My page - topic 1, topic 2, topic 3

செம்மறியாட்டுக் குட்டிகளை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019

கிராமங்களில் வாழும் ஏழைகள், சிறு குறு விவசாயிகள் செம்மறியாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்து வருவதால், விவசாயம் சார்ந்த தொழில்களை நாடும் போக்குக் கூடிவருகிறது. குறைந்து வரும் மேய்ச்சல் நிலம், ஆடு வளர்ப்பில் அனுபவமின்மை, வனப்பகுதிகளில் ஆடுகளை மேய்ப்பதற்கு இருக்கும் தடை போன்றவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது, வெள்ளாடு வளர்ப்பைவிட, செம்மறியாடு வளர்ப்பு, குறிப்பாக, செம்மறிக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு பயனுள்ளதாகும்.

தொப்புள் கொடியை வெட்டுதல்

குட்டி பிறந்ததும் தொப்புள் கொடியை 2 செ.மீ. நீளம் விட்டு, மெல்லிய நூலால் கட்டி, அதற்குக் கீழேயுள்ள பகுதியைக் கத்தரியால் வெட்டி அகற்றி விட்டு, டிங்ஞ்சர் அயோடின் மருந்தைத் தடவிவிட வேண்டும்.

சீம்பால் அளித்தல்

பிறந்து 30-45 நிமிடங்களில் குட்டி எழுந்து தாயிடம் பால் குடிக்கும். குட்டி பிறந்து 18 மணி நேரம் வரையில் உற்பத்தியாகும் பால் சீம்பாலாகும். இதில் குட்டிக்குத் தேவையான சத்துகளும் நோயெதிர்ப்புச் சக்தியும் அடங்கியுள்ளன. குட்டியின் உடல் வெப்பம் சீராக இருக்கத் தேவையான எரிசக்தியைச் சீம்பால் அளிக்கிறது. ஒரு நாளில் ஒரு குட்டி, 3-4 தடவையில் 200-250 மில்லி சீம்பாலைக் குடிக்க வேண்டும். பிறந்து 24 மணி நேரம் வரை மட்டுமே, குட்டியின் சிறுகுடல், சீம்பாலில் உள்ள நோயெதிர்ப்புப் புரதங்களைக் கிரகிக்கும் தன்மையில் இருக்கும்.

எடை பார்த்தல்

குட்டி பிறந்ததும் அதன் எடையை குறித்து வைக்க வேண்டும். வளரும் பருவத்தில் குட்டிகளின் எடையைத் தெரிந்து கொள்வது அவசியம். மாதம் ஒருமுறை எடை போட வேண்டும். இது, தீவனம் அளிக்கவும், நோயைக் கண்டறியவும், குட்டிகளின் வளர்ச்சியை அறியவும் உதவும்.

அடையாளம் இடுதல்

சிறப்பாகப் பராமரிக்க, குட்டிகளுக்கு அடையாளக் குறியிட வேண்டும். இவ்வகையில், காதில் உலோகக் காதணிகளை அணிவித்தல், கழுத்தில் அடையாளத் தகடுகளைத் தொங்க விடுதல், காதில் எண்களை இடுதல் போன்றவற்றைச் செய்யலாம்.

தீவனப் பராமரிப்பு

பிறந்த குட்டி முதல் 2-3 நாட்களுக்குத் தாயுடனேயே இருக்க வேண்டும். 15 நாட்கள் வரை பாலை மட்டுமே குட்டிகள் குடிக்கும். அதற்குமேல் தீவனத்தைக் கொடுக்கலாம். முதலில் குட்டிக்குத் தினமும் 50 கிராம் தீவனத்தை அளிக்க வேண்டும். பிறகு படிப்படியாகக் கூட்டி 100-150 கிராம் கொடுக்க வேண்டும். தீவனக் கலவையை 15-30 நாள் குட்டிக்கு 50 கிராம், 30-40 நாள் குட்டிக்கு 100-150 கிராம், 3-12 மாதக் குட்டிக்கு 150-200 கிராம் கொடுக்கலாம். மூன்று மாதத்தைக் கடந்த குட்டியைத் தாயிடமிருந்து பிரித்து, மேய்ச்சல் மற்றும் தீவனத்தின் மூலம் வளர்க்கலாம்.

இளங்குட்டிகளைக் கடும் வெப்பம் மற்றும் குளிர்காலத்தில் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். வெப்பக் காலத்தில் இளங்குட்டிகளைக் கொட்டகையில் பராமரிக்க வேண்டும். குளிர்ந்த மற்றும் சுத்தமான குடிநீரைக் கொடுக்க வேண்டும். குளிர்காலத்தில் குட்டிகள் மீது சணல் சாக்குகளைப் போர்த்தி விடுதல், செயற்கை வெப்பத்தை அளித்தல், சத்தான தீவனமளித்தல் மூலம் பராமரிக்கலாம். மேலும் விவரங்களுக்கு: 044-27452371 இல் பேசலாம்.


PB_DEVAKI

முனைவர் .தேவகி,

முனைவர் க.வேல்முருகன், வேளாண்மை அறிவியல் நிலையம், முனைவர் க.செந்தில்குமார், 

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks