சம்பங்கி மலர் சாகுபடி!

சம்பங்கி SAMPANGI

கட்டுரை வெளியான இதழ்: மே 2020

ம்பங்கியின் தாவரப் பெயர் பாலியாந்தஸ் டியூபூரோசா ஆகும். இதில், ஓரடுக்குச் சம்பங்கி, ஈரடுக்குச் சம்பங்கி என இருவகை உண்டு. ஓரடுக்கு மலர்கள் மாலைகள் தொடுக்கவும், ஈரடுக்கு மலர்கள் கொய்மலராகவும் பயன்படுகின்றன. வாசம் அதிகமுள்ள ஓரடுக்கு மலர்கள், வாசனை மெழுகு உற்பத்திக்கும் உதவுகின்றன. இப்பூக்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், இராஜஸ்தான், குஜராத், ஆந்திரம், மற்றும் மேற்கு வங்கத்திலும் சம்பங்கி பயிரிடப்படுகிறது.

மண்வளம், தட்பவெப்பம்

வடிகால் வசதியுள்ள கரிசல் நிலமும், மணற்பாங்கான நிலமும் ஏற்றவை. மண்ணின் அமில காரத்தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும். வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இது 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் போனாலோ 10 டிகிரி செல்சியஸ்க்கும் குறைந்தாலோ பூவின் தரமும் எடையும் பாதிக்கும். மிதமான வெப்பநிலையில் ஆண்டு முழுவதும் பூக்கும்.

இனப் பெருக்கம்

கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரே அளவுள்ள 25-30 கிராம் கிழங்குகளை நட வேண்டும். கிழங்குகளைத் தோண்டி எடுத்து 30 நாட்கள் கழித்து நடலாம்.

இரகங்கள்

மெக்சிகன் சிங்கிள்: இது ஓரடுக்கு மலராகும். மலரும் போது பச்சை மற்றும் வெள்ளையாக இருக்கும். மலர்ந்த பின்பு, முழு வெள்ளையாக மாறிவிடும். கொய்மலராகவும், உதிரி மலராகவும், வாசைன மெழுகைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்தப் பூவில் விதைகள் உருவாகும். ஓராண்டில் எக்டருக்கு 14-15 டன் பூக்கள் கிடைக்கும்.

சிருங்கார்: இது பெங்களூரு இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. மெக்சிகன் சிங்கிள் மற்றும் பேர்ள் டபுள் மூலம் உருவாக்கப்பட்டது. ஓரடுக்கு மலரான இது, மொட்டுப் பருவத்தில் இளஞ்சிவப்பாக இருக்கும். பூ நீளமாகவும், பூங்கொத்து அடர்த்தியாகவும் இருக்கும். மெக்சிகன் சிங்கிளை விட 36% மகசூலைக் கூடுதலாகத் தரும். 0.14% மெழுகைக் கொடுக்கும். இந்தப் பூவில் விதைகள் உருவாகும். எக்டருக்கு 14-15 டன் பூக்கள் கிடைக்கும்.

பிரஜ்வால்: இது பெங்களூரு இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. நீளமான பூங்கொத்து மற்றும் ஓரடுக்கு மலரைக் கொண்டது. மொட்டுகள் இளஞ்சிவப்பாக இருக்கும். பூத்ததும் வெள்ளையாகி விடும். பூவின் எடை அதிகமாக இருக்கும். மெக்சிகன் சிங்கிளை விட 20% மகசூலைக் கூடுதலாகத் தரும். கொய்மலராகவும், உதிரி மலராகவும் மற்றும் வாசனை மெழுகைத் தயாரிக்கவும் பயன்படும். எக்டருக்கு 17-18 டன் மகசூலைத் தரும்.

அர்கா நிரந்தரா: இது பெங்களூரு இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. உதிரிப் பூக்கள் உற்பத்திக்கு ஏற்றது. பிறவகை மலர்களைக் காட்டிலும் விரைவில் பூக்கும். பூக்கும் காலமும் ஒரு மாதம் வரை நீடித்திருக்கும். எக்டருக்கு 19-20 டன் மகசூலைத் தரும்.

பளே ரஜனி: இது மராட்டியத்தில் உள்ள மகாத்மா பாலே கிரிஷி வித்தியாபீத் மூலம் வெளியிடப்பட்டது. ஓரடுக்கு மலரான இது, பூனே லோக்கல் சிங்கிள் மற்றும் சிருங்காரின் கலப்பாகும். ஒரு பூங்கொத்தில் 46-58 பூக்கள் இருக்கும். இதன் மொட்டு, பச்சை வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 13-14 டன் மகசூலைத் தரும்.

கல்கத்தா சிங்கிள்: இது கல்கத்தா உள்ளூர் இரகமாகும். ஓரடுக்கு மலரான இதன் மொட்டு வெள்ளையாகத் தோன்றும். இளஞ்சிவப்பு நிறத் திட்டுகள் இருக்கும். பூங்கொத்து 130-140 செ.மீ. நீளத்தில் 35-40 பூக்களுடன் இருக்கும். உதிரி மலராக, கொய்மலராக, வாசைன மெழுகு எடுக்கப் பயன்படும். எக்டருக்கு 12 டன் மகசூலைத் தரும்.

பேர்ள் டபுள்: இம்மலர் மூன்றடுக்கு இதழ்களைக் கொண்டிருக்கும். பெண் மலர்கள் மட்டுமே பூக்கும். கொய்மலர் உற்பத்திக்கு ஏற்றது.

சுவாசினி டபுள்: இது பெங்களூரு இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. மெக்சிகன் சிங்கிள் மற்றும் பேர்ள் டபுளின் கலப்பாகும். ஈரடுக்கு மலரான இது, நீளமான பூங்கொத்தில், தடித்தும் பெரிதாகவும் இருக்கும். மொட்டுகள் சீராக மலரும். கொய்மலருக்கு ஏற்றது. ஓராண்டில் எக்டருக்கு 1.5-2.5 இலட்சம் மலர்கள் கிடைக்கும்.

வைபவ் டபுள்: பெங்களூரு இந்தியத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் வெளியிடப்பட்டது. மெக்சிகன் சிங்கிள் மற்றும் ஐஐஎச்ஆர் வீரி ஒட்டு2 இன் கலப்பாகும். மொட்டுகள் பச்சையாகவும், பூத்ததும் வெள்ளையாகவும் இருக்கும். சுவாசினி இரகத்தைவிட 50% கூடுதல் மகசூலைத் தரும். கொய்மலருக்கும் மற்றும் தொட்டிகளில் வளர்ப்பதற்கும் ஏற்றது. ஒரு எக்டரில் ஆண்டுக்கு 2.0-2.5 இலட்ச கொய்மலர்கள் கிடைக்கும்.

கல்கத்தா டபுள்: கல்கத்தா உள்ளூர் இரகம். பூத்தண்டின் நீளம் 87 செ.மீ. இருக்கும். ஈரடுக்கு மலர். பூவின் எடை 144 கிராம் இருக்கும். மொட்டு, வெள்ளையாக இளஞ்சிவப்புத் திட்டுகளுடன் இருக்கும்.  ஓராண்டில் எக்டருக்கு ஒரு இலட்சம் கொய்மலர்கள் கிடைக்கும்.

நிலமும் நடவும்

வடிகால் வசதியுள்ள நிலம் தேவை. கொஞ்சக் காலம் நீர் தேங்கினாலும் பயிரின் வளர்ச்சியும் பூக்கும் தன்மையும் பாதிக்கப்படும். பெரிய கிழங்கு, அதிகளவில் பூங்கொத்துகள் மற்றும் பூக்களை உற்பத்தி செய்யும். 2-2.5 செ.மீ. விட்டமுள்ள கிழங்கை நடலாம். கிழங்கைத் தோண்டி ஒரு மாதம் இருப்பு வைத்து நட வேண்டும். இதனால், செடிகளின் வளர்ச்சியும் பூக்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். உடனே நட்டால் இவற்றில் பாதிப்பு ஏற்படும். ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் சைக்கோசில் வீதம் கலந்த கலவையில் கிழங்குகளை நேர்த்தி செய்து நட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.

நடவு இடைவெளி 30×30 செ.மீ. இருக்க வேண்டும். ஒவ்வொரு 5-6 வரிசைக்குப் பிறகு, 60 செ.மீ. இடைவெளி விட்டால், பூக்களைப் பறிக்கவும், பிற வேலைகளைச் செய்யவும் ஏதுவாக இருக்கும். ஜூன் ஜூலையில் 10-15 நாட்கள் இடைவெளியில் 3-4 முறை விட்டு விட்டு நடவு செய்தால் சீரான அறுவடை ஆண்டு முழுவதும் கிடைக்கும். ஒரு எக்டர் நடவுக்கு 1,11,000 கிழங்குகள் தேவை.

பாசனம்

நடவுக்குப் பிறகு உயிர்நீர் அவசியம். அதேநேரம் மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் கிழங்கின் வளர்ச்சிப் பாதிக்கும். எனவே, கோடையில் ஒருவார இடைவெளி, குளிர்காலத்தில் 10 நாட்கள் இடைவெளியில் பாசனம் கொடுக்க வேண்டும்.

உர நிர்வாகம்

நடவுக்கு 2-3 வாரம் இருக்கும் போதே எக்டருக்கு 25 டன் தொழுவுரம், ஒரு டன் வேப்பம் புண்ணாக்கு, 2 கிலோ கார்போபியூரான் மருந்து ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். மேலும், 434 கிலோ யூரியா, 1250 கிலோ சூப்பர் பாஸ்பேட், 334 கிலோ பொட்டாசும் தேவை. அதாவது, கடைசி உழவின் போது சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாசை முழுமையாகவும், யூரியாவில் மூன்றில் ஒரு பகுதியையும் அடியுரமாக இடவேண்டும். மீதமுள்ள யூரியாவை நட்ட 60 மற்றும் 90 ஆம் நாளில் இருபாகமாகப் பிரித்து மேலுரமாக இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

கிழங்கின் உறக்க நிலையைத் தடுப்பதற்கு, 4% தயோயூரியா கரைசலில் ஒருமணி நேரம் அல்லது 1000 பிபிஎம் கரைசலில் 6 மணி நேரம் ஊற வைத்தால், செடிகள் நன்கு வளர்ந்து விரைவில் பூத்து நல்ல மகசூலைக் கொடுக்கும். சைக்கோசெல் என்னும் வளர்ச்சி ஊக்கியை 1000-2000 பிபிஎம் அளவில் இருமுறை தெளித்தால் இலைகளும் பூங்கொத்துகளும் அதிகரிக்கும். நடவு செய்த 40, 55, 70 நாட்களில் ஜிப்ரலிக் அமிலத்தை 25-100 பிபிஎம் அளவில் தெளித்தால், அதிகப் பூக்கள் உள்ள பூங்கொத்துகள் கிடைக்கும்.

பின்செய் நேர்த்தி

சம்பங்கியில் களையைக் கட்டுப்படுத்த, எக்டருக்கு பென்டிமெத்தலின் அல்லது டையுரான் 1.25 கிலோ அல்லது அட்ரசின் 3 கிலோ அல்லது கிரமக்சோன் 3.0 லிட்டர் வீதம் நடவுக்கும் முன்னும், பிறகு 40 நாட்களுக்கு ஒரு தடவையென மூன்று முறையும் தெளிக்கலாம். ஆனால், களைக்கொல்லித் தெளிப்பைத் தவிர்த்தல் நல்லது. பூக்கள் மலர்ந்த பின் வாடிய இலைகளை, பூங்கொத்துகளை அகற்றிவிட வேண்டும்.  இதனால் பக்கக் கன்றுகளிலிருந்து மலர்கள் பூக்கும்.

அறுவடை

நடவு செய்த 2-4 மாதம் கழித்துப் பூக்கத் தொடங்கும். உதிரி மலராகப் பயன்படுத்த, அடுத்த நாள் மலரும் மொட்டுகளைப் பறிக்க வேண்டும். கொய்மலராகப் பயன்படுத்த, பூங்கொத்துடன் பறிக்க வேண்டும். மெழுகுத் தயாரிப்புக்கு, காலை 8 மணிக்குள் பூக்கும் பூக்களைப் பறிக்க வேண்டும்.

கிழங்குச் சேகரிப்பு

பூத்து முடிந்த செடிகளில் வளர்ச்சி முடிந்தால் கிழங்குகள் முற்றி, உறக்க நிலையில் இருக்கும். எனவே, பாசனத்தை நிறுத்தி நிலத்தைக் காயவிட்டு, கிழங்குகளைத் தோண்டியெடுக்க வேண்டும். பிறகு, அவற்றிலுள்ள மண், வேர்கள் மற்றும் வெளித்தோலை நீக்கிவிட்டு, அவற்றின் அகலத்தைப் பொறுத்துத் தரம் பிரித்து, குளிர்ந்த, உலர்ந்த, நிழலில் குவித்து வைக்க வேண்டும்.

அறுவடைக்குப் பிந்தைய பணிகள்

ஒரு தாய்க்கிழங்கில் இருந்து ஓராண்டில் 15-20 கிழங்குகள் கிடைக்கும். இவற்றை அளவுக்குத் தகுந்தபடி பிரிக்க வேண்டும்.

வாசனைப் பொருள்: நல்ல மணமுள்ள மலர்களில் 0.08-0.14% வாசைனப்பொருள் இருக்கும். இதிலிருந்து பிரிக்கப்படும் சுத்தமான பொருள் வாசனை எண்ணெய். இது உலகச் சந்தையில் அதிக விலைக்குப் போகும். இது, ஓரடுக்கு மலர் வகைகளான சிருங்கார், பிரஜ்வால், அர்கா நிரந்தரா, மெக்சிகன் சிங்கிள் போன்றவற்றில் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மெக்சிகன் சிங்கிளில் அதிகமாகக் கிடைக்கும்.


சம்பங்கி DR.K.KAVITHA

முனைவர் கு.கவிதா,

முனைவர் கா.திருக்குமரன், வேளாண்மை அறிவியல் நிலையம், 

திருப்பதிசாரம், கன்னியாகுமரி-629901.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!