பாலக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019

வெப்பம் மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடப்படும் கீரைகளில் ஒன்று பாலக்கீரை. பீட்ரூட் குடும்பத்தைச் சார்ந்த இக்கீரை, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, பீஹார், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்திலும் பிரபலமாகி வருகிறது. இதன் இலைகள் பீட்ரூட் இலைகளைப் போல இருப்பதால் பீட் இலைக்கீரை எனவும் அழைக்கப்படுகிறது.

நூறு கிராம் கீரையிலுள்ள சத்துகள்

சுண்ணாம்பு 380 மி.கி., வைட்டமின் சி 70 மி.கி., புரதம் 3.4 கிராம், பாஸ்பரஸ் 30 மி.கி., இரும்புச்சத்து   162 மி.கி., 5,862 மைக்ரோகிராம் வைட்டமின் ஏ சத்து ஆகியன உள்ளன. இதை வெப்பப் பகுதியில், குளிர் காலத்தில் பயிரிடுவது நல்லது. வளமான மண்ணும், வடிகால் வசதியும் இருக்க வேண்டும். களர் உவர் நிலத்திலும் பயிரிடலாம்.

வகைகள்

பாலக்கீரையில் பல இரகங்கள் உள்ளன. புதுதில்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உருவாக்கிய முழுப்பச்சை   இரகம், இராஜஸ்தான் உதயப்பூர் பல்கலைக் கழகம் உருவாக்கிய பூசா பாலக், பூசா ஜோதி, பூசா ஹரிட் ஆகிய இரகங்கள்  , மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பானர்ஜியின் பெரிய இலை இரகம், அரியானா பல்கலைக் கழகம் உருவாக்கிய ஹெச்.எஸ். 23 இரகம், உ.பி.வேளாண் பல்கலைக் கழகம் உருவாக்கிய பந்த் கலவை ஜி.பி. பந்த் இரகம். இதைச் சமவெளியில் நவம்பர் டிசம்பரிலும், மலைப்பகுதியில் ஏப்ரல்- ஜுன் காலத்திலும் விதைக்கலாம்.

சாகுபடி முறை

நிலத்தை 3-4 தடவை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். கடைசி உழவின்போது, ஏக்கருக்கு 10 டன் மட்கிய தொழுவுரத்தை இட வேண்டும். மேலும், 25 கிலோ யூரியா, 70 கிலோ சூப்பர் பாஸ்பேட், 37 கிலோ பொட்டாசையும் அடியுரமாக இட வேண்டும். பிறகு பாத்திகளை அமைத்து, 20 செ.மீ. இடைவெளியில் கோடுகளைக் கிழித்து, 10 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். 40 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்தும், அவற்றின் இருபுறமும் 10 செ.மீ. இடைவெளியில் விதைகளை விதைக்கலாம். ஒரு ஏக்கரில் விதைக்க 10.50 கிலோ விதை தேவைப்படும்.

விதைகளை ஆழமாக விதைக்கக் கூடாது. ஒவ்வொரு விதைப்பந்திலும் 2-3 விதைகள் இருப்பதால், ஒரு விதையிலிருந்து 2-3 செடிகள் வளரும். எனவே, குழிக்கு ஒரு விதை போதும். விதைத்ததும் நிலம் நனையும்படி பாசனம் செய்ய வேண்டும். பிறகு, மூன்றாம் நாளும், அடுத்து ஒரு வார இடைவெளியிலும் பாசனம் செய்ய வேண்டும்.

பாதுகாப்பு

விதைத்த 20 நாளில் களையெடுத்து, ஏக்கருக்கு 25 கிலோ யூரியாவை மேலுரமாக இட்டுப் பாசனம் செய்ய வேண்டும். இக்கீரையை, அசுவினி மற்றும் இலைப்புழுக்கள் சேதப்படுத்தும். இவற்றைக் கட்டுப்படுத்த, வேப்ப எண்ணெய் அல்லது நச்சு குறைந்த மருந்துகளைத் தெளிக்கலாம்.

அறுவடை

விதைத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம். அடுத்து, 15-20 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்ய வேண்டும். ஒரு ஏக்கரிலிருந்து 3.5-4.5 டன் கீரை மகசூலாகக் கிடைக்கும். நன்கு வளர்ந்த, மிருதுவான பசுமையான இலைகளைக் காம்புடன் அறுத்துக் கட்டாகக் கட்டிக் கூடைகளில் சந்தைக்கு அனுப்பி வைத்தால் கீரை அழுகிப் போகாமல் இருக்கும்.


முனைவர் .சங்கரி,

முனைவர் எம்.கவிதா, தோட்டக்கலைக் கல்லூரி, 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை., கோவை, 

முனைவர் எம்.ஆனந்த், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!