My page - topic 1, topic 2, topic 3

மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்!

அனுபவத்தைப் பேசும் தங்கம் தென்னரசு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

ட்சியைச் சேர்ந்தவர் என்னும் நிலையைக் கடந்து, தி.மு.க. தலைவராக விளங்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் இடம் பிடித்தவர் முன்னாள் அமைச்சர் வி.தங்கப்பாண்டியன். அறப்பணியான ஆசிரியர் பணியிலிருந்து, அரசியல் பணிக்கு வந்தவர். 1989-ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இவர், 1996-ல் நடந்த தேர்தலிலும் வெற்றிப் பெற்று, தமிழக வணிகவரித் துறைக்கு அமைச்சரானார்.

ஆனால், அமைச்சரான மிகக் குறுகிய காலத்திலேயே, அதாவது, 1997-ம் ஆண்டு, இவர் காலமானதைத் தொடர்ந்து, இளைஞர் ஒருவர், தமிழக அரசியலில் தடம் பதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த இளைஞர் தான் தங்கம் தென்னரசு.

தங்கப்பாண்டியனின் புதல்வரான இவர், தனியார் நிறுவனப் பொறியாளர் பணியிலிருந்து விலகி, அருப்புக்கோட்டைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளராக நின்று, தந்தையின் வெற்றியைத் தக்க வைத்தார்; இளவயது உறுப்பினராகத் தமிழகச் சட்டப்பேரவையில் நுழைந்து, தன் தொகுதி மக்களுக்கான பணிகளை, தந்தை விட்டுச் சென்ற இடத்திலிருந்து தொடர்ந்தார்.

அடுத்து, 2006-ம் ஆண்டில் அருப்புக்கோட்டைத் தொகுதியில் மக்களின் நல்லாதரவைப் பெற்ற தங்கம் தென்னரசு, தி.மு.க. அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறைக்கு அமைச்சரானார். 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திருச்சுழித் தொகுதியில் வெற்றியடைந்த இவர், தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து மக்கள் பணியைச் செய்து வருகிறார்.

அரசியல்வாதிகளுக்கே உரிய தோரணை, உரக்கப் பேசுதல், அடுத்தவரை அடக்கியாளும் மனப்பான்மை என எந்த அடையாளமும் இல்லாத, எளிமையான, மென்மையான மனிதர். யாரையும், தன்னை நோக்கி ஈர்க்கும்  முகபாவம்; அகம்பாவம் துளியும்  இன்றி யாரிடமும் எளிதில் பழகிக் கொள்ளும் இனிய குணம், நேர்த்தியான செயல்திறன் ஆகியவற்றால் பண்பட்ட அரசியல்வாதியாக உயர்ந்து நிற்கும் தங்கம் தென்னரசுவின் செயல்பாட்டுத் திறனுக்கு ஒரேயொரு விஷயத்தை மட்டும் உதாரணமாகச் சொல்ல முடியும்.

தென்னிந்தியாவிலேயே பெரிய, சிறந்த நூலகம் எனச் சொல்லப்படும் சென்னை, கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், இவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது தான் கட்டப்பட்டது. தனது அறிவுத்திறன் மற்றும் கட்டடக் கலையில் தனக்குள்ள நுண்ணறிவு, நிர்வாகத் திறமை எல்லாவற்றையும் ஒருசேரச் செலுத்திக் கட்டப்பட்ட கட்டடம் அது. சென்னையின் புதியதோர் அடையாளமாக எழுந்து நிற்கும், அந்த நூலகத்தின் ஒவ்வொரு பகுதியும், இருவர் பெயரைச் சொல்லும். ஒருவர்-மறைந்த முதல்வர் கருணாநிதி. மற்றொருவர்-தங்கம் தென்னரசு.

இவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது தான், தமிழகப் பள்ளிக் கல்வியின் தரம் தாழ்ந்து போயிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. ‘மத்திய அரசின் பள்ளிக்கல்விப் பாடத் திட்டங்களுக்கு இணையாக, மாநிலப் பள்ளிக் கல்வியின் தரம் இல்லை’ என்று விமர்சிக்கப்பட்டது. இதையொரு சவாலாக ஏற்றுத்தான், சமச்சீர்க் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதற்கு உறுதுணையாக இருந்து சமச்சீர்க் கல்வித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தியவர் தங்கம் தென்னரசு.

அதுமட்டுமல்ல; பள்ளிக்கல்வித் துறையில் நிறையச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, பலமுறை மத்திய அரசின் பாராட்டைப் பெற வைத்தவர். இப்படிப்பட்ட திறன்களுக்குச் சொந்தக்காரரான தங்கம் தென்னரசு, விவசாயத்திலும் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்பதை அறிந்து, அவரிடம் பேசினோம். உடனே, ஆர்வமுடன் அவரது சொந்த ஊரான விருதுநகர் அருகேயுள்ள மல்லாங்கிணருக்கு வரச் சொன்னார்.

அவரது அழைப்பை ஏற்று, அங்கே போனோம். கண்ணுக்கு எட்டிய மட்டும் கரிசல் காடாகவே தெரிந்தது. வானம் பார்த்த பூமி. ‘பாலைவனக் கப்பல்’ எனப்படும் ஒட்டகம், தனக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான நீரை ஒரே தடவையில் அருந்தி வைத்துக் கொள்ளும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதைப்போல, பெய்யும் மழைநீரை ஈர்த்து வைத்துப் பயிர்களுக்குக் கொடுத்து, நன்கு விளைய வைக்கும் தன்மை, இந்தக் கரிசல் மண்ணுக்கு உண்டு. அதனால் தான், ‘காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு’ என்று, நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மானாவாரிச் சாகுபடிக்கு மிகவும் ஏற்ற மண்.

உளுந்து, பச்சைப்பயறு, துவரை போன்ற பயறு வகைகள், வரகு, கம்பு, சோளம் போன்ற தானிய வகைகள், பருத்தி போன்ற பயிர்கள் கரிசல் மண்ணில் அருமையாக விளையும். கரிசல் மண், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தாலும், விருதுநகர், இராமநாதபுரம் போன்ற தென் மாவட்டங்களில் தான் அதிகம்.

நாம் சென்ற வழியெங்கும் மானாவாரிப் பயிர்களே இருந்தன. பல இடங்களில் தனியா எனப்படும் கொத்தமல்லியை அறுவடை செய்து சாலையில் போட்டு எடுத்துக் கொண்டிருந்தனர். அதன் வாசம் மூக்கைத் துளைக்க, அதைச் சுவாசித்தபடியே அவரது தோட்டத்தை அடைந்தோம்.

தோட்டம் முழுவதும் தென்னை மரங்கள் நிறைந்திருந்தன. ஏராளமான மயில்கள் அந்த மரங்களின் குளுமையில் தோகையை விரித்து ஆடிக் கொண்டிருந்தன. அப்போது நம்மை வரவேற்ற தங்கம் தென்னரசு, தோட்டத்தைச் சுற்றிக் காட்டிக்கொண்டே, தனது விவசாய வாழ்க்கையை விவரிக்க ஆரம்பித்தார்.

“1973-ம் ஆண்டு என்னுடைய தந்தை தங்கப்பாண்டியன், இங்குத் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது, இந்தத் தோட்டத்தை வாங்கினார். இவ்வகையில், எங்களுக்குச் சுமார் 50 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 30 ஏக்கர் நன்செய் நிலம், 20 ஏக்கர் புன்செய் நிலமாகும். இந்தப் பகுதி முழுவதும் கரிசல் மண் பூமி தான்; அதிலும் குறிப்பாக, மானாவாரிச் சாகுபடி தான் நடக்கும்.  ஆனால், இது தோட்ட பூமி. அப்பா இருந்த காலத்தில் நெல், கரும்பு, நிலக்கடலை, வெங்காயம், மிளகாய் எனப் பல பயிர்களைப் பயிரிட்டோம். அதன்பின், போதுமான மழை பெய்யாமல் வறட்சியும், தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டதால், தொடர்ந்து, இங்கு தோட்டப் பயிர்களைச் சாகுபடி செய்ய முடியவில்லை.

அதனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, நிலம் முழுவதும் தென்னை மரங்களை வைத்து விட்டோம். தென்னையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காய்களை எடுப்போம். பக்கத்தில் உள்ள வத்திராயிருப்புப் பகுதியில் இருந்து வந்து தேங்காய்களை வெட்டி எடுத்துச் செல்வார்கள். ஒரு தென்னை மரத்துக்குக் குறைந்தது, 50-60 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், சரியான மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர், சுமார் 500 அடிக்குக் கீழே சென்று விட்டது. பல தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. அதனால், இப்போது சொட்டுநீர்ப் பாசன முறைக்கு மாறி விட்டோம்.

மேலும், குறைந்த நீரில் வருமானத்தைத் தரக்கூடிய மரப் பயிர்களை வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்தி வருகிறோம். அதன் ஒரு கட்டமாக, தென்னை மரங்களுக்கு இடையில் ஊடுபயிராக எலுமிச்சையை வளர்க்கிறோம். மற்ற பழ மரங்களும் உள்ளன. கூடிய விரைவில், இங்கு ‘இமாம் பசந்த்’ என்னும் மாங்கன்றுகளை வளர்க்கப் போகிறோம். எங்கள் நிலத்தில் நான்கு திறந்தவெளிக் கிணறுகள் இருக்கின்றன. நான்கு ஆழ்துளைக் கிணறுகளும் உள்ளன. இந்த ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து நீரை எடுத்து, கிணற்றில் பெருக்கிப் பாசனத்துக்குப் பயன்படுத்தி வருகிறோம்’’ என்றவர், அங்கிருந்த கிணற்றில் எவ்வளவு நீர் ஊறியிருக்கிறது என்று எட்டிப் பார்த்தார்.

தொடர்ந்து, அருகிலிருந்த மாட்டுக் கொட்டகைக்குச் சென்றோம். அங்கு முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகளும் கன்றுக் குட்டிகளும் இருந்தன. அங்கிருந்த சீமைப்புல்லை அள்ளி, அந்த மாடுகளுக்குப் போட்டார்.

“இந்த மாடுகளுக்காகவே இங்கே சீமைப்புல்லை வளர்க்கிறோம். இந்த மாடுகளின் சாணம் தான், எங்கள் நிலங்களுக்கு உரம். எங்கள் நிலத்தில் இயற்கை விவசாயம் தான் செய்கிறோம். இங்கிருந்து சிறிது தூரத்தில் இன்னொரு நிலம் இருக்கிறது. அங்கே மானாவாரிச் சாகுபடி தான். மக்காசோளம், சோளம், கம்பு முதலியவற்றைப் பயிரிட்டு, இந்த மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறோம். இந்த முறை மக்காசோளத்தைப் படைப்புழுக்கள் தாக்கியதால் விளைச்சல் கிடைக்கவில்லை’’ என்று, தங்கம் தென்னரசு சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருந்த தோட்டக்காரர்கள் இளநீரை வெட்டிக் கொடுத்தனர். அதைப்  பருகிவிட்டு, மீண்டும் நடந்து, தோட்டத்தின் கடைசிப் பகுதியை அடைந்தோம். அங்குப் பெரிய கண்மாய் ஒன்று இருந்தது.

பேச்சு கண்மாய்ப் பக்கம் திரும்பியது. “இந்தக் கண்மாயில் முன்பெல்லாம் நிறைய நீர் இருக்கும். மழைக் காலத்தில் இந்தக் கண்மாய்க்கு நீர் வந்து பெருகி விட்டால், எங்கள் கிணறுகளிலும் நீர் நிரம்பி விடும். இந்தக் கண்மாய் நீரையும் விவசாயத்துக்குப் பயன்படுத்துவோம். சில ஆண்டுகளுக்கு முன், ‘சென்னம்பட்டிக் கால்வாய்த் திட்டம்’ என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தத் திட்டத்தில், இதுதான் கடைசிக் கண்மாய். அந்தத் திட்டம் இன்னும் முடியவில்லை. எனவே, இங்கு நிலவும் கடுமையான வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சென்னம்பட்டிக் கால்வாய்த் திட்டத்தை அரசு விரைந்து முடிக்க வேண்டும்.

எங்கள் விவசாயத்தை என்னுடைய அம்மா இராஜாமணியும், என் தாய்மாமா கனகராஜூம் தான் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்கள், தினமும் தோட்டத்துக்கு வருவதோடு, விவசாய வேலைகளையும் செய்வார்கள். நான் இங்கிருக்கும் நேரங்களில் அடிக்கடி தோட்டத்துக்கு வந்து வேலைகள் நடப்பதைப் பார்ப்பேன்; மாடுகள், கன்றுக் குட்டிகளுடன் நேரத்தைச் செலவிடுவேன்; எங்கள் தோப்பில் மயில்கள் தோகை விரித்தாடும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு இரசிப்பேன். இந்தச் சூழல் மனதுக்கு இதமாக இருக்கும்’’ என்றவர், இன்றைய விவசாயம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

“இன்றைய விவசாயத்தில் நிறைய உற்பத்தி செய்யும் நோக்கத்தில், இரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தி நிலத்தைக் கெடுத்து விட்டோம்; காற்றைக் கெடுத்து விட்டோம்; நல்ல சூழலைக் கெடுத்து விட்டோம்; நலம் தரும் உணவை இழந்து விட்டோம். ஐம்பது வயதில் வர வேண்டிய நோய்கள், ஐந்து வயதுக் குழந்தைகளையும் தாக்குவது வேதனையாக உள்ளது. உணவு உற்பத்தியில், நாம் தன்னிறைவை அடைந்துள்ளோம். ஆனால், அந்த உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை உள்ளது தெரிந்தும், அவற்றை உண்ணும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதால், தன்னிறைவு அடைந்து என்ன பயன்?

எனவே, விவசாயிகள், இயற்கை விவசாய முறைக்கு மாற வேண்டும். குறிப்பாக, எல்லா விவசாயிகளும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்க்க வேண்டும். அவற்றின் சாணத்தை, எருவை நிலத்துக்கு உரமாகப் போட வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில், பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து நிலத்துக்கு உரமாக்க வேண்டும். மண்ணில் நுண்ணுயிர்களை, மண்புழுக்களைப் பெருக்கி மண்ணை உயிரூட்ட வேண்டும். பயிர்களைப் பாதுகாக்க, இயற்கைப் பூச்சி விரட்டிகளைத் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்.

பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மீன் அமிலம், வேப்பிலை, வேப்பம் புண்ணாக்கு, வேப்பெண்ணெய், எருக்கு, சோற்றுக் கற்றாழை, துளசி, தும்பை, நொச்சியிலை போன்றவற்றை, பயிர்களைப் பாதுகாக்கும் மருந்துகளாகப் பயன்படுத்தி, நஞ்சில்லா உணவுப் பொருள்களை, நாம் விளைவிக்க வேண்டும். பல ஆண்டுகளாக இரசாயன உரங்களைப் போட்டதால், இயல்பு நிலையை இழந்து போயிருக்கும் மண்ணை, பழைய நிலைக்கு மாற்ற, பல பயிர்கள் சாகுபடி என்பது மிகுந்த பயனளிக்கும். இதையெல்லாம் விவசாயிகள் செய்ய வேண்டும். இப்படி உயிரூட்டிய மண்ணில், நமது பாரம்பரிய விதைகளைப் பயிரிட வேண்டும். ஏனென்றால், இந்த விதைகள் மூலம் விளையும் உணவுப் பொருள்கள் தான், நம் உடம்புக்கு ஏற்றவை; நலம் தருபவை. ஆனால், இதையெல்லாம் நாம் மறந்து விட்டோம்.

இன்றைய சூழலில், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. கேரளாவில், நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களை, விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இங்கேயும், அதைப் போன்ற நடைமுறை வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, நிலப்பரப்பு அதிகம். ஆனால், அதற்கேற்ற அளவில், நீர்வளம் நம்மிடம் இல்லை. இந்த நிலையைச் சமாளிக்க, வறட்சியிலும் விளைந்து, நல்ல பலனைத் தரும் மரப்பயிர் விவசாயத்துக்கு மாற வேண்டும்; ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு என, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்த வேண்டும். மேலும், விவசாயத்தில் புதிய புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இப்படியெல்லாம் சிந்தித்து, பல்வேறு இடர்களைச் சந்தித்து, அவற்றைச் சமாளித்து, விளைய வைக்கும் உணவுப் பொருள்களுக்குக் கட்டுபடியான விலை கிடைக்க வேண்டும் என்பது காலங்காலமாக நமது விவசாயிகள் வைத்து வரும் முக்கியமான கோரிக்கை. ஒரு விவசாயி என்னும் முறையில், நானும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துகிறேன். உற்பத்திச் செலவுகூடக் கிடைக்கவில்லை என்றால், விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட முடியாது. இந்த நிலையைப் பல இடங்களில் பார்க்கிறோம். இது மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு பொருளுக்கும் அடிப்படை விலையை, அரசு உறுதி செய்ய வேண்டும்.

இன்றைய நகரமயமாக்கல் மற்றும் மக்கள் பெருக்கச் சூழலில் விவசாய நிலங்கள், வீடுகளாக, ஆலைகளாக, சாலைகளாக மாறி வருகின்றன. இப்படி அழிந்து வரும் விவசாய நிலங்களைப் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில், உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது’’ என்று அவர் சொல்லி முடிக்கவும், தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கவும் சரியாக இருந்தது.

பல்துறை அறிவைப் பெற்றிருக்கும் பண்பட்ட அரசியல்வாதியை; விவசாயத்தை உயிருக்கு இணையாக நேசிக்கும் நல்ல விவசாயியை; பெயரில் மட்டுமல்ல, நடத்தையிலும் தங்கமான மனிதரைச் சந்தித்த நிறைவுடன், அவரிடமிருந்து விடை பெற்றோம்.


மு.உமாபதி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks