கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019
கால்நடை வளத்தில் கோழியினத்துக்கு முக்கிய இடமுண்டு. கிராமங்களில் இன்றளவும் புறக்கடை கோழிவளர்ப்பு இருந்து வருகிறது. வீரிய இறைச்சிக் கோழிகள், முட்டைக்கோழிகள், நாட்டுக்கோழிகள், காடைகள், வாத்துகள், சீமை வாத்துகள், வான்கோழிகள், கின்னிக்கோழிகள் ஆகியன, வணிக நோக்கில் கொட்டகை முறையில் வளர்க்கப்படுகின்றன. கோழி வளர்ப்பில் தீவனச் செலவு மட்டும் 65-70% ஆகி விடுகிறது. கோழிகளுக்கான சிறப்புத் தீவனங்களைப் பண்ணையாளர்கள் சொந்தமாகத் தயாரித்து அல்லது தீவன உற்பத்தி நிறுவனங்களிடம் வாங்கிக் கொடுக்கின்றனர்.
பெரிய பண்ணைகளில் அதிகளவில் இருப்பு வைக்கப்படும் கோழித் தீவனத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் தீவனத்தின் தரம் குறைந்து, கோழிகளின் வளர்ச்சி, உற்பத்தி, உடல் நலத்தைப் பாதித்து, இறப்பு வரை சென்று, பண்ணையைப் பேரிழப்புக்கு உள்ளாக்கி விடும். சரியான பாதுகாப்பு முறைகளால், தீவனத்திலுள்ள சத்துகளின் அளவைத் தக்க வைத்தால் தான் தரமான தீவனத்தைப் பெற முடியும்.
கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் காரணிகள்
கொட்டகைக்கும் தீவன அறைக்கும் இடையிலான தூரம்: இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள தொலைவு குறைவாக இருக்க வேண்டும். சிறிய பண்ணைகளில் கோழிக் கொட்டகைக்கு உள்ளேயே தீவனச் சேமிப்புக்காகச் சிறிய அறை ஒதுக்கப்பட்டிருக்கும். பெரிய பண்ணைகளில் தீவனச் சேமிப்புக்கு எனத் தனி அறை இருக்கும். மிகப் பெரிய பண்ணைகளில் சைலோ என்னும் தீவனச் சேமிப்புக் கலனில் தீவனம் சேமிக்கப்படும். இவை கோழிக் கொட்டகைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும்.
தீவனச் சேமிப்பு வசதி: தீவனச் சேமிப்பு வசதி என்பது, தீவனத்தை வாங்கியதிலிருந்து கோழிகளுக்குக் கொடுக்கும் வரையுள்ள நிலையாகும். முறையற்ற சேமிப்பால் தீவனத்தில் பூஞ்சைகள் பெருகும். இந்நிலையில் உள்ள தீவனத்தைக் கோழிகளுக்குக் கொடுத்தால், நோய்த் தாக்கம், உற்பத்தி இழப்பு மற்றும் கோழிகள் இறப்பும் மிகும். தீவனத்திலுள்ள சத்துகள், தீவனப் பாதுகாப்பு முறைகள் மற்றும் கிடங்கிலும் வெளியிலும் நிலவும் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு ஏற்ப, தீவனச் சேமிப்புக் காலம் மாறுபடும். காற்றிலுள்ள வெப்பநிலை மற்றும் ஈரப்பத்தின் அளவு, கோழித் தீவனத்தின் நிலையைப் பெரிதும் பாதிக்கும்.
தீவனச் சேமிப்புக் கலன்: சைலோ என்னும் தீவனச் சேமிப்புக் கலனில் தீவனத்தைச் சேமித்தால், நண்பகலில் சூரிய வெப்பம் கலனில் அதிகமாகப் படும். இது, தீவனத்திலுள்ள புரதம் கெட்டுப் போகக் காரணமாக இருப்பதால், தீவனத்திலுள்ள சத்துப் பொருள்கள் குறைய வாய்புள்ளது. அதிக வெப்பமுள்ள நாடுகளில் பயன்படும் நெளிதாள் (Corrugateal Sheet) சேமிப்புக்கலனில், வெப்பம் வெளியேறி விடுவதால் தீவனம் கெட்டுப் போவதில்லை.
சேமிப்பு அறையில் தேவையான வசதிகள்: சேமிப்பு அறையைச் சூரியவொளியும் மழையும் நேரடியாகத் தாக்கக் கூடாது. சரியான அளவில் காற்றோட்டமும் குளிர்ச்சியும் இருக்க வேண்டும். தீவனம் உலர்நிலையில் இருக்க வேண்டும். புழு, எலி மற்றும் பூச்சித்தொல்லை இருக்கக் கூடாது. மரக்கட்டைகள் அல்லது கற்களை வைத்து அவற்றின் மேல் தீவன மூட்டைகளை அடுக்கி, தீவனத்தில் நீர் சேர்ந்து பூஞ்சை உற்பத்தி இல்லாமல் பாதுகாக்க வேண்டும். வேதிப்பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்கள் இல்லாமல் தீவனத்தைத் தனியாகச் சேமிக்க வேண்டும்.
சேமிப்பு நிலை: முறையற்ற தீவனச் சேமிப்பால், தீவனத்திலுள்ள முக்கிய சத்துகளான வைட்டமின்கள், அவசியமான கொழுப்பு அமிலங்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ஸ் என்னும் ஆக்ஸிஜனேற்றப் பொருள்கள் குறைந்து, கோழிகளின் வளர்ச்சியும் உற்பத்தியும் பாதிப்பதால் பண்ணை இழப்பைச் சந்திக்கும். மழைநீர் அல்லது சாரலினால் தீவனத்தில் ஈரத்தன்மை அதிகரித்துப் பூஞ்சைக் காளான் வளர்ந்து நச்சுப் பொருள்கள் உற்பத்தியால் தீவனம் கெட்டு விடும்.
பாலைவன நாடுகளில் உள்ள சைலோ தீவனச் சேமிப்புக் கலன்களில் வெப்பக்காப்பு (Insulation) செய்யப்படுகிறது. இவற்றில் இரவில் வெப்பநிலைக் குறைவால் நீர்த்துளிகள் உண்டாவதும் தடுக்கப்படுகிறது. ஏனெனில், நீர்த்துளிகளால் கலனின் உள்சுவர் மற்றும் தீவன மேலடுக்கில் கட்டிகள் உண்டாகி, தீவனத்தில் பூஞ்சை உற்பத்தி, சத்துக்குறை உண்டாகும்.
கலன்களின் எண்ணிக்கை
கோழிகளின் எண்ணிக்கை மற்றும் தீவன அளவுக்கு ஏற்ப, சைலோ தீவனச் சேமிப்புக் கலன்களைத் தேர்வு செய்த பிறகு, அவற்றின் எண்ணிக்கையை முடிவு செய்யலாம். இது தீவன உற்பத்தி மற்றும் தீவன விநியோக நேரத்தைப் பொறுத்தது. பண்ணையில் பயன்படுத்தும் தீவன வகைகளைப் பொறுத்தும், தீவனத்தைத் தனியாக வழங்குவதா அல்லது மூலப் பொருள்களுடன் சேர்த்து வழங்குவதா என்பதைப் பொறுத்தும், எத்தனை சைலோ கலன்கள் தேவை என்பதை முடிவு செய்யலாம்.
எடுத்துக்காட்டாக, இறைச்சிக்கோழி இனவிருத்திப் பண்ணைகளில், சேவல்கள் மற்றும் பெட்டைகளுக்குத் தனியாகத் தீவனம் அளிக்கும்போது, இரண்டு வகையான சைலோ தீவனச் சேமிப்புக் கலன்கள் பயன்படுகின்றன. முட்டைக்கோழி இனவிருத்திப் பண்ணைகளில் ஒரே வகையான சைலோ தீவனச் சேமிப்புக் கலன் பயன்படுகிறது.
தீவனத்தை நிரப்பும் முறைகள்
காற்றழுத்த முறை: தீவன நிரப்பும் முறைகளைப் பொறுத்து, சைலோ தீவனக் கலனில் சேமிக்கும் தீவனத்தின் தரம் இருக்கும். காற்றழுத்தத் தீவன நிரப்பும் முறையில் பெரிய தீவனத் துகள்கள் மற்றும் சிறிய தீவனத் துகள்கள் எனப் பிரிய வாய்ப்பிருப்பதால் சில தீவனக்கலன் உற்பத்தியாளர்கள், தீவனத் துகள்கள் ஊதும் ஓட்டைக்கு அருகே நீர்த்தடுப்பிகளை அமைக்கின்றனர். இதனால் பெரிய மற்றும் சிறிய தீவனத் துகள்கள் சமமாகப் பரவி ஒரே சீராகத் தீவனம் இருக்கும்.
இயந்திர முறை: இம்முறையில் பெரிய மற்றும் சிறிய தீவனத் துகள்கள் பிரியாமல் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும்.
தீவனக் கலனிலிருந்து தீவனத்தை எடுத்தல்
சேமிப்புக் கலனிலிருந்து தீவனத்தை வெளியேற்றுதல் முக்கிய உத்தியாகும். தீவனக் கலனில் முதலில் இட்ட தீவனத்தை முதலில் வெளியே எடுக்க வேண்டும். இதனால் பழைய தீவனம் தங்குதல், பெரிய மற்றும் சிறிய தீவனத் துகள்கள் பிரிதல் தடுக்கப்படும். மேலும், தீவனத்திலுள்ள சத்துப் பொருள்களின் தரம் மாறாமல் கோழிகளுக்குக் கிடைக்கும். தீவன ஊட்டுக் கலனின் (Feed Hopper) வளைவுத் தன்மையைப் பொறுத்துத் தீவனம் செல்லுதல் இருக்கும். தீவனக் கலனின் உட்புறத்தில் எவ்விதத் தடுப்புமின்றி இருத்தல் நல்லது. சைலோ தீவனக் கலன்களை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
எனவே, கோழித் தீவனங்களை முறையாகச் சேமித்துக் கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும். பண்ணையில் எத்தகைய சேமிப்பு முறையைப் பின்பற்றினாலும் கோழித் தீவனத்தை உற்பத்தி நாளிலிருந்து 2 மாதத்தில் செலவழிக்க வேண்டும். 10-15 நாட்களுக்கு ஒருமுறை தீவனத்தை வாங்கிக் கோழிகளுக்குக் கொடுத்தால், அது, சத்திழப்பில்லாத தீவனமாகப் பயன்பட்டு, நல்ல உற்பத்திக்கு வழி வகுக்கும்.
முனைவர் க.பிரேமவல்லி,
முனைவர் ச.த.செல்வன், முனைவர் ச.பிரகாஷ், கோழி இனவிருத்திப் பிரிவு,
கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்-603203.
சந்தேகமா? கேளுங்கள்!