மணத்தக்காளி சாகுபடி!

மணத்தக்காளி Manathakkali

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020

ணத் தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டித் தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. இது, வரப்பு, ஏரி மற்றும் குளக்கரைகளில் தானாக வளரும் ஒருவகைச் செடி. மருத்துவக் குணங்கள் நிறைந்தது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மணத்தக்காளி, கீரையாக உணவில் பயன்படுகிறது. இது எல்லோருக்கும் பிடித்த கீரையாகும். அதனால், மக்கள் தேவையைக் கருத்தில் கொண்டு வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது.

மண் மற்றும் காலநிலை

வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் 2000 மீட்டர் குத்துயரத்தில் மணத்தக்காளி நன்கு வளரும். அங்ககத் தன்மை அதிகமுள்ள மண் இதற்கு ஏற்றது. இது, வறண்ட, கற்கள் நிறைந்த, மணற்பாங்கான மற்றும் ஆழமான மண்ணில் நன்கு வளரும். ஈரப்பதமுள்ள மணலில் களையாக வளரும்.

நாற்றங்கால் தயாரிப்பும் நடவும்

விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. நாற்றங்காலில் இருந்து 30-45 நாட்களில், 8-10 செ.மீ. உயரம் வளர்ந்த நாற்றுகளைப் பறித்து நட வேண்டும். மழைக்காலத்தில் வரப்புகளிலும் வெய்யில் காலத்தில் வாய்க்காலிலும் நட வேண்டும். செடியின் படரும் தன்மையைப் பொறுத்து,  30×90 செ.மீ. இடைவெளியில் நடலாம். வெய்யில் காலத்தில் நடவு செய்யப்பட்ட நாற்றுகளுக்கு, 2-4 நாட்கள் வரையில் தற்காலிக நிழலை அமைத்துத் தர வேண்டும்.

உர நிர்வாகம்

நிலத்தைத் தயார் செய்யும் போது, எக்டருக்கு 20-25 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். எக்டருக்கு 75:40:40 கிலோ வீதம், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இட வேண்டும். சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். தழை மற்றும் மணிச்சத்தை 2-3 பிரிவுகளாகப் பிரித்து இட வேண்டும்.

நீர், களை நிர்வாகம்

நாற்றங்கால் மற்றும் பயிருக்கு ஒருவார இடைவெளியில் பாசனம் செய்ய வேண்டும். பயிரில் பூ அரும்பும் வரை பாசனம் செய்ய வேண்டும். வெய்யில் காலத்தில் 3-4 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். காய்கள் காய்க்கும் பருவத்தில்  ஒருநாள் விட்டு ஒருநாள் பாசனம் செய்ய வேண்டும். களை எடுத்த பின்பும் மேலுரம் அளித்த பின்பும் பயிருக்கு மண் அணைத்தல் வேண்டும். அதிகமாகக் காய்க்கும் என்பதால், செடிகள் சாயாமல் இருக்க முட்டுக் கொடுக்க வேண்டும்.

பயிர்ப் பாதுகாப்பு

தண்டுத் துளைப்பான், மாவுப்பூச்சி, இலைகளைப் பிணைக்கும் புழுக்கள் ஆகியன இவற்றைத் தாக்கும். இவற்றைக் கட்டுப்படுத்த, மிதமான பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தால் போதும். வேர்முடிச்சுப் புழுக்கள், வாடல் நோய் ஆகியவற்றை; நிலத்தைச் சுத்தம் செய்தல், சுழற்சி முறையில் பயிரிடல் மற்றும் பயிர்க் கழிவுகளை எரிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

மண் மற்றும் காலநிலையைப் பொறுத்து, 4-6 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும். மணத்தக்காளிச் செடிகளை அறுத்து நிழலில் உலர்த்தி மூலிகையாக விற்கலாம். எக்டருக்கு 12-20 டன் மூலிகை கிடைக்கும்.

பயன்கள்

மணத்தக்காளிக் கீரை, சிறிது இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்களைத் தடுக்கும். இதில் வைட்டமின் இ, டி அதிகளவில் உள்ளதாகச் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் புண்கள் ஆறும்.

வாதநோய், வீக்கம், இருமல், ஆஸ்துமா, மார்புச்சளி, காயம், குடற்புண், வயிற்றுப் பொருமல், வயிற்று மந்தம், ஈரல் வீக்கம், காதுவலி, வாந்தி, இதயநோய், தொழுநோய், தோல் நோய்கள், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம், நச்சைத் தடுத்தல், ஒவ்வாமை, புண்ணை ஆற்றுதல், செரிமானம், குடலை இளக்க, புத்துணர்வு மற்றும் மன அமைதிக்கான மருந்தாகவும், சத்து மருந்தாகவும் முழுத் தாவரமும் பயன்படுகிறது.

சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி. வீதம் நாள்தோறும் மூன்று வேளை பருகி வந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்ணை ஆற்றும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வர வாய்ப்புண் குணமாகும். தினமும் ஐந்து பச்சை இலைகளை நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாகக் குணமாகும்.

மூட்டு வீக்கத்தால் அவதிப்படுவோர், மணத்தக்காளிக் கீரையை வதக்கி, ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயைக் காய வைத்து வற்றலாக்கிக் குழம்பில் பயன்படுத்தலாம். கீரை மற்றும் வேரைக் குடிநீராகக் காய்ச்சிக் குடித்தால் நல்ல பலன் கிட்டும்.


Pachai Boomi Dr.Tamil selvi

முனைவர் செ.தமிழ்ச்செல்வி,

உதவிப் பேராசிரியர், வேளாண்மைக் கல்லூரி, ஈச்சங்கோட்டை, தஞ்சை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading