வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!

வம்பன் 8 IMG 20210212 WA0012 e1614296751284

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

ன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். உலகின் மொத்தப் பயறு வகை சாகுபடிப் பரப்பில் 32% இந்தியாவில் உள்ளது. பயறு வகைகளில் உளுந்து முக்கியமானது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுதும் தனிப்பயிராக அல்லது கலப்புப் பயிராகப் பயிரிடப்படும் உளுந்து, குறுகிய காலத்தில் அதிக இலாபத்தைத் தரக்கூடியது.

தமிழகத்தில் 3.65 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. சராசரி மகசூல் எக்டருக்கு 851 கிலோ ஆகும். உளுந்தில் மகசூல் பாதிக்கக் காரணமாக இருப்பது மஞ்சள் தேமல் நோய். நச்சுயிரியால் ஏற்படும் இலை நெளிவு நோயும் இப்போது அதிகமாகி வருகிறது. 

இந்நோய்களின் தாக்குதலால் 60-80% மகசூல் பாதிக்கிறது. இந்த நச்சுயிரி நோய்களை வெள்ளை ஈக்கள் பரப்புகின்றன. பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தாங்கி வளரும் திறனை வளர்த்துக் கொள்ளும் வெள்ளை ஈக்கள் இந்த மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை.

மேலும், இந்த மருந்துகளால் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிவதுடன், சுற்றுச்சூழலும் மாசடைகிறது. எனவே, இந்நோய்களைத் தாங்கி வளரும் உளுந்து வகையைப் பயிரிட வேண்டியது அவசியமாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு மஞ்சள் தேமல் நோய் மற்றும் இலை நெளிவு நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட வம்பன் 8 என்னும் புதிய உளுந்தை, புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசியப் பயறு வகை ஆராய்ச்சி மையம் 2016 ஆம் ஆண்டில் வெளியிட்டது.

சிறப்பியல்புகள்

இந்த இரகமானது வம்பன் 3 மற்றும் விபிஜி 04-008 ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது. வயது 65-70 நாட்கள். ஒரு எக்டரில் 900 கிலோ உளுந்து கிடைக்கும்.

எக்டருக்கு 804 கிலோ மகசூலைத் தரும் வம்பன் 6, எக்டருக்கு 793 கிலோ மகசூலைத் தரும் கோ.6 ஆகியவற்றை விட, 12 மற்றும் 14% மகசூலைக் கூடுதலாகத் தரும்.

தமிழ்நாட்டில் நீலகிரி, கன்னியாகுமரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஆடி, புரட்டாசி மற்றும் மார்கழி-தைப்பட்டத்தில் பயிரிடலாம்.

திருச்சி உப்பிலியாபுரத்தில் எக்டருக்கு 2050 கிலோ மகசூல் கிடைத்துள்ளது. அகில இந்திய ஒருங்கிணைந்த பயறு வகை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 2011-12 முதல் 2014-15 வரை வெவ்வேறு மண்டலங்களில் ஆய்வு செய்ததில் சராசரியாக எக்டருக்கு 970 கிலோ மகசூல் கிடைத்துள்ளது.

இது தேசிய மற்றும் மற்ற மண்டல அளவிலான ஒப்பீட்டு இரகங்களைவிட 9-61% கூடுதலாகும்.

ஒருமித்துக் காய்ப்பதால் இயந்திர அறுவடைக்கு ஏற்றது. சாம்பல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது. இதில் காய்ப்புழு மற்றும் பூச்சிகளின் தாக்கமும் குறைவாக உள்ளது. புரதம் 21.9%, அராபினோஸ் 7.5% உள்ளன. நல்ல மாவுக்கட்டு இருக்கும்.

சாகுபடி

எல்லா மண்ணிலும் விளையும் வம்பன் 8 உளுந்தைப் பயிரிட, நிலத்தை நன்கு புழுதியாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன் எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். ஆடிப்பட்டம், புரட்டாசிப் பட்டம், தைப்பட்டம், சித்திரைப் பட்டம் ஆகிய பட்டங்களில் பயிரிடலாம். எக்டருக்கு 20 கிலோ விதை தேவைப்படும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசிம் அல்லது திரம் அல்லது  4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் எடுத்து, விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பூசணக் கொல்லியில் நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 24 மணி நேரம் கழித்துத் தான் உயிர் உரங்களுடன் நேர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு எக்டருக்கான விதைகளை 600 கிராம் ரைசோபியம் மற்றும் 600 கிராம் பாஸ்போபாக்டீரியாவில் நேர்த்தி செய்து 15-30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.

அல்லது நிலத்தில் 2 கிலோ ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியாவை, 25 கிலோ தொழுவுரம் அல்லது மணலுடன் கலந்து கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்.

30×10 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும். முளைக்காத இடங்களில் ஊற வைத்த விதைகளை 5-7 நாட்களில் விதைக்க வேண்டும்.

உர நிர்வாகம்

விதைப்பதற்கு முன், பரிந்துரைக்கப்பட்ட உரங்களை அடியுரமாக இட வேண்டும். இறவையில் பயிரிட எக்டருக்கு, தழை:மணி:சாம்பல்:கந்தகம் ஆகிய உரங்களை, 25:50:25:20 கிலோ வீதமும், மானாவாரியில் பயிரிட எக்டருக்கு, 12.5:25:12.5:10 கிலோ வீதமும் இடவேண்டும்.

சூப்பர் பாஸ்பேட்டை இடவில்லையெனில், ஜிப்சம் மூலம் கந்தகத்தை இடலாம். 25 கிலோ ஜிங்க் சல்பேட்டையும் அடியுரமாக இட வேண்டும்.

த.வே.ப.க. பயறு அதிசயம்

பயறு வகைகளுக்குத் தேவையான சத்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அடங்கிய த.வே.ப.க. பயறு அதிசயம் என்னும் இடுபொருளை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. இது டி.ஏ.பி. கரைசலுக்கு மாற்றாகும்.

நீரில் இட்டதும் கரைந்து விடும் இந்தப் பயறு அதிசயத்தை, செடிகள் பூக்கும் போது காலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால் 20% மகசூல் கூடுதலாகக் கிடைக்கும். இதைத் தெளிக்கா விட்டால், டி.ஏ.பி.கரைசலைத் தெளிக்கலாம்.

டி.ஏ.பி. கரைசல்

ஒரு எக்டருக்குத் தேவையான 2% டி.ஏ.பி. கரைசலைத் தயாரிக்க, 10 கிலோ டி.ஏ.பி. உரத்தை 25 லிட்டர் நீரில் இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். பின்பு அதிலிருந்து தெளிந்த கரைசலை எடுத்து, 500 லிட்டர் நீரில் கலந்து காலை அல்லது மாலையில் இலையில் நன்கு படும்படி, பூக்கும் பருவத்தில் ஒருமுறையும் மீண்டும் 15 நாள் கழித்தும் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பாசனம்

இறவைப் பயிருக்கு விதைத்ததும் பாசனம் செய்ய வேண்டும். பிறகு மூன்று நாள் கழித்து உயிர்நீர் கொடுக்க வேண்டும். அடுத்து, மண்வாகைப் பொறுத்துப் பாசனம் செய்யலாம். பூக்கும் பருவம் முதல் காய் முற்றும் வரை நிலம் காயாமல் இருக்க வேண்டும்.

வறட்சிக் காலத்தில் 0.5% பொட்டாசியம் குளோரைடு கரைசலைத் தெளிக்கலாம்.

களை மேலாண்மை

இறவையில் விதைத்த மூன்றாம் நாள் நிலம் ஈரமாக இருக்கும் போது, எக்டருக்கு 3.3 லிட்டர் வீதமும், மானாவாரியில் 2.5 லிட்டர் வீதமும் பென்டிமெத்தலின் என்னும் களைக்கொல்லியைத் தெளிக்கலாம். அடுத்து, விதைத்த 20 ஆம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.

அல்லது எக்டருக்கு 50 கிராம் வீதம் குயிஸ்லோபாப் ஈதைல் அல்லது இமாஸிதபர் வீதம் தெளிக்கலாம். களைக்கொல்லியைத் தவிர்ப்பது நல்லது. இதைத் தெளிக்காத நிலத்தில், விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாளில் களைகளை அகற்ற வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

காய்த்துளைப்பான் அதிகச் சேதத்தை ஏற்படுத்தினால் 5% வேப்பங்கொட்டைச் சாறு அல்லது எக்டருக்கு 333 மில்லி இன்டாக்ஸ்கார்ப்பைத் தெளிக்கலாம். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் கார்பன்டசிம் வீதம் கலந்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

அறுவடை

எண்பது சதக் காய்கள் முற்றியதும் செடியுடன் அறுத்துக் காய வைத்து விதைகளைப் பிரித்து, 10% ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். சேமிப்பின் போது வண்டுகள் தாக்காமலிருக்க, 100 கிலோ விதைக்கு ஒரு கிலோ வேப்ப எண்ணெய் அல்லது ஒரு கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் வீதம் கலந்து வைக்கலாம்.


வம்பன் 8 DR.RAMAKRISHNAN

முனைவர் ப.இராமகிருஷ்ணன்,

முனைவர் நா.மணிவண்ணன், தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம், 

வம்பன், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!