கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018
சிறுதானியப் பயிர்களில் ஒன்றான வரகுப் பயிர், இந்தியாவில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 125-130 நாட்கள் வயதுடையது. கடும் வறட்சி மற்றும் அதிக மழையைத் தாங்கி வளரும். வரகில் ஏழடுக்கு விதையுறை உள்ளதால், இதைப் பறவைகள் மற்றும் விலங்குகளால் எளிதில் சேதப்படுத்த முடியாது. நூறு கிராம் வரகில் புரதம் 0.3 கிராம், கொழுப்பு 1.4 கிராம், நார்ச்சத்து 9.0 கிராம், சுண்ணாம்புச் சத்து 27 மில்லி கிராம், பாஸ்பரஸ் 188 மில்லி கிராம், இரும்புச்சத்து 0.5 கிராம், தாதுப்புகள் 2.6 கிராம் உள்ளன.
பரப்பளவும் உற்பத்தியும்
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2014-2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1,249 எக்டரில் வரகைச் சாகுபடி செய்து 4,210 டன் தானியத்தை உற்பத்தி செய்த கடலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் விழுப்புரம், சேலம் மாவட்டங்கள் உள்ளன. எக்டருக்கு 3,829 கிலோவை உற்பத்தி செய்த அரியலூர் மாவட்டம் உற்பத்தித் திறனில் முதலிடம் வகிக்கிறது.
காலநிலையும் பருவமும்
வரகானது வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் பயிரிடச் சிறந்தது. தமிழகத்தில் பருவ மழைக்கேற்ப ஜூன் ஜூலையில் வரும் ஆடிப்பட்டம், செப்டம்பர் அக்டோபரில் வரும் புரட்டாசிப் பட்டம் வரகு சாகுபடிக்குச் சிறப்பாக இருக்கும். பாசன வசதியிருந்தால் அனைத்துப் பட்டங்களிலும் பயிரிடலாம்.
கோடையுழவு
கோடை மழையைப் பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை, சட்டிக் கலப்பையால் உழ வேண்டும். பின்னர் இரண்டு முறை மரக்கலப்பையால் உழ வேண்டும். கோடையுழவால் மண்ணரிப்புத் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப் படுவது மட்டுமின்றிப் பூச்சிகளும் நோய்களும் கட்டுப்படுகின்றன. வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவ மழையின் போது விதைக்கலாம். சராசரி மழையளவு 450-500 மி.மீ. வரை உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
கோடை மழையைப் பயன்படுத்திப் பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை உளிக்கலப்பை அல்லது சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பின்னர் கட்டி ஏதும் இல்லாதமல் இரண்டு மூன்று முறை உழுது நிலத்தை விதைப்புக்குத் தயாரிக்க வேண்டும், கடைசி உழவுக்கு முன்பு எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழு உரத்தை மண்ணில் இட வேண்டும்.
விதைப்பு
தமிழகத்தில் வரகு பெரும்பாலும் தனிப்பயிராகவே பயிரிடப்படுகிறது. உறுதியான விளைச்சல், கூடுதல் இலாபம் மற்றும் மண் வளத்தைக் காக்க ஊடுபயிர் அவசியம். வரகுடன் ஊடுபயிராகத் துவரை, அவரை, பேயெள், கடுகு ஆகியவற்றில் ஒன்றை எட்டு வரிசை வரகுக்கு இரண்டு வரிசை ஊடுபயிர் (8:2) என்னும் கணக்கில் பயிரிடலாம். பயிர் இடைவெளி 40க்கு10 செ.மீ. மற்றும் சதுர மீட்டருக்கு 25 பயிர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
விதை நேர்த்தி
வரிசையில் விதைக்க எக்டருக்கு 10 கிலோ, சாதா விதைப்புக்கு எக்டருக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும். விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி செய்ய வேண்டும். உயிரியல் விதை நேர்த்திக்கு, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி வீதம் நன்கு கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து பின்பு விதைக்க வேண்டும்.
நுண்ணுயிர் விதைநேர்த்திக்கு 600 கிராம் அசோஸ்பைரில்லம், 600 கிராம் பாஸ்போபாக்டீரியாவை ஓர் எக்டருக்குத் தேவையான விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இரசாயன விதை நேர்த்தியில் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் அல்லது 4 கிராம் திரம் மருந்தைக் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
உர நிர்வாகம்
மண் பரிசோதனை முடிவுக்கு எற்ப உரமிடுதல் அவசியம். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்குப் பரிந்துரை அளவான 40:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளைக் கீழ்க்கண்ட முறையில் இட வேண்டும். அடியுரமாக, 20:20:20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துகளையும், மேலுரமாக 20 கிலோ தழைச் சத்தையும் இட வேண்டும்.
இந்தளவில் சத்துகள் கிடைக்க 43 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 33 கிலோ பொட்டாஷை அடியுரமாக இட வேண்டும். மேலும், நுண்ணூட்டக் குறைகளைத் தவிர்க்க, எக்டருக்கு 12.5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டக் கலவையை 50 கிலோ மணலுடன் கலந்து, அடியுரமாக விதைக்க வேண்டும். நுண்ணூட்டக் கலவையை இரசாயன உரத்துடன் கலக்கக் கூடாது. அடுத்து, 30.45 நாட்களில் 43 கிலோ யூரியாவை களையெடுத்த பிறகு மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது இட வேண்டும்.
ஈரப்பதம் காத்தல்
தமிழகத்தைப் பொறுத்தவரை, வரகு மானாவாரிப் பயிராகத் தான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதில் சிறந்த மகசூலைப் பெற மண்ணின் ஈரப்பதம் போதுமானதாக இருக்க வேண்டும். இதற்கு, சிறந்த உழவியல் முறைகளான கோடையுழவு, உளிக்கலப்பையால் 3-5மீ. இடைவெளியில் உழுதல், நிலப்போர்வை அமைத்தல், நிலத்தின் நடுவே பண்ணைக் குட்டை அமைத்தல், சரிவுக்கு குறுக்கே உழுதல், சரிவுக்குக் குறுக்கே வரப்புகளை அமைத்தல் போன்றவற்றின் மூலம் மழைநீரைச் சேமித்து நிலத்தின் ஈரப்பதத்தைக் காக்க வேண்டும்.
களை நிர்வாகம்
உழவியல் முறை: விதைத்த 15, 30 ஆகிய நாட்களில் இரண்டு முறை கைக்களை எடுக்க வேண்டும். வரிசை விதைப்பு என்றால் களையெடுப்பான் மூலம் இரண்டு முறை களைகளை அகற்ற வேண்டும்.
இரசாயன முறை: விதைத்த 3-5 நாட்களில் எக்டருக்கு 0.50 கிலோ ஐசோபுரோடியூரான் என்னும் களைக்கொல்லியை 500 லிட்டர் நீரில் கலந்து நேப்சேக் தெளிப்பான் மூலம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது தெளிக்க வேண்டும்.
அறுவடை
நன்கு முற்றிய கதிர்கள் காய்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். பின்பு அவற்றைக் களத்தில் காய வைத்து அடித்து வரகைப் பிரித்துச் சுத்தம் செய்து சணல் அல்லது துணிப்பைகளில் சேமித்து வைக்க வேண்டும். உயர் விளைச்சல் இரகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் சீரிய சாகுபடி முறையைக் கடைப்பிடித்தால் எக்டருக்கு 3,200 கிலோ வரகும், 5,900 கிலோ வைக்கோலும் கிடைக்கும்.
சேமிப்பு
அறுவடை செய்த வரகை 10 சதம் ஈரப்பதம் இருக்குமாறு காய வைத்தால் உணவுக்காகப் பயன்படுத்தலாம். இதையே விதைக்காகச் சேமித்தால் 100 கிலோ வரகுக்கு ஒரு கிலோ ஆக்டிவேட்டடு கயோலினைக் கலந்து வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 04175 298001.
முனைவர் ப.பரசுராமன்,
முனைவர் க.சிவகாமி, முனைவர் கி.ஆனந்தி, சிறுதானிய மகத்துவ மையம்,
அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.