பத்தியை அதிகரிப்பதுடன், தக்க சமயத்தில் கருத்தரிப்பையும் உறுதி செய்து பண்ணைப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். 


தொழில்நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை,

கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,

பெருந்துறை- 638 052,  ஈரோடு மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!