கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!

கோழி Heading Pic 5

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

கோடையில் கோழிகளை விரட்டிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் கோழிகள் பலவீனமடையும். கோடைக்காலம் என்றாலே கோழிகளுக்குச் சோதனையான காலம் தான். பறவையினமான கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, கூடுதலான வெப்பத்தைச் சுவாசக் காற்று மூலம் தான் வெளியேற்ற முடியும். இறைச்சிக் கோழிகளின் இறைச்சியில் கொழுப்புச் சற்று மிகுதியாக இருக்கிறது. எனவே, போதிய காற்றோட்ட வசதி இல்லாத நிலையில், இந்தக் கோழிகளை வெப்ப அயர்ச்சி நோய் தாக்கக் கூடும்.

நீரும் தீவனமும்

நோயுறும் கோழிகளுக்கு மூச்சிரைப்பு ஏற்படும். எனவே, கோழிகள் சோர்ந்து விடும். இத்தகைய கோழிகளுக்குத் தாகம் கூடுதலாக இருக்கும். சரிவரச் சாப்பிடாது. பண்ணையின் சுவர் ஓரத்தில் ஒதுங்கியே நிற்கும். கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு வாழும். ஆனால் நீரில்லாமல் அவற்றால் உயிர் வாழ முடியாது. எனவே, கோழிகளுக்கு நீர் அவ்வளவு முக்கியம். கோடையில் ஏற்படும் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைப்பதில் நீர் பெரும் பங்காற்றுகிறது.

வணிக நோக்கில் வளர்க்கப்படும் இறைச்சிக் கோழிகளுக்கு, அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு நீர் தேவை. கோடையில் ஏற்படும் கூடுதலான வெப்பத்தைச் சுவாசக் காற்று மூலம் வெளியேற்ற, கோழிகளுக்கு நீர் நிறையத் தேவை. இத்துடன் தாதுப்புக் கலவையும் கோழிகளுக்கு வேண்டும். இந்தக் கலவை, நீரைக் குடிக்கச் செய்யும் உணர்வைக் கோழிகளிடம் தூண்டும்.

பண்ணையில் குடிநீர்ப் பாத்திரங்களை நிறைய வைக்க வேண்டும். இந்த நீரில் ஐஸ் கட்டிகளைச் சேர்க்கலாம். கூரையின் மேல் வைக்கோலைப் பரப்பி, நீரைத் தெளித்து வெப்பத்தைக் குறைக்கலாம். பக்கவாட்டில் ஈரச் சாக்குகளைத் தொங்க விட்டால், உள்வெப்பம் கொஞ்சம் குறையும். தீவனத்தை உலர் தீவனமாகக் கொடுக்காமல், நீரைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பகல் வெப்பம் கூடுதலாக இருக்கும் போது, கோழிகள் தீவனத்தைச் சரிவர எடுக்காது. எனவே, விடியற் காலையிலேயே கோழிகள் உண்ண ஏதுவாக மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

சுத்தமான நீர்

நூறு கோழிகளுக்கு 500 மில்லி கிராம் என்னுமளவில் வைட்டமின் சி-யைச் சேர்த்துத் தர வேண்டும். குளிர்ந்த மோரைத் தரலாம். சிக்கன நடவடிக்கையாக, பத்து லிட்டர் குடிநீரில் ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து விடலாம். தரமற்ற நீரைக் கோழிகளுக்குக் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுத்தால், இரத்தக் கழிச்சல், சால்மலைலோசிஸ், கோலிபேசில்லோசிஸ் போன்ற நோய்கள் உண்டாகும். இதனால், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தித் திறன் பாதிக்கும்.

முட்டையிடும் கோழிகள் முட்டைகளை இட்டதும் நீரை நிறையக் குடிக்கும். இரவில் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும் நீரை மிகுதியாகக் குடிக்கும். இறைச்சிக் கோழிகள் சூரிய வெளிச்சம் வந்ததும் அல்லது விளக்குகளைப் போட்டதும் நீரைக் கூடுதலாகக் குடிக்கும். எனவே, கோடை வெப்பத்தின் தன்மையை அறிந்து, தகுந்த அளவில் தரமான குடிநீரைக் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.

நீரைத் தெளித்தல்

நீரில் நோய்க் கிருமிகளின் அளவைக் குறைக்க, குளோரின் பொடி, அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இவற்றில், குறைந்த செலவில் குளோரின் வாயுவைப் பெற, ஆயிரம் லிட்டர் நீருக்கு ஐந்து கிராம் வரையில் பிளீச்சிங் பொடியைப் பயன்படுத்த வேண்டும். கூண்டு முறையில் வளர்க்கப்படும் முட்டைக் கோழிகளைக் கோடை வெப்பம் தாக்காமல் இருக்க, நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த நீரை விசைத் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். ஆழ்கூள வளர்ப்பிலுள்ள கோழிகளிலும் ஆழ்கூளம் ஈரமாகாத வகையில் தெளிக்கலாம். ஆனால், கோழிகள் பயந்து ஓடாதபடி பொறுமையாகத் தெளிக்க வேண்டும்.

தீவனத்தில் மாற்றம்

தீவனத்தைச் சொந்தமாகத் தயாரிப்பவர்கள், தீவனத்தில் 100 முதல் 150 கிலோ கலோரி எரிசக்தி குறைவாக இருக்குமாறு தயாரிக்கலாம். இதனால், கோழிகளின் உண்ணும் திறன் மாறாது. இதற்கு, தீவனத்தில் தானிய வகைகளைக் குறைத்து, புண்ணாக்கு வகைகளை மிகுதியாக்கிக் கொள்ளலாம். கோடையில், கோழிகளுக்குக் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில், தீவனத்தை வைக்காமல் இருப்பதே நல்லது. இந்த நேரத்தில் குடிநீரை மட்டும் அடிக்கடி கொடுத்தால் போதும்.

அதிகாலை, காலை 8 முதல் 9 மணிக்குள், மாலை 4 மணிக்கு மேல், இரவு 7 மணி ஆகிய நேரங்களில் தீவனத்தை வைத்தால், உற்பத்திக் குறைவில்லாமல் இருக்கும். வெய்யில் நேரத்தில் தீவனத்தை வைத்தால், தீவனத்தை உண்பதற்காகக் கோழிகள் ஒன்றுக்கொன்று தள்ளிக் கொள்ளும், சண்டையிட்டுக் கொள்ளும். இதனால் வெப்பத் தாக்கம் ஏற்படலாம். எனவே, பகலில் தீவனத்தை வைக்கும் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

மரங்களை வளர்த்தல்

ஆண்டுக்கு ஆண்டு வெப்பம் கூடிக்கொண்டே இருக்கிறது. அதனால், கோடை வெய்யிலைச் சமாளிக்கும் வகையில், நன்கு நிழலைத் தரும் மரங்களை வளர்க்க வேண்டும். பண்ணையின் இருபுறமும் சுமார் பத்தடி தொலைவில் மரங்களை வளர்த்துப் பராமரித்தால், குளுமையான காற்று கோழிகளுக்குக் கிடைக்கும். எனவே, இதுவரையில் கூறிய உத்திகளைக் கடைப்பிடித்துக் கோடை வெய்யிலைச் சமாளிப்போம்; கோழிகளைப் பாதுகாப்போம்.


கோழி RAJENDRAN

டாக்டர் வி.இராஜேந்திரன்,

முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை, திண்டுக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!