My page - topic 1, topic 2, topic 3

இளம் கன்றுகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019

ன்றைய கன்று தான் நாளைய பசு. ஆகவே, கன்றுகளை நன்கு பராமரிக்க வேண்டும். இளம் வயதில் சரியாக வளர்க்கப்படாத கிடேரி, தக்க வயதிலும் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதாக இருப்பதில்லை. எனவே, கன்றுகளை நன்கு வளர்த்தால் மட்டுமே பண்ணையின் இலாபம் பெருகும்.

சினைப்பசுப் பராமரிப்பு

கன்றுப் பராமரிப்பு, பசுவின் சினைக் காலத்திலிருந்தே தொடங்குகிறது. சினைப்பசுவைச் சரிவிகிதத் தீவனம் கொடுத்துப் பராமரித்தால், கருவிலுள்ள கன்றின் வளர்ச்சியும் சீராக இருக்கும். சீம்பாலின் தரமும் சினைக்காலப் பராமரிப்பைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, கடைசி மூன்று மாதச் சினைக்காலப் பராமரிப்பில் மிகுந்த கவனம் தேவை. சினைப் பசுவுக்கு 2-2½ மாதப் பால் வற்றுக்காலம் கொடுக்க வேண்டும். பசு எட்டு மாதச் சினையை எட்டியதும் கறவையை நிறுத்திவிட வேண்டும். இதனால், பசுவுக்குத் தரப்படும் தீவனச் சத்துகள் கன்றின் வளர்ச்சிக்குப் பயன்படும்.

பிறந்த கன்றுப் பராமரிப்பு

பிறந்த கன்றின் உடலிலுள்ள ஈரத்தைத் தாய்ப்பசு நக்கிவிடும். அப்படியில்லை எனில், நல்ல துணியால் சுத்தம் செய்ய வேண்டும். சுவாசம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சுவாசிக்கச் சிரமமாக இருந்தால், அதன் நெஞ்சுப் பகுதியில் அழுத்தித் தேய்த்துவிட வேண்டும். மூக்கில் சளியடைப்பு இருந்தால் நீக்க வேண்டும்.

கன்று பிறந்ததும் சீம்பாலைக் குடிக்கவிட வேண்டும். தானாக எழுந்து பாலைக் குடிக்க முடியாத கன்றுக்கு, சீம்பாலைக் கறந்து சுத்தமான புட்டியில் அடைத்துக் கொடுக்க வேண்டும். சீம்பால் தான் கன்றுக்கு நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும். சீம்பாலில் உள்ள நோயெதிர்ப்புப் புரதங்களை உறிஞ்சும் தன்மை, கன்று பிறந்து 24 மணி நேரம் மட்டுமே இருக்கும். கன்றின் எடையில் பத்தில் ஒரு பாக அளவில் சீம்பாலைத் தர வேண்டும். அதாவது, இருபது கிலோ எடையுள்ள கன்றுக்குத் தினமும் இரண்டு லிட்டர் பால் தேவை. இந்தப் பாலின் அளவை, மூன்று நாட்கள் கழித்து, கன்றின் எடையில் 15 இல் ஒரு பாகமாகத் தந்தால் போதும்.

சிறிதளவு பாலைக் கறந்து கீழே விட்டு விட்டு, சீம்பாலைக் குடிக்கவிட வேண்டும். இது, பால் மூலம் ஏற்படும் நோயைத் தவிர்க்க உதவும். பசுவில் மடிநோய், கோமாரி அறிகுறி இருந்தால், கன்றை, சீம்பாலைக் குடிக்கவிடக் கூடாது. இந்த நிலையில், பசும்பால் 600 மில்லி, சுத்தமான நீர் 300 மில்லி, விளக்கெண்ணெய் அரை தேக்கரண்டி, நன்கு கலக்கப்பட்ட கோழிமுட்டை ஒன்று, குளுக்கோஸ் ஒரு மேசைக் கரண்டி வீதம் எடுத்துக் கலந்து கன்றுக்குத் தரலாம். தினமும் மூன்று முறை இப்படித் தர வேண்டும்.

கன்றின் தொப்புள் கொடியை, அதன் உடலிலிருந்து இரண்டு அங்குலம் விட்டுச் சுத்தமான கத்திரியால் வெட்டி விட்டு, அதில் டிங்சர் அயோடினைத் தடவிவிட வேண்டும். இது, தொப்புள் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.

எருமைக் கன்றுகளின் வளர்ச்சிக்கு முக்கியத் தேவை, வெப்பக் காலத்தில் குளிர்ச்சியைத் தருவதாகும். இதற்குக் கன்றுகளை நீருக்குள் படுக்க விடலாம். அல்லது மேலே நீரைத் தெளித்து விடலாம். எருமைகளில் வேர்வைச் சுரப்பிகள் குறைவாகவே இருப்பதால், நீர் மூலம் குளிர்ச்சியைத் தந்து அவற்றை வெப்பப் பாதிப்பில் இருந்து மீட்க வேண்டும். நீரில் படுக்கும் எருமைக் கன்றுகளின் வளர்ச்சி, நீரில் படுக்காத கன்றுகளின் வளர்ச்சியை விட நன்றாக இருக்கும். நீரில் படுத்தால் தீவனம் நன்கு செரிக்கும்.

எடையறிதல்

வளரும் கன்றுகளின் எடையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தீவன அளவைக் கட்டுப்படுத்த, வருமுன் நோயைக் கண்டறிய உதவும். வயிற்றில் கோணியைக் கட்டி, கோணியின் முனைகளில் கயிற்றைக் கட்டி, எடைக் கருவியில் தொங்கவிட்டு எடையை அறியலாம். மாதந்தோறும் இப்படிச் செய்தல் அவசியம். தினமும் 500 கிராம் கூடினால் நல்ல வளர்ச்சியாகும்.

அடையாளம் இடுதல்

கன்றுகளை நன்றாகப் பராமரிக்க, அவற்றுக்கு அடையாளம் இட வேண்டும். அவற்றின் காதுகளில் எண் அல்லது எழுத்தைப் பச்சை குத்தலாம். காதணிகளை அணியலாம். கழுத்தில் அடையாளத் தகடுகளைத் தொங்க விடலாம்.

கொம்பு நீக்கம்

கொம்புகள் வளர்வதைத் தடுக்க, கன்று பிறந்த 3-4 நாட்களில் கொம்புக் குருத்தை நீக்க வேண்டும். இதற்கு, கொம்புக் குருத்தைச் சுற்றியுள்ள முடிகளை நீக்கிவிட்டு, இரசாயனக் குச்சி அல்லது சூடான இரும்பால் குருத்துப் பகுதியைத் தீய்க்க வேண்டும். பிறகு அதைச் சுற்றி வாசிலினைத் தடவ வேண்டும். மேலும், வேப்ப எண்ணெய்யைத் தடவி ஈக்கள் மொய்ப்பதைத் தடுக்க வேண்டும்.

கன்றுக் கொட்டில்

கன்றுகளை ஒரு மாதமாவது தனியாக வளர்க்க வேண்டும். கொட்டிலில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். குளிர்ச்சி மற்றும் வெய்யில் பாதிப்பு இருக்கக் கூடாது. கன்றுகள் சுற்றித் திரிய ஏதுவாக, வேலியுடன் கூடிய திறந்தவெளி அமைப்பு இருந்தால் நல்லது. ஒரு கன்றுக்கு, 0-1 மாதம் வரை 1.0 ச.மீ., 1-4 மாதம் வரை 1.5 ச.மீ., 4-9 மாதம் வரை 2.0 ச.மீ. இடவசதி தேவை.

நோய்த் தாக்கம்

கன்றுகளில் நோய்த் தாக்கம், அவற்றுக்குக் கிடைக்கும் பாலின் தரம், அளவு, பராமரிக்கும் இடத்தின் தன்மை, பசுவின் சினைக்காலக் கவனிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

தொப்புள் கொடியும் நோயும்

கன்று பிறந்ததும் தொப்புள் கொடியை முறையாகத் துண்டித்துப் பராமரிக்கா விட்டால், நோய்த்தொற்று ஏற்படும். நோய்க் கிருமிகள் கன்றின் இரத்தத்தில் கலந்து கால் மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய கன்றுகளுக்கு உடனே சிகிச்சையளிக்க வேண்டும். தொப்புள் கொடியை அகற்றி விட்டுச் சுத்தமான இடத்தில் வைத்துக் கன்றுகளைப் பராமரிக்க வேண்டும்.

கன்றுக் கழிச்சல்

கழிச்சல் ஏற்பட்டால் கன்று இறந்து போக நேரிடும். சுத்தமில்லாப் பண்ணை, சீம்பால் முறையாகக் கிடைக்காமை போன்றவற்றால் கழிச்சல் ஏற்படலாம். குறிப்பாக, சத்துக்குறை, கிருமித் தாக்கத்தால் கழிச்சல் ஏற்படும். சுத்தமற்ற, மடிநோயுள்ள மடியில் பாலைக் குடித்தாலும் கழிச்சல் ஏற்படும். அதிகமாகப் பாலைக் குடித்தாலும் கழிச்சல் ஏற்படும்.

எனவே, தேவையான பாலை, உரிய கால இடைவெளியில் கொடுக்க வேண்டும். கழிச்சல் மிகுந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படும். இச்சமயத்தில், பாலைக் கொடுப்பதைக் குறைத்து, நீரிழப்பைச் சரி செய்யும் வேலையைச் செய்ய வேண்டும். நீரிழப்பு 10 சதத்தைத் தாண்டினால் கன்று இறந்து போக நேரிடும்.

நுரையீரல் ஒவ்வாமை

குறைந்த இடத்தில் நிறையக் கன்றுகள் இருத்தல், அசுத்தக் காற்று ஆகியன, கன்றுகளில் நுரையீரல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். கொட்டிலில் போதிய காற்றோட்டம், நல்ல பராமரிப்பு இருந்தால் இந்தப் பாதிப்பைத் தவிர்க்கலாம்.

குடற்புழுப் பாதிப்பு

முறையான பராமரிப்பு இருந்தாலும், குடற் புழுக்கள் தாக்கினால் கன்றின் வளர்ச்சிப் பாதிக்கும். எனவே, பிறந்த 15 நாட்கள் முதல் குடற்புழு நீக்க மருந்தைத் தர வேண்டும். புற ஒட்டுண்ணிப் பாதிப்பு இருந்தால் அதற்கான மருந்தைத் தரலாம். குடற்புழு நீக்க மருந்தை முதல் 3 மாதங்களில் மாதம் ஒருமுறை, பிறகு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொடுக்க வேண்டும்.

தடுப்பூசி

மூன்று மாதத்தில், பிறகு 6 மாதத்தில், அடுத்து 6 மாதத்துக்கு ஒருமுறை கோமாரித் தடுப்பூசியைப் போட வேண்டும். சப்பை நோய்க்கு 12  மாத வயதிலும், பிறகு ஆண்டுக்கு ஒருமுறையும் தடுப்பூசியைப் போட வேண்டும். இந்த உத்திகளைப் பின்பற்றிக் கன்றுகளை வளர்த்தால், தங்களுக்குத் தேவையான பசுக்களை, அவரவர் பண்ணையிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.


PB_Dr.Usha Kattuppakkam

முனைவர் சு.உஷா,

முனைவர் ந.குமாரவேலு, முனைவர் .கோபி, கால்நடை அறிவியல் முதுகலை

ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203, காஞ்சிபுரம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks