எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

எலித் தொல்லை rat Copy e1611946125231

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019

மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எலி. அறிவும் தந்திரமும் கொண்ட உயிரினம். உலகளவில் 2,000 எலி வகைகளும் இந்தியாவில் 104 வகைகளும் உள்ளன. உலகிலுள்ள பாலூட்டி இனங்களில் 40 சதம் எலியினங்கள் தான்.

எலிகள் ஏற்படுத்தும் சேதம்

தானிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு எலிகளால் சேதமாகிறது. உண்பதை விட, இவற்றின் சிறுநீர், புழுக்கை, உரோமங்கள் மற்றும் நாற்றத்தின் மூலம் சேதமாவதே அதிகம். சேமிப்பில், 30% உணவுப் பொருள்கள் சேதமாகின்றன.

பரவும் நோய்கள்

மனிதர்கள் மற்றும் கால்நடைகளைக் கடிப்பதாலும், உணவுப் பொருள்களில் எலிக்கழிவுகள் கலப்பதாலும், எலிகளால் சேதமான தானியங்கள் மற்றும் நீரை உண்பதாலும், ஃப்ளேக், லெப்டோஸ்பைரோசிஸ், சால்மோனெல்லோசிஸ் என 40க்கும் மேற்பட்ட நோய்கள் பரவுகின்றன.

எலிகளின் வாழ்க்கை

எலிகள் 2-3 ஆண்டுகள் வாழும். ஆண்டுக்கு 5-6 முறை குட்டிகளை ஈனும். சினைக்காலம் 19-21 நாட்கள். ஒரு ஈற்றில் 4-12 குட்டிகளைப் போடும். பிறந்த எலிக்குட்டி 60 நாளில் இனவிருத்திக்குத் தயாராகி விடும். ஒரு ஜோடி எலிகள் தமது சந்ததிகள் மூலம் ஓராண்டில் 2,046 எலிகளை உற்பத்தி செய்யும். அதாவது, ஓர் ஈற்றில் 3 ஆண்: 3 பெண் என்னும் விகிதத்தில், ஆண்டுக்கு 5 முறை குட்டிகளை ஈனும் என்னும் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

பல் வளர்ச்சி

பிறந்து 10 நாளிலேயே எலிகளுக்குப் பற்கள் முளைத்து விடும். பற்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கும். முன்வெட்டுப் பற்கள் தினமும் 0.40 மி.மீ. வளரும். மாதத்தில் 1.2 செ.மீ. வரையும், ஓராண்டில் 15 செ.மீ. வரையும் வளரும்.

எலிகளின் குணங்கள்

ஒரு எலி தினமும் 30-50 கிராம் உணவு, 40 மில்லி நீரை உண்ணும். உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் உயிர் வாழும். நீர் இல்லாத போது பனித்துளிகளை உறிஞ்சிக் குடிக்கும். நமக்குக் கேட்கும் ஒலி மற்றும் கேட்க முடியா நுண் ஒலியை எலிகள் எழுப்பும். அறிவுள்ள எலிகளிடம் சந்தேகக் குணமும் நிறைய இருக்கும். புதிய பொருளை எளிதில் தீண்டாது. பெருச்சாளி 3 வாரங்களுக்கும், வயலெலி 4 மாதங்களுக்கும், வீட்டெலி ஓராண்டுக்கு மேலும், சந்தேகங்களை நினைவில் வைத்திருக்கும்.

எலி வளை பொதுவாக 40-520 செ.மீ. நீளம், 25-115 செ.மீ. ஆழம், 8-15 செ.மீ. விட்டத்தில் இருக்கும். இதில், 1-4 தரைமட்ட வாசல்கள் இருக்கும். இந்த வளையில், வசிக்க, உணவைச் சேமிக்க எனப் பல அறைகள் இருக்கும். உணவறையில் 2-5 கிலோ நெல் மற்றும் 2 கிலோ பயற்றைச் சேமித்து வைக்கும். மேலும், இதில் 4-5 அவசர வழிகளும் இருக்கும். ஆபத்தான நிலையில் இந்த வழிகள் மூலம் தப்பித்து விடும். தமிழகத்தில் உள்ள எலிகளைப் பற்றிப் பார்ப்போம்.

இந்திய வயலெலி அல்லது கரம்பெலி

உடல் பருத்திருக்கும். தலை மற்றும் கண் சிறிதாகவும், முகம் பன்றியைப் போன்றும் இருக்கும். வட்டமான பெரிய காதுகள், உரோமங்கள் இல்லாமல் இருக்கும். இது, 300-500 கிராம் எடையில் இருக்கும். ஓர் ஈற்றில் 6-18 குட்டிகளை ஈனும்.

