தரமான நெல் விதை உற்பத்தி!

நெல் விதை

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020

வேளாண்மைக்கு அடிப்படையான இடுபொருள் விதை. நெல் விதை உற்பத்தி நிலத்தில், முந்தைய பருவத்தில் வேறு இரக நெல்லைப் பயிரிட்டிருக்கக் கூடாது. இதனால், இனக்கலப்பை ஏற்படுத்தும் தான்தோன்றிப் பயிர்கள் முளைக்காது. தரமான விதைகளை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.

விதையளவு

குறுகிய காலத்துக்கு ஏக்கருக்கு 24 கிலோ, மத்திய காலத்துக்கு 16 கிலோ, நீண்ட காலத்துக்கு 12 கிலோ, நேரடி விதைப்புக்கு 24 கிலோ, திருந்திய நெல் சாகுபடிக்கு 3 கிலோ நெல் விதை தேவைப்படும்.

விதைத்தரம் உயர்த்தல்

சேமித்து வைக்கும் நெல் விதைகளின் எடையானது, சேமிப்புக் காலம், இடம், சூழ்நிலை, பூச்சி பூசணங்களால் மாறுபடும். உப்புக் கரைசலைப் பயன்படுத்தி இந்த விதைகளில் இருந்து, தரமான விதைகளைப் பிரிக்கலாம். இதற்கு முதலில் 15 லிட்டர் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் வாளியில் 10 லிட்டர் நீரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல கோழி முட்டையை இட வேண்டும். முட்டை நல்ல எடையுடன் இருப்பதால் நீரில் மூழ்கிவிடும். பின்பு சிறிது சிறிதாக உப்பைப் போட்டு கரைக்க வேண்டும். உப்புக் கரைந்து நீரின் அடர்த்தி அதிகமாவதால் முட்டை மேலே மிதந்து வரும். முட்டையின் மேற்பகுதி 25 பைசா அளவுக்கு நீரின் மேல் தெரிந்ததும், உப்பைப் போடாமல் நிறுத்தி விட வேண்டும். நீரின் இந்த அடர்த்தி, விதைகளைப் பிரிப்பதற்கு ஏற்றதாகும்.

உப்புக் கரைசலில் முதலில் 10 கிலோ விதைகளைச் சிறிது சிறிதாகப் போட வேண்டும். எடை குறைந்த நெல் விதைகள் மிதக்கும். எடையுள்ள தரமான விதைகள் கரைசலில் மூழ்கும். மிதக்கும் விதைகளை நீக்கி விட்டு, மூழ்கிய விதைகளைப் பயன்படுத்த வேண்டும். மூழ்கிய விதைகளை 2-3 முறை நீரில் கழுவி அவற்றில் படர்ந்துள்ள உப்பை நீக்க வேண்டும். பிறகு, அடுத்த 10 கிலோ விதைகளை இந்த உப்புக் கரைசலில் போட்டுத் தரம் பிரிக்கலாம்.

இப்படித் தரம் பிரித்த விதைகளை, ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் பெவிஸ்டின் அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் வீதம் கலந்து நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மானாவாரி மற்றும் நேரடி நெல் விதைப்புக்கு, ஒரு சத பொட்டாசியம் குளோரைடு கரைசலில் விதைகளை 20 மணி நேரம் ஊற வைத்து, பிறகு பழைய நிலைக்கு உலர்த்தி விதைக்க வேண்டும்.

நாற்றாங்கால்

எட்டு சென்ட் நிலத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். இதை எட்டுப் பாத்திகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். கடைசி உழவின் போது நன்கு மட்கிய ஒரு வண்டி தொழுவுரத்தை இட வேண்டும். ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 2 கிலோ வீதம் டிஏபி உரத்தை இட வேண்டும். குறுகிய கால நடவுக்கு 18-22 நாட்கள், மத்திய கால நடவுக்கு 25-30 நாட்கள், நீண்ட கால நடவுக்கு  35-40 நாட்கள் வயதுள்ள நாற்றுகளை நட வேண்டும்.

வயல் தயாரிப்பு

ஏக்கருக்கு நன்கு மட்கிய 20 வண்டி தொழுவுரம் வீதம் இட வேண்டும். பிறகு நீரைப் பாய்ச்சி 2-3 முறை நன்றாக உழ வேண்டும். கடைசி உழவுக்கு முன், நடப்போகும் இரகத்துக்கு ஏற்றவாறு, யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாசை அடியுரமாக இட வேண்டும். துத்தநாகக் குறையுள்ள நிலத்தில், நடவின் போது ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட்டை இட வேண்டும்.

இடைவெளி

குறுகிய கால சாகுபடிக்கு 15×10 செ.மீ., மத்திய கால, நீண்ட கால சாகுபடிக்கு 20×10 செ.மீ. இடைவெளி கொடுக்க வேண்டும். குத்துக்கு 1-2 நாற்றுகளை நட வேண்டும். ஆதார விதை மற்றும் சான்று விதை உற்பத்திக்கான பயிர் விலகு தூரம் 3 மீட்டர் இருக்க வேண்டும்.

உர நிர்வாகம்

காவிரிப் பாசனப் பகுதி மற்றும் கோவைப் பகுதியில் குறுகிய கால சாகுபடிக்கு, தழை, மணி, சாம்பல் சத்தை 150:50:50 கிலோ இட வேண்டும். மற்ற பகுதிகளில் 120:40:40 கிலோ இட வேண்டும். மத்திய மற்றும் நீண்ட கால சாகுபடிக்கு 150:50:60 கிலோ இட வேண்டும். எக்டருக்கு 500 கிலோ ஜிப்சத்தையும் அடியுரமாக இட வேண்டும்.

பாசனம்

நடவு முடிந்து ஒருவாரம் வரை 2 செ.மீ. நீர் இருக்க வேண்டும். முப்பதாம் நாள் வயலிலுள்ள நீர் முழுவதையும் வடித்து விட்டு, அதே நிலையில் ஓரிரு நாட்கள் வைத்திருக்க வேண்டும். இதனால், மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி வேர் நன்கு வளரும். தூர்கள் வெடிக்கும் போது 5 செ.மீ. நீர் இருக்க வேண்டும். பூட்டை வரும் போது, பூக்கும் போது, பால் பிடிக்கும் போது, நீர்த் தட்டுப்பாடு இருக்கக் கூடாது. ஏனெனில், நெல் மணியின் எடை குறைந்து விளைச்சல் பாதிக்கும். அறுவடைக்கு 15 நாட்கள் முன்பு, நீரைச் சீராக வடித்துவிட வேண்டும்.

களை நிர்வாகம்

நடவு முடிந்து மூன்று நாட்கள் கழித்து ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் புட்டோகுளோர் அல்லது ஏக்கருக்கு 0.48 லிட்டர் வீதம் பிரிட்டிளாகுளோர் களைக்கொல்லியை இட வேண்டும். நடவு முடிந்து 15-20 நாட்கள் கழித்து ஏக்கருக்கு 100 மில்லி வீதம் நாமினிகோல்டு களைக்கொல்லியை இட வேண்டும். களைக்கொல்லியை இட்டிருந்தால் 30-35 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். இல்லையேல் நட்ட 15-20 நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.

வயல் தரம்

ஆதார விதை உற்பத்தியில் அதிகளவாக 0.05% கலவன்களும், 0.01% அனுமதிக்க முடியாத களைகளும் இருக்கலாம். சான்று விதை உற்பத்தியில் அதிகளவாக 0.2% கலவன்களும், 0.02% அனுமதிக்க முடியாத களைகளும் இருக்கலாம்.

கலவன்களை அகற்றுதல்

பயிர்கள் பூப்பதற்கு முன், அதிக உயரம் மற்றும் குட்டையான பயிர்கள், சீக்கிரமாகப் பூக்கும் பயிர்கள், இலைகளின் நிறத்தில் மாற்றமுள்ள பயிர்களை நீக்க வேண்டும். பூக்கும் போது, மிகவும் தாமதமாகப் பூக்கும் பயிர்கள், பொட்டு நெல், இலையின் அமைப்பு மாறியுள்ள பயிர்களை அகற்ற வேண்டும். அறுவடைக்கு முன்பும், அறுவடையின் போதும், மீசை நெல், விதைப்பயிர் மணியிலிருந்து மாறுபடும் விதைகளை நீக்க வேண்டும்.

