வேளாண் வாழ்க்கையை விவரிக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!
கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018
கோணிச் சாக்கு தான் குடை; அடைமழையிலும் அயராத வேலை; பச்சைச் செடிகள், மாட்டுச் சாணம் தான் நிலத்துக்கு உரம்; பள்ளிப் பாடங்களில் தவிர, வெளியே ரசாயனம் என்னும் சொல் பேசப்படாத காலம்; மண்வளம், நீர்வளம் நிறைந்த காலம்; நிலமெங்கும் வேலை செய்யும் ஆட்கள்; முன்னேரு எருதுக்கெல்லாம் என்னென்னெ அடையாளம், நெத்திக்குச் சிட்டிகளாம் நிலம் பார்க்கும் கண்ணாடி என, காளைகளில் கலப்பைப் பூட்டி உழுத காலம்; உள்ளார் உழவடிக்க ஊர்க்குருவி நாத்தரிக்க நாரை பரம்படிக்க நட்டுவாடி கட்டப் புள்ளே என, குலவையிட்டுப் பெண்கள் ஆடிப்பாடி நடவு நட்ட காலம்;
வாய்க்கால் வரப்புச்சாமி வயக்காட்டுப் பொன்னுச்சாமி களையெடுக்கும் பெண்களுக்குக் காவலுக்கு வந்த சாமி என, கேலி, கிண்டலுடன் பெண்கள் களையெடுத்த காலம்; எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசுமை பூமியெங்கும் படர்ந்து கிடந்த காலம்; ஊரோரம் கதிரறுத்து உரலைப் போலக் கட்டுக் கட்டி, தூக்கிவிடு கொத்தனாரே தூரக் களம் போய்ச்சேர என, கதிரறுப்பு நடந்த காலம்; எல்லாமே இயற்கை விவசாயம்.
இப்படி, அந்தக் காலத்தில் இருந்த விவசாய நிலையைப் பற்றி சொன்னவர், இந்தக் காலத்து விவசாயத்துடன் ஒப்பிட்டு தன்னுடைய அனுபங்களையும் கலந்து நிறையப் பேசினார், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தான் அவரது சொந்த ஊர். அதனாலேயே, அவருடைய பெயரோடு, நத்தமும் அழுத்தமாக ஒட்டிக் கொண்டது. திராவிட இயக்க பூமியாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும் நத்தத்தில் தொடக்கக் காலம் தொட்டு, தன்னைத் தீவிர அ.தி.மு.க.,காரராக அடையாளப்படுத்திக் கொண்ட விஸ்வநாதனின், வேகமான அரசியல் நடவடிக்கைகளும், அவரைப் பற்றி உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தலைமை மீதான விசுவாச அறிக்கையும், போயஸ் தோட்டம் வரை, யாருடைய சிபாரிசும் இன்றி அவரை இலவசமாகவே கொண்டு சேர்த்தன.
பார்த்த மாத்திரத்தில், ‘உங்கள் விசுவாசச் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் அனைத்தும் எனக்கு வந்து சேர்ந்து விட்டன. இதே விசுவாசத்தோடு, தொடர்ந்து கட்சிப் பணியாற்றுங்கள். உங்களுக்கான ஏற்றம் பற்றியெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக இருந்தவருமான ஜெயலலிதா, விஸ்வநாதனிடம், முதல் சந்திப்பிலேயே சொன்னபோது, ஆச்சரியத்தில் உறைந்து போனார்.
அதன்பின், ஜெயலலிதாவின் விசுவாசப் படையில் இருந்தவர்களில் நத்தம் விஸ்வநாதன் முக்கியமானவரானார். 1999-ல், முதல் முறையாகத் தமிழகச் சட்டப்பேரவை உறுப்பினரானார். அந்தக் காலக்கட்டத்தில், கட்சியின் மற்ற மூன்று எம்.எல்.ஏ.க்களோடு சேர்ந்து, நத்தம் விஸ்வநாதன், தி.மு.க.வினருக்குக் கொடுத்த அதிர்ச்சி வைத்தியங்கள் ஏராளம். இந்த எல்லாமே கட்சியின் பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா ரசித்துப் பாராட்டியவை.
தொடர்ச்சியாக, நத்தம் தொகுதியில் விஸ்வநாதனையே போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. அடுத்தடுத்து, நத்தம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவருக்கு, 2011-ல், அமைச்சராகும் வாய்ப்பையும் தந்தார். ஐந்தாண்டுகள் மின்துறை மற்றும் கலால்துறை அமைச்சராக இருந்தவர், ஜெயலலிதா அமைச்சரவையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த நிலையில் மிக முக்கியமானவராக இருந்தார். ஒரு கட்டத்தில், மூத்த அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பழனியப்பன் ஆகியோரோடு நால்வர் அணியாக இருந்து செயல்பட்டு, கட்சியை வழிநடத்தும் மிக முக்கியப் பொறுப்பிலும் இருந்து செயல்பட்டார். கடைசி வரையில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாகச் செயல்பட்டார். காலம் ஏற்படுத்திய விபத்தால், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டத்திலேயே ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டதால், வெற்றி வாய்ப்புப் பறிபோனது.
இருந்தாலும், அதே வேகத்தோடு இன்றைக்கும் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் நத்தம் விஸ்வநாதன். அவரை, நமது பச்சை பூமி இதழின் ‘வி.ஐ.பி. விவசாயம்’ பகுதிக்காகத் தொடர்பு கொண்டபோது, மிகவும் ஆர்வத்துடன், அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள வேம்பார்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று அங்கே சென்ற நாம், விசாலமான அந்த வீட்டின் முதல் கதவைத் திறந்ததுமே, காங்கேயம் மாடு ஒன்றும், கன்றுக் குட்டியும் நம்மை வரவேற்றன.
அதைத் தொடர்ந்து நம்மை வரவேற்ற அவர், ‘தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே பேசலாமே’ என்றதும், சரியெனப் புறப்பட்டோம். கார் தோட்டத்தை நோக்கிச் சென்றது. திண்டுக்கல் மாவட்டத்தையும் தாக்கியதால் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பை, போகும் வழியிலேயே உணர முடிந்தது. சாலையோரங்களில் புளிய மரங்களும், தென்னை மரங்களும் சாய்ந்து கிடந்தன. சுமார் ஐந்து நிமிடப் பயணத்தில் ஊருக்கு வெளியே இருந்த அவரது தோட்டத்தை அடைந்தோம்.
தோட்டத்தில் வளர்ந்த மாமரங்களும், இளம் மாமரங்களும், தென்னை மரங்களும் இருந்தன. அவற்றில் இளம் மாமரங்கள் பல, கஜா புயலால் பாதிக்கப்பட்டுச் சாய்ந்து கிடந்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலின் பாதிப்பைப் பற்றி நம்மிடம் சொல்லிக் கொண்டே வந்தவர், தோட்டக்காரர்களிடம், பாதிக்கப்பட்ட இளம் மாமரங்களை எடுத்து விட்டு, புதிய கன்றுகளை நடுமாறு கூறினார். பாதியளவில் பாதிக்கப்பட்டிருந்த மாமரங்களை, இருபுறமும் மரக்கட்டைகளால் முட்டுக் கொடுத்து வைத்திருந்தனர். அப்படியே அங்கிருந்த மேடான பகுதியில் ஏறினார். அதில் ஏறியதும், அவரது தோட்டம் முழுவதும் நம்முடைய கண்களுக்கு நன்றாகத் தெரிந்தது. அந்த மேட்டில் தான் தோட்டக்காரர்கள் தங்குவதற்கான வீடுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அங்கிருந்து தோட்டத்தைப் பார்த்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
“எங்கள் பரம்பரைத் தொழில் விவசாயம் தான். தாத்தா காலத்தில் புளிய மரங்கள் இருந்தன. இதுபோக மானாவாரியாக நிலக்கடலை முதலியவற்றைப் பயிர் செய்து வந்தனர். அப்பா காலத்திலும் அதே தான். ஆனால், கடந்த சில வருடங்களாக இங்குக் கடுமையான வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் சுமார் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது. அதனால் வறட்சியைத் தாங்கும் வகையில், சில வருடங்களுக்கு முன்பு வரையில் புளிய மரங்களை வைத்திருந்தோம். ஆனால், அந்த மரங்களும் சரியாகக் காய்க்காததால் அவற்றை எடுத்து விட்டோம்.
