வளர்ப்புப் புறாக்களைத் தாக்கும் மலேரியா!

வளர்ப்புப் புறா Rock Pigeon e1642593696639

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019

லகம் முழுதும் செல்லப் பறவையாக வளர்க்கப்படும் புறாக்கள், அமைதியின் சின்னமாகவும் உள்ளன. இவை இப்போது இறைச்சிக்காக, அழகுக்காக, ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. பல்வேறு ஓரணு ஒட்டுண்ணிகள் புறாக்களைத் தாக்குகின்றன. இவ்வகையில், மலேரியா என்னும் காய்ச்சல் புறாக்களை அதிகளவில் தாக்கி இறப்பையும் ஏற்படுத்துகிறது. சரியான வளர்ப்பு முறைகளைக் கையாளாமல் போவதே இதற்குக் காரணம். ஏனெனில், மலேரியாவை அல்லது அதற்கான காரணியைப் புறாக்கள் தங்கள் இரத்தத்தில் கொண்டிருக்கும். புறாக்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறையும் போது, மலேரியா உண்டாவதுடன், உயிரிழப்பும் நிகழ்கிறது.

நோய்க் காரணங்கள்

ஹீமோபுரோடியஷ் கொலம்பே என்னும் ஓரணு ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது. புறாக்களில் அதிகளவில் இருக்கும் சூடோளின்சியா கனாரியன்சிஸ் என்னும் புறா ஈக்கள் மூலம் ஒரு புறாவில் இருந்து மற்ற புறாக்களுக்கு மலேரியா பரவுகிறது. சுத்தம் செய்யப்படாமல் கூண்டு, கூண்டிலுள்ள சிறு மரக்கிளைகள், தீவனம், நீர்த் தட்டுகளில் கலக்கும் புறா எச்சம் ஈக்கள் பெருகக் காரணமாக உள்ளது. இளம் புறாக்களை அதிகளவில் தாக்கும் மலேரியா, இறப்பையும் ஏற்படுத்துகிறது.

மற்ற நோய்கள் அல்லது சுற்றுச்சூழலால் நோயெதிர்ப்புத் தன்மையை இழக்கும் புறாக்களை மலேரியா தாக்கும் வாய்ப்பு அதிகம். கூண்டுகளின் இடுக்கில், தூசு படிந்த இடத்தில் இருக்கும் புறா ஈக்கள், இளம் புழுக்களை இடுவதால், வளர்ப்புப் புறாக்களில் மலேரியா நோய் அதிகமாக இருக்கும். ஆனால், காட்டுப் புறாக்கள் வாழ்நிலைக்குத் தகுந்து தங்களைக் காத்துக் கொள்ளும். ஈரப்பதம், இலையுதிர் காலம் மற்றும் வெய்யில் காலத்தில் ஈக்கள் அதிகமிருக்கும். பந்தயப் புறாக்களில் மலேரியா அறிகுறி இருக்காது. நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தால், பறப்பதிலும் உடல் எடை கூடுவதிலும் சிக்கல் ஏற்படும்.  

மலேரியாவின் அறிகுறிகள்

நடையில் தள்ளாட்டம், பறக்கும் போது தலைச் சுற்றி விழுதல், உடல் எடை குறைதல், அடிக்கடி சோர்வடைதல், சில நேரங்களில் கழிச்சல் இருத்தல், ஒன்றரை மாதப் புறாவின் கழுத்து முதுகுப்புறம் திரும்பி யிருத்தல், ஒருமாதப் புறாக்கள் இறந்து கிடத்தல் ஆகியன மலேரியாவின் அறிகுறிகளாகும்.  

சிகிச்சை

நோய் அறிகுறிகள் தென்பட்டதும், கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகள், நோய்த்தாக்கம் மற்றும் அறிகுறிகளை மட்டுமே கட்டுப்படுத்தும். இரத்தத்தில் உள்ள ஹீமோபுரோடியஷ் கொலம்பே ஒட்டுண்ணி சிறிது சிறிதாகத் தான் குறையும். குலோரோகுயின், பிராமாகுயின், குயினாகிரைன், பூபார்வகோன் போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி நீரில் கலந்து 7-10 நாட்களுக்குத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்

புற ஒட்டுண்ணித் தெளிப்பான் அல்லது மருந்துக் குளியல் மூலம், புறாக்களில் காணப்படும் ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். ஒட்டுண்ணி மருந்தை, புறா வாழுமிடத்தில் மூன்று வாரத்துக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். புறா ஈக்கள் பரவக் காரணமாக இருக்கும் புறா எச்சத்தை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அகற்ற வேண்டும். எச்சத்தைச் சேமித்து வைக்கும் இடத்திலும் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்க வேண்டும்.

புறா ஈக்களின் இளம் புழுக்கள் பூச்சிக்கொல்லி மருந்தால் முழுமையாக இறப்பதில்லை. எனவே, புழுவின் வளர்ச்சியைத் தடுக்கும் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டும். இதனால், ஈக்கள் பெருக்கம் தடைபடும். பறவைகளுக்கான பூச்சிக்கொல்லி மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாட்டுக்கு அல்லது நாய்க்கான மருந்தைப் பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில், இம்மருந்து புறாக்களின் கல்லீரலில் படிந்து நாள்பட்ட காமாலையை உண்டாக்கும். நோயெதிர்ப்புச் சக்தியைக் கூட்ட, சுத்தமான நீர், சத்தான தீவனம் மற்றும் வைட்டமின் மருந்துகளை நீரில் கலந்து கொடுக்க வேண்டும்.


PB_VENKATESAN

மரு.மா.வெங்கடேசன்,

மரு.சோ.யோகேஸ்பிரியா, மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.ப.செல்வராஜ், 

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு-614625.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!