My page - topic 1, topic 2, topic 3

எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014

னித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர் வாழ்வுக்கும் புறத்தூய்மைக்கும் நீர் அவசியம். இவ்வுலகு நீரால் சூழப்பட்டது எனினும் நாம் பயன்படுத்தத்தக்க நன்னீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. காடுகளின் பரப்புக் குறைவதால் மழை குறைகிறது. பருவமழை தொடர்ந்து பொய்த்து வருவதால் நிலத்தடி நீரளவு முன்பைவிட மிகவும் குறைந்து விட்டது. அதனால், குடிநீர்ப் பற்றாக்குறை ஏழை மக்களின் இன்றைய பெருஞ்சிக்கலாக உள்ளது.

உலக மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கினர் குடிநீர்ப் பற்றாக்குறையால் வாழ்வின் தடம் மாறிப் போனவர்களாக உள்ளனர் என்கிறது ஓர் ஆய்வு. இத்தகைய மக்களின் எண்ணிக்கை விரைவில் பன்மடங்காகக் கூடலாம் என்னும் அச்சத்தின் காரணமாக நீர்ப் பயன்பாட்டில் சிக்கனத்தையும் நன்னீர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உலகம் ஊக்குவிக்கிறது.

அதன் ஒரு பகுதியாக நீர் குறித்த விழிப்புணர்வை வளரும் சமுதாயத்தினரிடம் ஏற்படுத்தும் வகையில் உலக நீர்நாளைக் கொண்டாடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. இதற்கென ஆண்டுக்கொரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதன்வழி நீரின் அவசியத்தை இன்றைய தலைமுறை உணரச் செய்யும் வழக்கத்தை ஐ.நா.பேரவை பின்பற்றுகிறது. அதன்படி, நீரும் ஆற்றலும் என்பது இவ்வாண்டின்  தலைப்பாகும். மின்னாற்றல் உற்பத்தி முறைகளில் நீராற்றல் மிக முக்கியமானதாகும். நீர் மின்னாற்றலில் குறிப்பிட்ட விழுக்காடு கிணறுகளிலிருந்து நீரை மேலேற்றவும், நீர் இறைக்கவும், பொருள்களைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இது நீருக்கும் ஆற்றலுக்குமுள்ள நெருங்கிய பிணைப்பை உணர்த்தவல்லது.

மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதைப் போலவே தடையின்றி மின்சாரத்தை வழங்குவதும் அரசின் தலையாய கடமையாக மாறியுள்ள காலமிது. இது நிறைவேற்றப்படாவிடில்  அதனால் பெருத்த பாதிப்புக்குள்ளாகுபவர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே. அதனால் நீர் மற்றும் ஆற்றல் பயன்பாட்டுச் சிக்கனம் குறித்த விழிப்புணர்வைப் பெறவேண்டியவர்களில் கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களே தலையாயவராவர். உலகில் வாழும் வறியவர்கள் இதுகுறித்துத் தக்க விழிப்புணர்வு பெற வேண்டுவதும் அவர்கள் பயன்பெறும் வகையிலமைந்த நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களைத் தீட்ட வேண்டியதும் இன்றைய அவசியமாகி இருக்கின்றன.

மழைநீரைச் சேகரிக்கும் பாங்கு தமிழகத்துக்குப் புதிதல்ல. வான்சிறப்பை முன்வைத்துப் போற்றும் மரபு தொல் தமிழர்க்குரியது. மாமழை போற்றுதும் என்பார் இளங்கோவடிகள். சோழ மாமன்னர்கள் மழைக்கடவுளாம் இந்திரனுக்கு விழா நடத்தினார்கள். விழா நடத்தத் தவறினால் நாட்டில் பேரூழி ஏற்படலாம் என்னும் நம்பிக்கை சங்க கால மக்களிடம் இருந்தது. அதேபோல், பழந்தமிழகத்தில் விவசாய நீர் மேலாண்மைக்கு எனத் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்த காலமும் இருந்தது. 

மழையைச் சிறுமழை என்றும் பெருமழை என்றும் பிரித்தறிந்து செயல்படத் தகுந்த அளவுகோல்கள் அன்று இருந்தன. நெல் குத்த உதவும் உரலே கிராமத்து மழைமானி ஆகும். உரல் நிறைந்த மழை ஓர் அங்குல மழைக்குச் சமம் என்பர். நிலத்தில் கலப்பையின் கொழுமுனை மண்ணில் இறங்கத்தக்க அளவைவிடக் கூடுதல் மழையெனில் அது மாமழை எனப்பட்டது.

மழைநீரைத் தேக்கி வைத்து, தேவையான காலத்தில் விரும்பும் திசைக்குத் தேவையான அளவு நீரைத் திறந்தவிடத் தக்க யுக்திகளும் பழந்தமிழகத்தில் பின்பற்றப்பட்டன. அக்காலத்துக் கணக்கதிகாரம் என்னும் நூல் இந்த யுக்திகளைக் கொண்ட வாய்ப்பாடுகளைப் பாடல்வழி விளக்கியதாகச் சான்றோர் கூறுகின்றனர். உலகத்திலேயே அதிநுட்பமான மழைநீர்ச் சேகரிப்பு முறையை அக்காலத் தமிழ்ப் பேரறிஞர்கள் தக்க கால்வாய்கள் அமைத்ததன் மூலம் செய்து காட்டினர்.

மழைக் காலத்தில் ஒரு நீர்நிலை நிரம்பி அதன்வழி வழிந்தோடும் உபரிநீர் பிற நீர் நிலைகளையும் நிரப்பி, இறுதியில் கடலில் கலக்கும் வகையில் நீரோட்டம் அமைக்கப்பட்டது. இந்த வகை நீரோட்டம் காரணமாக, விலாங்கு மீன், தான் புறப்பட்ட இடத்திலிருந்து கடலுக்குச் சென்று மீண்டும் திரும்பி வந்து தன் வாழ்விற்கேற்ற நீர்ச்சூழலைத் தெரிவு செய்து அங்கு வாழும் வாய்ப்பைப் பெற்றது.

இவ்வித நுட்பத்துடன் அன்றைய கால்வாய்கள் செயல்பட்டன. இது, சூழலியல் காக்கும் அன்றைய தமிழகத்தின் சிறந்த நடவடிக்கை எனலாம். இத்தகு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதன் காரணமாகவே அன்றைய தமிழரின் வாழிடம், மேவிய ஆறுகள் பல ஓடத் திரு மேனிசெழித்த தமிழ்நாடாக விளங்கியது என்கிறார், சூழலியல் கருத்தாளர் ஒருவர்.  

பழந்தமிழகத்தில் நிலவிய அத்தகைய சூழல் இன்று தலைகீழாக மாறியுள்ளது. காவிரியாறு காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வைகை வறண்டு கிடக்கிறது. பாலாறு பாழாகி விட்டது. ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய் என்பனவெல்லாம் இன்று, இருந்த இடங்கள் என்றாகி விட்டன. பரப்புச் சுருங்கிய நீர் நிலைகளே இன்றைய இருப்பு என்றாகி அவையும் நெகிழித்தாளின் பெருக்கத்தால் மாசடைந்து நிற்கின்றன. அதனால் ஏரி மாவட்ட மக்களுக்குக் கூவம் நீரே குடிநீராகும் அவலம் உள்ளது.

நீலகிரியும் மன்னார் வளைகுடாப் பகுதியும் மட்டுமே இன்று தமிழகத்தில் எஞ்சியுள்ள உயிர்க்கோள மண்டலங்களாகக் கருதத் தக்கவை. இங்கும்கூட இயற்கைச் சமன்பாட்டைக் காக்கும் கானுயிர்கள் அரசுத் துறைகளின் அனுமதியுடனும், அனுமதியை மீறியும் கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது எனப்படுகிறது.

காடுகளின் பரவல், மழைப்பெருக்கு, கானுயிர்ப் பாதுகாப்பு, வேளாண் வளம் உள்ளிட்டவை, உணவுச் சங்கிலியின் முக்கிய உட்கூறுகள் என்பது பாடநூலின் வரிகளாக இருந்தாலும், மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளில் தோட்ட வேலைகூட ஓர் அங்கமில்லை என்பதே உண்மை நிலை. இப்படி, சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பற்ற சூழலில் பயின்று வெளிவரும் இளைய தலைமுறையினரால்; விளைநிலம் அழிவதையும், நீர் நிலைகள் மாசடைவதையும், சூழல் கெடுவதையும் மாற்றும் வல்லமையை எப்படிப் பெற முடியும்?

சிறுமீன்கள் பெருமீன்களுக்கு இரையாவது போலத் தொழில் திமிங்கிலங்கள் வறியவர் வாழ்வை விழுங்கிக் கொண்டிருக்கின்ற நிலைக்கு விடியல் எப்படி வரும்? அதனால், இனியேனும் விழித்துக்கொள்ள வேண்டியது இன்றைய தலைமுறையினரின் பொறுப்பாகும்.

அதன் முதல் கட்டமாக, ஆங்காங்கு வாழும் மக்களின் வாழ்க்கைச்சூழல், ஊரின் தட்பவெப்ப நிலை, விளைநிலப் பரப்பு, எஞ்சியுள்ள நீர் நிலைகள், பல்லுயிர் இயல்பு, தொழிலகப் பாங்குகள் போன்றவை தொடர்பான உண்மைச் செய்திகளை ஆவணப்படுத்த முனையலாம். அரசு இம்முயற்சியில் இறங்கும் என எதிர்பார்த்திருக்கத் தேவையில்லை.

உண்மையில், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினரும், இளைஞர் மன்றத்தினரும், சமூக ஆர்வலர்களுமே இதைச் செம்மையாகச் செய்யத் தக்கவர்கள். கிராம அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இத்தகு முயற்சிகளை இடையறாது மேற்கொண்டால் மட்டுமே, நாட்டில் எஞ்சியுள்ள வளமேனும் மக்கள் வசமாகும்.


கண்ணன் ஸ்ரீஹரி

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks