My page - topic 1, topic 2, topic 3

விவசாயிகளுக்கு உதவும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி வட்டம், மாலங்குடியைச் சேர்ந்தவர் ச.விஜயன். 46 வயதாகும் இவர் முதுகலைப் பட்டதாரியாவார். ஆனாலும், விவசாயத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமாக, குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலான விவசாயத்தை 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தின் அடிப்படையில் செய்து வருகிறார். மேலும் இவர், கடந்த சில ஆண்டுகளாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் விவசாய ஆலோசனைகளையும் தனது சாகுபடியில் பயன்படுத்தி வருகிறார். விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, பெற்றோரைக் காப்பாற்றி வரும் விஜயன், தன் தம்பி, தங்கைகளைப் படிக்க வைத்து அவர்களுக்குத் திருமணமும் செய்து வைத்துள்ளார்.

மேலும், முழுநேர விவசாயியான இவர், 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல், ஊர் மக்களுக்கு உதவும் வகையில் சமூகப் பணிகளிலும் முழு மனதுடன் ஈடுபட்டு வருகிறார். இவரை அண்மையில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

“எங்களுக்கு 5 ஏக்கர் நிலமுள்ளது. இதில், பருத்தி, மிளகாய், நெல், காய்கறிப் பயிர்கள் போன்றவற்றைச் சாகுபடி செய்து வருகிறோம். என்னுடைய அப்பாவும் அம்மாவும் எனக்குத் துணையாக உள்ளனர். எங்கள் ஊரான மாலங்குடியில் 150 குடும்பங்கள் உள்ளன. இந்த ஊர் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் தான். தொடக்கப்பள்ளி மட்டும் எங்கள் ஊரில் உள்ளது. ஆறாம் வகுப்பு படிக்க வேண்டுமென்றால் ஏழு கிலோ மீட்டர் பேருந்தில் போக வேண்டும்.

நாங்கள் எங்களுக்குத் தேவைப்படும் விவசாய ஆலோசனைகளைப் பெற வேண்டுமென்றால், எங்கள் ஊரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள வேளாண்மை, தோட்டக்கலை விரிவாக்க மையங்களுக்குச் செல்ல வேண்டும். இது நடைமுறையில் மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்நிலையில், வேளாண் அலுவலர் ஜெயக்கொடி மூலம், விவசாய ஆலோசனைகளை வழங்கும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இலவசத் தொலைபேசி எண் கிடைத்தது.

இந்த எண் மூலம் என்னுடைய செல்பேசி எண்ணைப் பதிவு செய்து, கடந்த நான்காண்டுக் காலமாக ரிலையன்ஸ் அறக்கட்டளையின் விவசாய ஆலோசனைகளைக் குறுஞ்செய்திகளாகப் பெறுகிறேன். மேலும், வீடியோ ஆடியோ கலந்துரையாடல்கள் மூலம், மண்வளப் பயிற்சி, பூச்சி மருந்தில்லா மிளகாய் சாகுபடி, பருத்திக் கூடுகளை எருவாக்குதல், கறவைமாடு வளர்ப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று அவற்றை என்னுடைய விவசாயத்தில் பயன்படுத்தி வருகிறேன். இதனால் அனுபவ விவசாயியான நான் நவீன விவசாய உத்திகளையும் அறிந்து வைத்துள்ளேன்.

பருத்தி சாகுபடிக்கான செல்பேசி குறுஞ் செய்திகளில் 70% செய்திகளைப் எனது பருத்தி சாகுபடியில் பயன்படுத்தி உள்ளேன். பருத்தியில் நீர் நிர்வாகம், கற்றாழைப் பூச்சி, தத்துப்பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றை, ரிலையன்ஸ் அறக்கட்டளை ஆலோசனை மூலம் அறிந்து என் நிலத்தில் கடைப்பிடித்தேன். இப்படி முறையாகச் செய்ததால் எனது பயிரில் பூச்சி, நோய்த் தாக்குதல் கட்டுக்குள் இருந்தது. இதனால், 1.5 ஏக்கர் பருத்தி சாகுபடியில் 25,000-30,000 ரூபாய் நிகர வருமானமாகக் கிடைத்தது.

அரை ஏக்கர் குண்டு மிளகாய் சாகுபடியில், ரிலையன்ஸ் அறக்கட்டளை விவசாய வல்லுநரின் ஆலோசனைப்படி, சாகுபடி மற்றும் பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தேன். அதனால், 10,000-15,000 ரூபாய் வரை செலவு செய்தேன். இதில், 50,000-60,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. இப்படி, ரிலையன்ஸ் அறக்கட்டளை விவசாய வல்லுநர்களிடம் நான் கற்ற தொழில் நுட்பங்களை, மற்ற விவசாயிகளும் பயன்படும் வகையில் எடுத்துக் கூறி வருகிறேன்.

ரிலையன்ஸ் அறக்கட்டளை இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு உள்ள விவசாயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில், பருத்திக்கும், மிளகாய்க்கும் போதுமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எல்லோரும் சேர்ந்து கோரிக்கை வைத்தோம். இதை ஏற்றுக்கொண்ட ரிலையன்ஸ் அறக்கட்டளை, நாங்கள் விளைய வைக்கும் பருத்தியையும் மிளகாயையும் எங்களுக்குக் கட்டுபடியாகும் விலைக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையே எடுத்துக் கொள்வதாக உறுதி கூறியுள்ளது.

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இந்த முடிவு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஏனெனில், நாங்கள் இயற்கையை நம்பிப் பயிர் செய்கிறோம். அது பல நேரங்களில் விவசாயிகளை ஏமாற்றி விடுகிறது. இதையெல்லாம் தாங்கித் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதைப் போல, காலநேரமில்லாமல் இரவு பகலாக உழைக்கிறோம். இதற்கெல்லாம் நியாயமான பயன் எங்களுக்குக் கிடைத்தால் தான் நாங்கள் தொடர்ந்து இந்த மண்ணில் போராட முடியும். அதனால், ரிலையன்ஸ் அறக்கட்டளை எங்களின் நிலையை உணர்ந்து உதவ முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியது.

ரிலையன்ஸ் அறக்கட்டளை என்பது விவசாயக் குடும்பங்கள் வாழ, நல்லதை மட்டும் செய்யும் பண்பட்ட நிலமாகும். என்னைப் போன்ற விவசாயிகள் எல்லோரும் இந்த நிலத்தில் உழவடித்து, பயிர் செய்து, நல்ல பயனைப் பெற வேண்டும் என்பது எனது ஆசை. ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் அன்றாடம் கிடைக்கின்ற செல்பேசிக் குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் தகவல்கள், வானிலைச் செய்திகள் முற்றிலும் நம்பகத் தன்மையுடன் உள்ளன. பொதுமக்கள் அனைவருக்கும் இந்தச் செய்திகளைக் கொண்டு செல்ல வேண்டும். ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவித் தொலைபேசி எண் 1800-419-8800 அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது’’ என்றார்.


பொ.பாண்டி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks