பச்சை பூமி சார்பில், பொள்ளாச்சி நகரில், பல்லடம் சாலையில் அமைந்துள்ள கே.கே.ஜி. திருமண மண்டபத்தில், மே மாதம் 13, 14, 15, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள், விவசாயப் பெருமக்கள் பாராட்டும் வகையில், விவசாயக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில், நமது பாரம்பரிய விவசாயம் முதல் நவீன விவசாயம் வரையிலான அரங்குகள் இடம் பெற்று இருந்தன. உழவு, விதைப்பில் தொடங்கி, அறுவடை வரைக்கும் பயன்படும், விதைகள், உரங்கள், மருந்துகள், நவீன இயந்திரங்கள், விவசாயக் கருவிகள், தென்னை உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு உதவும் ஏராளமான சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
மேலும், தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பால்வளத்துறை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும், உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்றவற்றின் சார்பிலும், பார்வையாளர்கள் பார்த்துப் பயனடையும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
வீட்டுத் தேவைப் பொருள்கள் நிறைந்த அரங்குகள் மற்றும் நமது பாரம்பரிய மருத்துவ அரங்குகளும் அங்கம் வகித்தன. ஒட்டு மொத்தத்தில், பார்வையாளர்கள் பாராட்டும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.