ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

வான்கோழி வான் கோழி வளர்ப்பு பயிற்சி

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020

விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் பாசனக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைச் சமாளித்து வருமானத்தை ஈட்டலாம். இது காலங்காலமாக நமது விவசாயக் குடும்பங்களில் இருந்து வருவது தான். இவ்வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில், வான்கோழிகளை வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.

வளர்ப்புக்கு ஏற்ற இனங்கள்

அகன்ற மார்புள்ள வெண்கல இனம் மற்றும் வெள்ளை இனம், பேல்ட் வில்லி சிறிய வெள்ளையினம் மற்றும் நந்தனம் 1 வான்கோழி. இவை கடும் வெப்பத்தையும் தாங்கி வளரும். மேலும், இவற்றின் இறைச்சி சுத்தமாக இருப்பதாலும், வெள்ளை இறகு வான்கோழிகள் தமிழகத்தில் வளர்க்க ஏற்றவையாக உள்ளன.

பொதுவாக வான்கோழிகளை வீடுகளில் வளர்ப்பது தான் வழக்கம். வீட்டிலிருக்கும் அரிசி, குருணை, கம்பு, சோளம், தவிடு, எஞ்சிய உணவு, சமையல் கழிவுகள் தான் வான்கோழிகளுக்கு உணவாக அமைகின்றன. ஆனால், புரதத் தேவை நிறைவு பெறாது. இதை ஈடுகட்ட, கடலை, எள், சூரியகாந்தி ஆகிய புண்ணாக்கு வகைகளில் ஒன்றையும், கொஞ்சம் தவிட்டையும் நீரில் கலந்து சிறிது சிறிதாகக் கொடுக்க வேண்டும். புண்ணாக்கில் கோழிகளுக்குக் கெடுதலைச் செய்யும் பூஞ்சை வளரும் என்பதால், நீரில் கலந்த உணவை 1-2 நாள் கழித்துக் கொடுக்கக் கூடாது.

ஒருங்கிணைந்த பண்ணையில் வளர்த்தல்

ஒருங்கிணைந்த பண்ணையில், மீன் குளத்தின் மேலே சிறிய கூண்டை அமைத்து அதில் வான்கோழிகளை வளர்க்கலாம். இதனால், குளத்தில் விழும் இவற்றின் கழிவு மீன்களின் வளர்ச்சிக்கு ஏற்ற இரையாகும். இதன் மூலம் மீன் உற்பத்திச் செலவு குறைவதுடன், கோழிக்கழிவு மறுசுழற்சி செய்யப்பட்டு, சுற்றுப்புறம் காக்கப்படுகிறது. கோழிக்கூண்டின் தரைப்பகுதி குளத்து நீரிலிருந்து ஓரடி உயரத்தில் இருக்க வேண்டும். ஒரு வான்கோழிக்கு 1.5-2 சதுரடி இடம் தேவைப்படும்.

நோய்த் தாக்குதல்

வான்கோழிகளுக்கு அம்மையும் சளியும் தான் அதிகமாக வரும். இவற்றைக் குணப்படுத்த, சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள்தூள் ஆகியவற்றில் தலா 2 தேக்கரண்டி எடுத்து ஒன்றாகக் கலந்து நீர் விட்டு அரைத்து, வாரம் ஒருமுறை குடிநீரில் கலந்து கொடுத்து வரலாம். வசம்பு, பூண்டு மற்றும் மஞ்சளைத் தலா 100 கிராம் எடுத்து அரைத்து ஐந்து லிட்டர் நீரில் கலந்து வான்கோழிகள் மீது மாதம் ஒருமுறை தெளித்து வந்தால் தோல் நோய்கள் அண்டாது.

முட்டை உற்பத்தி

வான்கோழிகள் எட்டு மாதங்களில் முட்டையிடத் தொடங்கும். முப்பது மணிக்கு ஒருமுறை முட்டையிடும். ஒரு கோழி மூலம் ஆண்டுக்கு 60-100 முட்டைகள் கிடைக்கும். முட்டையின் எடை 60-80 கிராம் இருக்கும். இரண்டாம் ஆண்டிலிருந்து முட்டை உற்பத்திக் குறையத் தொடங்கும். இந்த முட்டைகளுக்குக் குஞ்சுப் பொரிப்புத் திறனும் குறைவாக இருக்கும். வான்கோழி முட்டைக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. வான்கோழிகள் அடை காப்பதில்லை.

இறைச்சி

ஒருங்கிணைந்த பண்ணையில் வளரும் வான்கோழிகள் ஆறு மாதத்தில் 3-6 கிலோ எடையை அடைந்து விடும். ஒரு கிலோ வான்கோழி இறைச்சியைக் குறைந்தது 350 ரூபாய்க்கு விற்க முடியும். வான்கோழியின் வளர்ச்சியை அதிகரிக்க, தினமும் மக்காச்சோளம், தவிடு, அரிசியைக் கலந்து கொடுக்கலாம். கோ-4, கோ-5, அரைக்கீரை, பாலக்கீரை போன்றவற்றைக் கொடுக்கலாம்.


வான்கோழி DR.A.RAJESH KUMAR scaled e1629266314766

முனைவர் .இராஜேஸ்குமார்,

வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம்-614404. முனைவர் மு.பாலுசாமி,

முனைவர் சி.ஜெயந்தி, உழவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!