இலைவழி உரம்

இலைவழி உரமாக டிஏபி கரைசலைத் தெளித்தால் மகசூல் கூடும். குறுகிய கால சாகுபடியில், 60, 80 ஆகிய நாட்களில் இந்தக் கரைசலைத் தெளித்தால் ஏக்கருக்கு 350 கிலோ நெல் கூடுதலாகக் கிடைக்கும். மத்திய கால சாகுபடியில், 80, 100 ஆகிய நாட்களில் இக்கரைசலைத் தெளித்தால் 300 கிலோ நெல் கூடுதலாகக் கிடைக்கும். மேலும், பூச்சி, நோய்களில் இருந்தும் பயிர்களைக் காக்க வேண்டும்.

அறுவடை

குறுகிய கால நெற்பயிர்கள் பூத்த 30 நாட்களிலும், மத்திய மற்றும் நீண்ட கால நெற்பயிர்கள் பூத்த 40 நாட்களிலும் அறுவடை செய்ய வேண்டும். அப்போது 80% விதைகள் தங்க மஞ்சள் நிறத்தில் இருக்கும். விதைகளின் ஈரப்பதம் 17-20% இருக்கும். இந்த விதைகளை காயமின்றிப் பிரிக்க வேண்டும். கதிரடிக்கும் இயந்திர உருளையின் வேகம், உருளைக்கும், கட்டுக்குமான இடைவெளி சரியாக இருந்தால் தான் விதைகள் காயமின்றி இருக்கும்.

உலர்த்துதல்

விதைகளை முறைப்படி உலர்த்த வேண்டும். இல்லையேல், விதைகள் சூடேறி முளைப்புத்திறன் குறையும். தினமும் காலை 8-12 மணி வரையிலும், மாலை 3-5 மணி வரையிலும் வெய்யிலில் உலர்த்தலாம். 12-3 மணி வரை சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சும், வெப்பமும் அதிகமாக இருப்பதால், விதையின் தரம் பாதிக்கப்படும்.

சேமிப்பு

நெடுநாட்களுக்குச் சேமிக்க ஏதுவாக, விதைகளின் ஈரப்பதத்தை 10 சதமாகக் குறைக்க வேண்டும். பிறகு, ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கார்பென்டாசிம் வீதம் கலக்க வேண்டும். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம். அதாவது, காற்றுப்புகாத புட்டியில், பிளீச்சிங் பொடியையும் கால்சியம் கார்பனேட்டையும் சமமாகக் கலந்து ஒருவாரம் வைத்திருந்து, அந்தக் கலவையை ஒரு கிலோ விதைக்கு 5 கிராம் வீதம் கலந்து சேமிக்க வேண்டும். குளோரினேற்றம் என்பது சூழலை மாசுபடுத்தாத விதைநேர்த்தி முறையாகும்.

ஈரக்காற்று நிறைந்த கடலோரம் மற்றும் நதியோரப் பகுதியில், ஈரக்காற்றுப் புகாத பைகளில் விதைகளைச் சேமிக்க வேண்டும். 700 அடர்வுள்ள நெகிழிப் பைகள் இதற்குச் சரியாக இருக்கும். புதிய பைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு அடுக்கில் 6-7 பைகளுக்கு மேல் அடுக்கக் கூடாது. ஏனெனில், அதிகளவில் பாரத்தை ஏற்றினால் அடி மூட்டையில் இருக்கும் விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கும். மூட்டைகளை மரக்கட்டைகள் அல்லது தார்ப்பாய்கள் மீது அடுக்க வேண்டும். இதனால், தரை மற்றும் சுவரிலுள்ள ஈரப்பதம், விதைகளில் பரவாமல் இருக்கும். மேலும், மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாற்றி அடுக்க வேண்டும்.

இடைக்கால விதை நேர்த்தி

தேவைக்கெனச் சேமித்து வைத்திருக்கும் நெல் விதைகளை 3-4 மாதங்கள் கழித்து, ஊற வைத்து உலர வைக்கும் முறை மூலம் நேர்த்தி செய்யலாம். இதற்கு டை-சோடியம் பாஸ்பேட் என்னும் இரசாயன மருந்தை 100 லிட்டர் நீருக்கு 3.6 கிராம் வீதம் கரைத்து, ஒரு பங்கு விதைக்கு இரு பங்கு கரைசல் என எடுத்து, அதில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து, பின்பு பழைய நிலைக்குக் காய வைக்க வேண்டும். இதனால், நெல் விதைகளின் சேமிப்புத்திறன் அதிகமாகும்.


முனைவர் .புனிதவதி,

முனைவர் சா.இளமதி, முனைவர் பி.ஆனந்தி, முனைவர் வெ.அம்பேத்கார், 

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!