தற்போது மாமரங்களையும், தென்னை மரங்களையும் வைத்துள்ளோம். எங்களுக்கு 25 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில், சுமார் 1,000 தென்னை மரங்களும், 500 மாமரங்களும் உள்ளன. இது புளிய மரங்களை விட, ஓரளவு இலாபம் தருவதாக இருக்கிறது. மாம்பழத்தில் கல்லாமை, காசா என்ற இரு ரகங்களை மட்டும் வைத்திருந்தோம். தற்போது இமாம்பசந்த் என்ற ரகத்தையும் வைத்துள்ளோம்.
எங்கள் நிலத்தில், மாட்டுச் சாணம், இழை தழைகள், குப்பை என, இயற்கை உரங்களை இட்டு, இயற்கை விவசாயம் தான் செய்து வருகிறோம். மாமரங்களுக்கு மட்டும் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது, பூக்கள் பூப்பதற்கு முன், பூத்த பின் என, ரசாயன மருந்தை அடிக்கிறோம். இல்லையென்றால், பூச்சிகள் தாக்கி விளைச்சலை முற்றிலும் கெடுத்துவிடும். பூச்சித் தாக்குதலில் இருந்து தப்பிக்கவே இந்த மருந்தைப் பயன்படுத்துகிறோம். எதிர்காலத்தில் இயற்கைப் பூச்சி விரட்டியைப் பயன்படுத்திப் பார்க்கலாம் என இருக்கிறோம்.
தாத்தா, அப்பா காலத்தில் நடந்ததெல்லாம் இயற்கை விவசாயம் தான். ரசாயன உரமே கிடையாது. பெரியாறு பாசனப் பகுதிகளுக்கு நத்தம் பகுதியில் இருந்து தான் பசுந்தாள் செடிகளை அறுத்துச் செல்வார்கள். ஆனால், இப்போது அதெல்லாம் இல்லை. அந்தக் காலத்தில் எங்குப் பார்த்தாலும் ஆட்கள் வேலை செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு பக்கம் உழுவார்கள்; இன்னொரு பக்கம் நடுவார்கள்; ஒரு பக்கம் களையெடுப்பார்கள்; இன்னொரு பக்கம் அறுவடை செய்வார்கள். இப்படி வேலைகள் நடந்து கொண்டே இருக்கும். இன்று தோட்டங்களில் ஆட்களையே பார்க்க முடியவில்லை. உழவு மாடுகளையும் பார்க்க முடியவில்லை’’ என்று ஆதங்கப்பட்ட நத்தம் விஸ்வநாதன், பின்புறம் மிகவும் பள்ளமாக இருந்த பகுதியைச் சுட்டிக்காட்டி, “இது எங்கள் நிலத்துக்குத் தேவையான பாசனக் கண்மாய். மழை பெய்தால், இங்கு நீர் தேங்கும். இந்த நீரைப் பயிர்களுக்குப் பாய்ச்சுவோம். ஆனால், தற்போது போதுமான மழை இல்லாததால் வறண்டு கிடக்கிறது.
மாம்பழங்களில் பிரசித்திப் பெற்றது சேலத்து மாம்பழம். இதற்கு அடுத்த இடம் நத்தம் மாம்பழங்களுக்குத் தான். சுவையாக இருக்கும். எடை குறைவாக இருக்கும். ஆனால், கெட்டித் தன்மையுடன் இருக்கும். எனவே, இந்த மாம்பழம் நன்கு பழுத்தாலும், 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அதனால் வியாபாரிகள் விரும்பி வாங்கிச் செல்வார்கள். மாம்பழப் பருவத்தில் நத்தம் பகுதியிலிருந்து மட்டும் தினமும் சுமார் நூறு லாரி மாம்பழங்கள் வெளியூர்களுக்குச் செல்லும். சாதாரணமாக ஒரு லாரி மாம்பழங்கள் என்றால், 15 டன் இருக்கும். பெரிய லாரியென்றால், 30 டன் மாம்பழங்களை ஏற்றலாம்’’ என்று பேசியவாறே தோட்டத்துக்குள் நடந்து சென்றார்.
அங்கிருந்த மிகப்பெரிய கிணற்றைக் காட்டி, “தற்போது இங்கு ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துள்ளோம். அந்தக் கிணறுகளில் இருந்து நீரை எடுத்து, இந்தக் கிணற்றுக்குள் விட்டு, இதிலிருந்து நீரையெடுத்து, சொட்டுநீர்ப் பாசன முறையில் மரங்களுக்குப் பயன்படுத்துகிறோம்’’ என்றவர், அங்கிருந்த மின் மோட்டார், தண்ணீர்த் தொட்டி முதலியவற்றை நம்மிடம் காட்டினார். அப்போது அங்கிருந்த தொட்டியில் பாசி படர்ந்திருப்பதைப் பார்த்த அவர், உடனே, தோட்டக்காரர்களை அழைத்து, அதைச் சுத்தம் செய்யுமாறு கூறினார்.
தொடர்ந்து, “தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை அறிந்து, அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். முன்பெல்லாம் கிணற்றைத் தோண்டினால் முப்பது அடியிலேயே நீர் வந்து விடும். ஆனால், இப்போது அப்படிப்பட்ட நிலையில்லை. ஆயிரம் அடியிலும் கூட, நீர் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை நிலை.
நான் சின்னப் பையனாக இருந்த காலத்தில் வாரக் கணக்கில் விடாமல் அடைமழை பெய்யும். அந்தக் காலத்தில் கோணிச் சாக்கு தான் கிராமத்து மக்களுக்குக் குடை. அதை மேலே போட்டுக் கொண்டு மழையில் நனைந்தபடியே வேலை செய்வார்கள். இப்படி விடாமல் பெய்யும் மழையால், விவசாயம் கொஞ்சம் பாதித்தாலும், நீர்வளம் குறையாமல் இருக்கும். தற்போது மழை சரியாகப் பெய்யாமல் போவதால் விவசாயம் நலிவடைந்து வருகிறது.
மழை மட்டும் சரியாகப் பெய்தால் விவசாயத்தைப் போன்ற லாபமுள்ள தொழில் வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும், எத்தனை தொழில்கள் செய்தாலும், விவசாயத்தைப் போல மன நிறைவையும், நிம்மதியையும் அவற்றால் தர முடியாது. அதனால், வெளிவேலை இல்லாத நாட்களில் தினமும் மாலை நேரத்தில் தோட்டத்துக்கு வந்து விடுவேன். எவ்வளவு பரபரப்பு, மன உளைச்சல் இருந்தாலும், தோட்டத்துக்கு ஒருமுறை வந்து போனால், எல்லாம் சரியாகி விடும்; மனம் அமைதியாகி விடும்.
நிலத்தடி நீர் கீழே போய் விட்டதற்கு மழை மட்டும் காரணம் இல்லை. நீர்ப்பிடிப்புப் பகுதிகளை எல்லாம் நாம் அழித்து அக்கிரமித்து விட்டதும் தான். மழைநீரைச் சேமித்து, நிலத்தடி நீரைக் காக்க வேண்டும். அதனால் தான் மாண்புமிகு அம்மா அவர்கள், ‘மழைநீர்ச் சேமிப்புத் திட்டம்’ என்னும் அருமையான திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்தினார்கள். அதைப்போல, இருக்கும் இயற்கை வளங்களை அழிக்காமல் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.
அதைப்போல, சீமைக்கருவேல மரங்கள், பார்த்தீனியச் செடிகள் விவசாயத்துக்கும், மனித குலத்துக்கும் மிகப் பெரிய எதிரிகள். சீமைக்கருவேல மரம் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழக்கூடியது. ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் இந்தச் சீமைக்கருவேல மரங்கள் தான் உள்ளன. இவற்றைத் தான் அங்கிருந்து வெட்டியெடுத்து, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளுக்குக் கொண்டு செல்கிறார்கள்.
விவசாயம் நலிந்து வருவதற்கு வேலையாட்கள் பற்றாக்குறையும் ஒரு காரணம். முன்பிருந்ததைப் போல் இப்போது விவசாய வேலைகளைச் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. இது இன்றைய விவசாயத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை. விவசாய வேலையில் கிடைக்கும் சம்பளத்தை விட, மற்ற வேலைகளைச் செய்தால் அதிகச் சம்பளம் கிடைக்கிறது. அதனால் அப்படிப்பட்ட வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். அந்தளவுக்குக் கூலி கொடுத்தால் விவசாயிகளுக்குக் கட்டுபடியாகாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, அரசு இன்றைக்குச் செயல்படுத்தி வரும் 100 நாள் வேலைத் திட்ட ஆட்களை விவசாய வேலைகளுக்கும் பயன்படுத்தலாம்’’ என்று பேசிக்கொண்டே வரவும், தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து முடிக்கவும் சரியாக இருந்தது.
அப்படியே அங்கிருந்து அருகிலிருந்த தென்னந் தோப்புக்குச் சென்றோம். அங்கிருந்த தென்னை மரங்களைப் பார்த்துக்கொண்டே வந்தவர், அங்கிருந்த தோட்டக்காரர்களிடம், தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது குறித்துப் பேசிக் கொண்டிருக்க, வேலையாள் ஒருவர், இளநீரை வெட்டிக் கொடுத்தார். அதை அருந்தி விட்டு, அப்படியே மீண்டும் வீட்டுக்குத் திரும்பினோம்.
வீட்டுக்குள் கார் நுழைந்ததும் அங்கிருந்த காங்கேயம் பசுவும், கன்றும் எழுந்து நிற்க, காரை விட்டுக் கீழே இறங்கியவர், அவற்றுக்கு அங்கிருந்த பசுந்தீவனத்தை எடுத்துப் போட்டார். அப்போது அவரது துணைவியார் செல்வராணி அங்கு வந்து இரையைப் போட்டு, வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துக் கொண்டே, “இந்த காங்கேயம் பசு கறப்பது கொஞ்சம் தான் என்றாலும், இந்தப் பால் மிகவும் சத்தானது. இந்த மாட்டின் தாய் தோட்டத்தில் உள்ளது. இது மூன்றாவது தலைமுறைக் கன்று’’ என்று சொல்ல, இடைமறித்த விஸ்வநாதன், “என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்’’ என்றார்.
நம் நாட்டு விவசாயத்தில் ஆண்களின் பங்கை விடப் பெண்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். அதாவது, வேலை செய்வதிலும் சரி; தொழில் நுட்பங்களை மேலாண்மை செய்வதிலும் சரி, அவர்களின் பங்களிப்புக்கு நிகர் அவர்களே தான். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் துணைவியாரும் இயற்கை விவசாயம், மழைநீர் சேகரிப்பின் அவசியம், சுற்றுச்சூழல் என, சகல நுட்பங்களையும் அறிந்தவராக இருக்கிறார் என்பதை, அவருடைய பேச்சிலிருந்து அறிய முடிந்தது.
மொத்தத்தில் இந்தச் சந்திப்பின் மூலம், நத்தம் விஸ்வநாதனின் விவசாயப் பற்று, குறிப்பாக இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வம், நாட்டு மாடுகள் மீதான விருப்பம் ஆகியவற்றை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. வெள்ளை வேட்டி அரசியல் வாழ்க்கையில் இருந்தாலும், விவசாய மண் அந்த வேட்டியில் ஒட்டுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும் நல்ல மனிதருடன், அழகிய இயற்கைச் சூழலில், நான்கைந்து மணி நேரம் உரையாடிய மன நிறைவுடன், அவருக்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.
மு.உமாபதி
சந்தேகமா? கேளுங்கள்!