கால்நடை இனப்பெருக்கத்தில் மூலிகை மருத்துவம்!

றவை மாடு ஆண்டுக்கொரு முறை ஈன வேண்டும். இதில், கால தாமதம் ஏற்பட்டால், பண்ணை இலாபத்தில் இயங்காது. எனவே, இதைச் சரிசெய்ய வேண்டும். சரியான கால இடைவெளியில் ஈனாத நிலை மலட்டுத் தன்மை எனப்படும்.

மூலிகை மருத்துவம்

கால்நடை வளர்ப்பில் நவீன சிகிச்சை முறைகள் இருந்தாலும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், மரபுசார் மூலிகை சிகிச்சையையும் முன்னெடுத்து வருகிறது. இதற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பும் உள்ளது. எளிதாக, விலை குறைவாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, பக்க விளைவில்லாத சிகிச்சையைச் செய்யலாம்.

இனப்பெருக்கச் சிக்கல்கள்

நஞ்சுக்கொடி விழாமலிருத்தல்: ஒரு மாடு ஈன்று, 2-12 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேறி விடும். சத்துக்குறை அல்லது நோய்த் தொற்று இருந்தால், நஞ்சுக்கொடி வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதை மூலிகை சிகிச்சை மூலம் தீர்க்கலாம். இதற்கு, எள் 500 கிராம், எள் புண்ணாக்கு 500 கிராம், கருப்பட்டி ஒரு கிலோ தேவை.

பயன்படுத்தும் முறை: இவற்றை ஒன்றாக இடித்து, கைப்பிடி உருண்டைகளாக உருட்டி மாட்டுக்குத் தரலாம். அதிலிருந்து இரண்டு மணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேறா விட்டால், ஒரு கிலோ வெண்டைக்காயில் அரை கிலோ கருப்பட்டியைக் கலந்து தரலாம். இதன் பிறகும் சிக்கல் நீடித்தால் மருத்துவரின் உதவியை நாடலாம்.

சினைப் பிடிப்பில் சிக்கல்: மாட்டின் வயது மற்றும் உடல் எடையைப் பொறுத்து, சினைப்பிடிப்பு இருக்கும். மேலும், உணவு மற்றும் சத்துக்குறை, கருப்பை நோய் மற்றும் ஒவ்வாமை மூலம், கருத்தரிப்பில் சிக்கல் ஏற்படும். இதைத் தவிர்க்க, பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தை, தேவையான அளவில் சீராகக் கலந்து தர வேண்டும். மேலும், மூலிகை சிகிச்சையும் செய்யலாம்.

பருவம் வந்ததில் இருந்து நான்கு நாட்கள் வரை, காலை, மாலையில் தலா ஒரு முள்ளங்கியில் உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தர வேண்டும். 5-8 நாட்கள் வரை, காலை, மாலையில் தலா ஒரு சோற்றுக் கற்றாழை மடலில் உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரையைத் தடவித் தர வேண்டும். 9-12 நாட்கள் வரை, காலை, மாலையில் தலா நான்கு கைப்பிடி முருங்கை இலையை அரைத்து உருட்டித் தர வேண்டும்.

13-16 நாட்கள் வரை, காலை, மாலையில் தலா நான்கு கைப்பிடி பிரண்டையை அரைத்து உருட்டித் தர வேண்டும். 17-20 நாட்கள் வரை, காலை, மாலையில், தலா நான்கு கைப்பிடி கறிவேப்பிலையை அரைத்து உருட்டித் தர வேண்டும். இதைத் தொடர்ந்து வரும் சினைப் பருவத்தில் கருவூட்டல் செய்யலாம்.

கருப்பை வெளித் தள்ளுதல்: சினை முற்றிய மற்றும் ஈன்ற மாடுகளில் இச்சிக்கல் ஏற்படும். இதை மூலிகை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இதற்கு, கற்றாழைக் கூழ் 200 கிராம், மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை, தொட்டால் சிணுங்கி இலை ஒரு கைப்பிடி தேவை.

செய்முறை: கற்றாழைக் கூழை, பிசுபிசுப்புத் தன்மை குறையும் வரை நீரில் கழுவ வேண்டும். அடுத்து, ஒரு லிட்டர் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை இட்டு, அரை லிட்டராகும் வரை கொதிக்க விட்டு ஆறவிட வேண்டும். தொட்டால் சிணுங்கி இலையை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்துதல்: வெளித்தள்ளிய கருப்பையின் மேலே, சோற்றுக் கற்றாழை மற்றும் மஞ்சள் நீரை அடிக்கடி தெளிக்க வேண்டும். கற்றாழைக் கூழ் உலர்ந்ததும், தொட்டால் சிணுங்கி விழுதைப் பூச வேண்டும். இதை, சிக்கல் குணமாகும் வரை செய்ய வேண்டும்.


சா.ஷேக்முகமது, மரு. அ.இளமாறன், மரு.வ.ரங்கநாதன், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!