புல்லெலி

உடலில் மெல்லிய உரோமங்கள் அடர்த்தியின்றி இருக்கும். வால் நுனி உரோமம் குஞ்சம் போல இருக்கும். எடை 100 கிராம் இருக்கும். நஞ்சை, புஞ்சை மற்றும் புல் தரையில் சிறிய வளைகளில் குடியிருக்கும். 2-8 குட்டிகளை ஈனும்.

வயல் சுண்டெலி

வால் குட்டையாக இருக்கும். எடை சராசரியாக 10 கிராம் இருக்கும். வயல் எலிகளிலேயே இதுதான் மிகவும் சிறியது. 5 குட்டிகள் வரை ஈனும்.

வெள்ளெலி

இதற்குப் பெரிய உருண்டைக் கண்கள், காதுகள் இருக்கும். கால்கள் நீளமாக, வெள்ளையாக இருக்கும். வால் நுனியில் கொத்தாக உரோமங்கள் இருக்கும். எடை 150 கிராம் இருக்கும். ஓர் ஈற்றில் 9 குட்டிகள் வரை ஈனும்.

பெருச்சாளி

பெரிய தலை, கூரிய முகம், அடர் மீசையுடன் இருக்கும். காது சிறிதாக, வட்டமாக இருக்கும். புருவம் வெள்ளையாக, கண் சிறிதாக இருக்கும். வாலில் செதிலைப் போன்ற உரோமங்கள் இருக்கும். இது 500-1,000 கிராம் மற்றும் அதற்கு மேலும் இருக்கும். ஓர் ஈற்றில் 5-18 குட்டிகளை ஈனும்.

வீட்டுச் சுண்டெலி

பழுப்பு நிறத்தில் சிறிதாக இருக்கும். தலை மற்றும் உடலின் நீளத்தை விட  வாலின் நீளம் அதிகம். காதுகள் வட்டமாக இருக்கும். எடை 150 கிராம் இருக்கும். தோட்டங்கள், சேமிப்புக் கிடங்குகள், வீடுகள் மற்றும் வீட்டின் பின்புறம் வாழும்.

எலிக் கட்டுப்பாடு

உழவியல் முறை: சாகுபடிக்கு முன் வரப்புகளை வெட்டி எலிகளை அழிக்க வேண்டும். எலிகள் மூச்சுத் திணறி இறக்க ஏதுவாக, நிலத்தை உழுமுன், வயலில் இருக்கும் எலி வளைகள் மூழ்குமளவில் நீரை நிரப்பி ஒருசில நாட்கள் நிறுத்தி வைக்க வேண்டும். எலிகள் வளைகளை அமைக்க முடியாதபடி வரப்புகள் குறுகலாக இருக்க வேண்டும். வயலுக்கருகில் வைக்கோல் படப்பும், வரப்புகளில் களையும் இருக்கக் கூடாது. கொத்தவரை, இஞ்சி, கற்றாழை மற்றும் சீமையகத்தியை நிலத்தைச் சுற்றிப் பயிரிட்டால், இவற்றின் வாசம் பிடிக்காமல் எலிகள் ஓடிவிடும்.

இயந்திரவியல் முறை: எலிகளை உயிருடன் பிடிக்கும் பானைப்பொறி, ஒட்டும் அட்டை பொறி, எலிகளைக் கொல்லும் தஞ்சாவூர்க் கிட்டி, மூங்கில் பொறி, இடுக்கிப் பொறி போன்றவற்றின் மூலம் எலிகளை அழிக்க வேண்டும்.

உயிரியல் முறை: வயலில் 1.2-1.8 மீட்டர் உயரமுள்ள குச்சிகளை நட்டு, பறவைத் தாங்கிகளை அமைத்து வைக்கலாம். இங்கே இரவில் வந்தமரும் ஆந்தைகள், எலிகளைப் பிடித்துண்ணும். இவ்வகையில், ஒரு கோட்டான் தினமும் 1-6 எலிகளைப் பிடித்து விடும்.

இரசாயன எலிக்கொல்லிகள்: உடன் கொல்லும் நச்சு மருந்து: துத்தநாக பாஸ்பைடு. இரத்தத்தை உறைய விடாமல் உடன் கொல்லும் நச்சு மருந்து: ப்ரோமோடையலான். புகைவழி எலிக்கொல்லி: செல்பாஸ் எனப்படும் அலுமினியம் பாஸ்பைடு, மீதைல்புரோமைட்.

ப்ரோமோடையலான் மருந்தின் சிறப்பு: இந்த மருந்தால் எலிகளுக்குப் பொறிக்கூச்சம் ஏற்படுவதில்லை. இதனால் 2-3 முறை கவர்ச்சி உணவை மட்டும் வைக்க வேண்டியதில்லை. ஒருமுறை உண்டாலே எலிகள் இறந்து விடும். மேலும், திறந்த வெளியில் எலிகள் இறந்து விடுவதால் அவற்றை அகற்றுவது எளிது. இதை வீடு மற்றும் வயல்களில் பயன்படுத்தலாம். இது, உடனே பயன்படும் மருந்தாக, தேங்காய் வில்லையைப் போலவும், கவர்ச்சி உணவுடன் கலந்து பயன்படுத்தும் தூளாகவும் கிடைக்கிறது. இதை ஒரு வளைக்கு அரை வில்லை அல்லது 3 மீட்டர் இடைவெளிக்கு ஒரு கட்டி வீதம் இட வேண்டும்.

ப்ரோமோடையலான் கவர்ச்சி விஷ உணவுத் தயாரிப்பு: 250 கிராம் கவர்ச்சி உணவு + 5 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெய் + 5 கிராம் ப்ரோமோடையலான் 0.25 சதம்.

நிலத்தில் கவர்ச்சி விஷ உணவை வைத்தல்: எலி வளை மற்றும் அவை நடமாடும் இடங்களில், அவற்றின் நச்சுக் கூச்சத்தைப் போக்கும் வகையில் 2-3 நாட்களுக்கு, விஷம் கலக்காத வெறும் கவர்ச்சி உணவை மட்டும் வைக்க வேண்டும். அடுத்து, ஒரு இடத்துக்கு 15-20 கிராம் வீதம் விஷம் கலந்த உணவை வைக்க வேண்டும். முதல் நாள் வைத்து மீதமிருக்கும் விஷ உணவை எடுத்து விட்டு, தினமும் புதிதாகக் கலந்த விஷ உணவை வைக்க வேண்டும்.

பக்கத்து வயல் எலிகள் நம் வயலுக்குள் வருவதைத் தடுக்க, எலி நடமாடும் இடங்களில் 10-15 மீட்டர் இடைவெளியில் விஷக் கலவையை வைக்க வேண்டும். விஷ உணவைத் திறந்து வைப்பது பாதுகாப்பற்றது என்பதால், பொட்டலமாகக் கட்டி வைக்கலாம். சரியான முறையில், சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே அதிகளவில் எலிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

பின்பற்ற வேண்டியவை

எலிக்கொல்லியை வைக்கும் நிலத்தில், குழந்தைகள், ஆடு, மாடு, கோழிகள் போன்றவை சென்று விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காற்றோட்டமுள்ள மற்றும் ஈரமில்லா இடத்தில் கலவையைத் தயாரிக்க வேண்டும். கையுறையை மாட்டிக் கொண்டு, மரக்கரண்டி, குச்சி, தேங்காய்ச் சிரட்டையில் நச்சுணவைக் கலக்க வேண்டும். வீட்டுப் பாத்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. தயாரித்த கலவையை உடனே வயலில் வைத்துவிட வேண்டும். மறுநாள் பயனுக்கென வைத்திருக்கக் கூடாது.

விஷ உணவைத் தயாரிக்கும் போது, சாப்பிடுதல், நீர் அருந்துதல், புகைப் பிடித்தல், மூக்குப்பொடி போடுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. மருந்துக் கலவையை வயலில் வைத்த பின் கைகளைச் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். வயலில் எஞ்சியிருக்கும் கலவை மற்றும் இறந்த எலிகளைக் குழியில் புதைக்க வேண்டும். துத்தநாகப் பாஸ்பைடு மருந்தை வீடுகளில் பயன்படுத்தக் கூடாது. தானிய மூட்டை, குதிர் மற்றும் கால்நடைகளுக்கு அருகில் விஷ மருந்தை வைக்கக் கூடாது. 


எலித் தொல்லை RAJA RAMESH N

முனைவர் இராஜா.ரமேஷ்,

முனைவர் மு.இராமசுப்பிரமணியன், வேளாண்மை அறிவியல் நிலையம், 

நீடாமங்கலம், திருவாரூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!