My page - topic 1, topic 2, topic 3

பன்றிப் பண்ணைகளில் உயரிய பாதுகாப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

ன்றிப் பண்ணைகளில் உயரிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றுகளைத் தவிர்த்து உற்பத்தியைக் கூட்டலாம். தூய்மைப்படுத்துதல், தொற்று நீக்கம் செய்தல் தனிமைப்படுத்துதல் ஆகிய மூன்றும் முக்கிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளாகும்.

தூய்மைப்படுத்துதல்

விலங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் உணவுத்தொட்டி, நீர்த்தொட்டி மற்றும் கொட்டில் போன்றவை, அவற்றின் சாணம், சிறுநீரால் அசுத்தமாகி இருக்கும். அந்தப் பொருள்களைத் தூய்மையாக வைத்திருந்தால், நோயை உண்டாக்கும் கிருமிகளைக் குறைக்கலாம்.

தொற்று நீக்கம் செய்தல்

தொற்று நீக்கம் செய்தால், நோயை ஏற்படுத்தும் கிருமிகளை அழிப்பதுடன், விலங்குகள் மூலம் மக்களுக்குப் பரவும் நோய்களையும் தடுக்கலாம். தொற்று நீக்கியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டும். தொற்று நீக்கம் கிராமப்புற மக்களிடையே சரியாகச் சென்றடைவதில்லை என்னும் கருத்து உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சரியான கிருமிநாசினி கிடைக்காமை, கிருமிநாசினி கிடைத்தாலும் முறையாகப் பயன்படுத்தாமை ஆகும்.

கிருமிநாசினியின் தரமானது, களப்பயன்பாடு மற்றும் குறிப்பிட்ட பகுதியில் வேறுபடுகிறது. இதனால் அசுத்தப் பகுதிகளில், கிருமிநாசினியை அதிகளவில், அதிக நேரம் பயன்படுத்தினாலும், அது, அசுத்தத்தில் ஊடுவிச் சென்று தொற்றுகளை நீக்கும் என்று சொல்ல முடியாது.

தனிமைப்படுத்துதல்

உயிர்ப் பாதுகாப்பு முறைகளில் மிக முக்கியச் செயல் தனிமைப்படுத்துதல் ஆகும். இதைச் செய்தால், உயரிய உயிர்ப் பாதுகாப்பை அடையலாம். இதில், நோயுற்ற விலங்குகளையும், அதற்காகப் பயன்படும் பொருள்களையும், நல்ல நிலையில் இருக்கும் விலங்குகளிடம் அண்டவிடக் கூடாது. நோய்த்தொற்று முழுமையாகக் குணமாகும் வரை, நோயுற்ற விலங்குகளை மற்ற விலங்குகள் இருக்கும் பகுதிக்கு மாற்றக் கூடாது. இச்செயல் விலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பொருந்தும்.

சுகாதாரமின்மை எச்சரிக்கை

ஒரு மந்தையில் இருக்கும் பன்றிகளில் அதிகளவில் உமிழ்நீர்ச் சுரப்பு இருத்தல், நடக்க முடியாமை; நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பெண் பன்றிகள் உண்ணாமல் இருத்தல், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பன்றிகள் மூச்சிரைத்தல், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட பன்றிகளில் கருச்சிதைவு உண்டாதல்; தாயிடமிருந்து பிரிப்பதற்கு முன் குட்டிகள் அதிகளவில் இறத்தல்; தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு வளரும் பன்றிகள் அதிகளவில் இறத்தல்; 2-3 நாட்களுக்கு மேல் கழிச்சல் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் அதிகப் பன்றிகளில் இருமல் மற்றும் மூச்சிரைப்பு இருத்தல்; ஒரே நாளில் எதிர்பாரா நிலையில் அதிகளவில் இறப்பு உண்டாதல் ஆகியன நடந்தால் உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கான நிலைகள்

நிலை 1: இதில் பண்ணை அமைந்துள்ள இடம், கொட்டகை மற்றும் நில அமைப்பு, இடவசதிகள், நோய்வகை ஆகியன அடங்கும். பண்ணை அமைப்பில், ஆண் பன்றிப் பிரிவு, இறைச்சிப் பன்றிப் பிரிவு, இனவிருத்திப் பன்றிப் பிரிவு, வளரும் பன்றிப் பிரிவு ஆகியன அடங்கும். நில அமைப்பில், பன்றிப் பண்ணையிலிருந்து, மற்ற பன்றிப் பண்ணைகளுக்கு இடைப்பட்ட தூரம்; பன்றிப் பண்ணையிலிருந்து, மற்ற கால்நடைப் பண்ணைகளுக்கு இடைப்பட்ட தூரம்; இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பண்ணைகளின் எண்ணிக்கை ஆகியவை அடங்கும்.

வசதிகள் பிரிவில், திறந்தவெளிப் பண்ணையா, கொட்டில் பண்ணையா, வசதி வாய்ப்புகள் புதியனவா, பழையனவா, பண்ணையின் சுத்தநிலை போன்றவை அடங்கும். பன்றிகள் பிரிவில், பன்றிகளின் வயது, பன்றிகளின் நோயெதிர்ப்புத் திறன், பன்றிகளுக்குப் போடப்படும் தடுப்பூசியின் தரம், கால்நடை உணவு மற்றும் பண்ணை மேலாண்மை, பன்றிகளில் மரபியல் சார்ந்த நோயெதிர்ப்புத் திறன் போன்றவை அடங்கும்.

நோய்கள் பிரிவில், பன்றிகளை அதிகமாகத் தாக்கும் நோய்களைக் கண்டறிதல், குறிப்பிட்ட காலத்தில் அதிகளவில் பன்றிகளைத் தாக்கிய நோய் விவரம், பண்ணைக்குள் பன்றிகள், மனிதர்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம், பண்ணையில் பன்றிகளின் நுழைவு மற்றும் வேலையாட்களின் நடமாட்டம், பண்ணையில் எலி, கீரி போன்றவற்றைக் கட்டுப்படுத்த கடைசியாகக் கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் போன்றவை அடங்கும்.

நிலை 2: இலக்குகளை நிர்ணயித்தல். குறிப்பிட்ட நோயை அழிக்க இலக்கை நிர்ணயித்தல்.

நிலை 3: குறிப்பிட்ட நோயை ஒழிக்க, முதலில் நோய்க்காரணியைக் கண்டறிய வேண்டும்.

நிலை 4: குறிப்பிட்ட நோய்க்காரணியால் பாதிக்கப்பட்ட விலங்குகளைக் கணக்கிட வேண்டும். இதனால் பண்ணையின் உற்பத்தித் திறன் பாதிக்கப்பட்டதா என ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். நோய்க்காரணி பரவிய விதத்தை, அதன் வீரியத்தை, மூலத்தைக் கண்டறிய வேண்டும்.

நிலை 5: குறிப்பிட்ட நோய்க்காரணியை அழிப்பதற்கு, நடைமுறையில் உள்ள உயரிய தரமான உயிர்ப் பாதுகாப்பு முறையைப் பயன்படுத்த வேண்டும்.

நிலை 6: உயிர்ப் பாதுகாப்பு முறையின் தரத்தை, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து அதைக் கண்காணிக்க வேண்டும். விலங்குளில் இரத்த மாதிரிகளை எடுத்து, குறிப்பிட்ட நோய்க்காரணி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.

உயிர்ப் பாதுகாப்பு முறைகள்

கால் நனைப்பு மருந்துக் கலவை, வாகன நனைப்பு மருந்துக் கலவை, மருந்துக் கலவை புகைமூட்டம், பண்ணையைச் சுற்றி வேலியமைத்தல், தொற்று நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், தனிமைப்படுத்துதல். ஃபார்மலின், காப்பர் சல்பேட், குளோரின்-டை-ஆக்சைடு, பொட்டாசியம் பெர்மாங்கனேட் மற்றும் சிங்க் சல்பேட் போன்ற மருந்துகள் கால் மற்றும் வாகன நனைப்பு மருந்துக் கலவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

உயிர்ப் பாதுகாப்பு முறையின் முக்கிய இலக்கு, நோயினால் பன்றிகள் பாதிக்கப்படுவதையும், நோய்ப் பரவலையும் தடுப்பதேயாகும். எனவே, உயரிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றினால், நோய்த்தொற்று இல்லாத இறைச்சிப் பொருளை உற்பத்தி செய்யலாம்.


மரு.மா.மோகனப்பிரியா,

மரு.செ.ஜோதிகா, முனைவர் த.பாலசுப்ரமணியம், முனைவர் ச.த.செல்வன்,

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம்,

காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks