கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2016
தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் எறும்பைப் போல இயங்கிக் கொண்டே இருப்பவர் அய்யா இராஜகோபால். வயது 84. சொந்த ஊர் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் தே.கல்லுப்பட்டி. வரலாற்றுப் பெருமை மிக்க தே.கல்லுப்பட்டி காந்திநிகேதன் பள்ளி தமிழாசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, நமது பாரம்பரிய வேளாண்மை, மரபுவழி வேளாண்மை, இயற்கை வேளாண்மை என்னும் நஞ்சில்லா வேளாண்மையை இந்த மண்ணில் மீண்டும் நிலைநாட்டும் வகையில் உழைத்துக் கொண்டே இருப்பவர்.
அழிந்து வரும் நமது பாரம்பரியத் தானியங்களை மீட்டெடுப்பதிலும் மறு உருவாக்கம் செய்வதிலும் தீவிரமாக இருக்கும் அய்யா, பசுமையின் மீதும் சூழல் காப்பின் மீதும் தீராப் பற்றாளர். வேலி முதல் விளைச்சல் வரை ஒவ்வொன்றையும் பயனுள்ளதாக்கும் வகையிலான எளிய தொழில் நுட்பங்களை, விரல் நுனியிலும், நுனி நாக்கிலும் வைத்துக் கொண்டு, எல்லாரும் பயன்பெறும் பொருட்டுச் சளைக்காமல் சொல்லிக் கொண்டே இருப்பவர். நஞ்சில்லா வேளாண்மையை முன்னெடுத்துச் செல்லும் ஆர்வலர்.
இவரின் நிலத்தில் பணப்பயன்கள் மிகுந்த நோனி, மலைவேம்பு என மரங்களும் உண்டு; கல்லுப்பயறு, கொள்ளுப்பயறு, மொச்சை, தட்டை, துவரை, உளுந்து, பச்சைப்பயறு எனப் பயறு வகைகளும் விளையும்; சாமை, தினை, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி எனச் சிறுதானியங்களும் விளையும். சளைப்பினால் விவசாயிகள் ஒதுக்கி வைத்த பயிர்களெல்லாம் இங்கே விளையும். எந்தப் பயிரைப் பற்றிக் கேட்டாலும் விளக்கமாகக் கூறும் அய்யாவிடம், தினையைப் பற்றிச் சொல்லுங்கள் என்றோம். அப்போது அவர் கூறியதாவது:
“சாமை, காடைக்கண்ணியைப் போல, தினையும் எழுபத்தஞ்சு நாள்ல விளையக் கூடியது. வறட்சியைத் தாங்கி வளரும். மொளச்சுட்டா ஒரு மாசம் வரைக்கும் வறட்சியைத் தாங்கும். ஒத்த வேர்லயே உசுரு புடிச்சுக்கிட்டுக் கெடக்கும். மத்த தானியங்களை விட இதுல அரிசிக் கட்டுமானம் கூடுதலா இருக்கும். ஒரு கிலோ தினையை அரச்சா எழுநூறு கிராம் அரிசி கெடைக்கும். ரொம்பவும் சத்தான அரிசி. அதனால ஒத்த அரிசி கீழே விழுந்தாலும் உடனே எறும்புக தூக்கிட்டுப் போயிரும்.
தேனும் தினைமாவும் கடவுளுக்குப் படைக்கப்படுற பொருள்கள். இப்பிடி இறைவனுக்குப் படைக்கப்படுற பொருள்கள் எல்லாமே சத்துள்ள பொருளுக தான். தினைப் பாயசத்தையும் தினைப் பொங்கலையும் சாப்பிட்டவங்க இன்னும் கொஞ்சம் கெடைக்காதான்னு நெனைப்பாங்க. அவ்வளவு நல்லா இருக்கும்.
தினைக்கதிரோட தண்டு மெல்லிசா இருக்கும். அதனால கதிர் மேல பட்சிக உக்கார முடியாது. அப்பியிருக்குறதுனால கதிரைக் கொத்தித் தின்ன முடியாது. ஆனா குருவிகள விரட்டி, தினைக்காட்டை வள்ளி காத்த கதையைப் படிச்சிருக்கோம். ஒருவேளை அந்தக் காலத்துல தினைக்கதிரோட தண்டு பலமா இருந்திருக்கலாம். இந்தத் தினையில சடைத்தினை, புல்தினை, கருந்தினை, சிவப்புத்தினை, மஞ்சள் தினைன்னு பல வகைகள் இருக்கு.
தினையை ஆடிப் பட்டத்துல வெதைக்கலாம். ஆனா அது கடும்பட்டம். இப்பெல்லாம் காலத்துல மழை பெய்யிறது இல்லேங்கிறதால, இந்தப் பட்டம்ங்கிறதே மாறிப் போச்சு. ஆவணியில வெதைக்கலாம். ஏக்கருக்கு ஒன்னரை கிலோ வெதை ஏராளம். ஒரு களை எடுத்தா போதும். சிம்பு வெடிச்சு நல்லா வளரும். பயிர்ப் பாதுகாப்புன்னு சொல்றதுக்கு ஒன்னுமில்ல. வெதச்சுட்டா போதும். மழைத் தண்ணியிலயே வெளஞ்சுரும்.
அறுவடைக்கு 20 ஆளுக தேவைப்படும். களத்து வேலை சுலபம் தான். எழுபது நாள்ல ஏக்கருக்கு எட்டுக் குவிண்டால் தினை கெடைக்கும். இந்தத் தினை பெரும்பாலும் லவ் பேர்டுஸ்ங்கிற காதல் பறவைகளுக்குத் தான் தீனியா போகுது. வசதியான மக்கள் தினையோட அருமையை அறிஞ்சு சாப்பிடுறாங்க. ஆனா, சராசரி மக்களுக்குத் தினையோட அருமை பெருமை தெரியல. அதனால, ரேசன் கடைகள்ல இந்தச் சிறுதானிய அரிசியையும் குடுக்கணும். இப்பிடிச் செஞ்சா ஜனங்க இதைப்பத்திப் புரிஞ்சுக்கிட்டுச் சாப்பிடுவாங்க. அதோட சிறுதானிய வெளச்சலும் அதிகமாகும்.
கல்லுப்பயறையும் கொள்ளுப் பயறையும் தினையில ஊடுபயிரா வெதைக்கலாம். சாலுல தட்டைப்பயறைப் போடலாம். இந்தப் பயறுக வெளஞ்சிட்டா இலைகள் பழுத்து உதிர்ந்து மண்ணுக்குச் சத்தான உரமா ஆகிப் போகும். பயத்தங் கொடிகள பனிப்பதத்துல அறுத்துக் களத்துக்குக் கொண்டு வரணும். வெய்யில் நேரத்துல அறுத்தா நெத்துக வெடிச்சுப் பயறுக நெலத்துல உதிர்ந்து போகும். ஊடுபயிர் பண்றதுனால நமக்கு ரெட்டிப்பு வருமானம்.
தினை சாகுபடியில பூச்சி, நோயின்னு எந்தத் தொல்லையும் இல்ல. அதனால மருந்து மாயத்துக்கும் எடமில்ல. செலவும் ரொம்பக் குறைவு. கெடைக்கிறது சத்தான பொருள். இப்பிடிப்பட்ட அருமையான சிறுதானியச் சாகுபடியை அரசாங்கம் ஊக்கப்படுத்தணும். சிறுதானிய உணவுகளைப் பத்தி மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கணும்’’ என்றார்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!