கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020
கொழுப்பு என்பது அதிகளவில் எரிசக்தியை அளிக்கும் சத்தாகும். இது மாவுச்சத்து மூலம் கிடைக்கும் எரிசக்தியைப் போல 2.25 மடங்கு எரிசக்தியைக் கூடுதலாக அளிக்கும். மேலும், தோல் நலனுக்கும் ஹார்மோன்கள் மற்றும் பாலுற்பத்திக்கும் தேவையாகும். எனவே, கால்நடைத் தீவனத்தில் கொழுப்புச்சத்து முக்கிய அங்கமாகும்.
எண்ணெய் எடுக்காத புண்ணாக்கு, தவிடு, பருத்தி விதை, தரமான கால்நடைத் தீவனம் போன்றவற்றின் மூலம் கால்நடைகளுக்குத் தேவையான கொழுப்புச்சத்துக் கிடைக்கிறது. இது, வைக்கோல், பசும்புல் போன்றவற்றில் மிகக் குறைவாகவே உள்ளது. பாலில் சுமார் 87% நீர்ச்சத்தும் 3-7% கொழுப்பும் 3-3.3% புரதமும் 4.6-4.8% லேக்டோஸ் என்னும் மாவுச்சத்தும் 0.8% தாதுப்புகளும் உள்ளன. இவற்றில் கொழுப்புச்சத்து மட்டுமே அதிக மாறுதலுக்கு உட்பட்டது. மாட்டினம், கறவைக்காலம், ஈத்து, கிடைக்கும் உணவின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், பாலிலுள்ள கொழுப்பின் அளவு மாறுபடும்.
இளம் கறவையில் குறைவாக இருக்கும் கொழுப்பு, போகப்போக அதிமாகவும், வற்றுக்காலத்தில் மிக அதிகமாகவும் இருக்கும். தீவனத்தில் மாவுச்சத்து நிறைந்த மக்காச்சோளம், கோதுமை, அரிசி சேர்ந்திருந்தால் பாலுற்பத்தி அதிகமாகும். ஆனால், பாலில் கொழுப்புச்சத்தின் அளவு குறைவாக இருக்கும்.
இந்தியாவில் பெரும்பாலும் பாலிலுள்ள கொழுப்பின் அளவை வைத்தே அதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கொழுப்புச்சத்தைக் கூட்ட, கால்நடைகளின் உணவில் நார்ச்சத்து மிகுந்த வைக்கோல், உலர் தட்டையை நிறையக் கொடுக்க வேண்டும். தீவனத்தில் உள்ள கொழுப்பானது சிறு குடலால் செரிக்கப்பட்டு நேரடியாகப் பால் கொழுப்பாக மாற்றப்படுகிறது. பாலில் கொழுப்புச்சத்தை கூட்டும் நோக்கில், புண்ணாக்கை நிறையக் கொடுத்தால் கருவுறுதல் பாதிக்கும். எனவே, கொழுப்பு உட்பட அனைத்துச் சத்துகளும் சரியாகக் கலந்துள்ள தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.
கறவை மாடுகளின் உணவில் தேவைக்கு மேல் கொழுப்புச்சத்து இருந்தால், அசையூண் அதாவது ரூமன் பகுதியில் நார்ச்சத்தின் செரிக்கும் தன்மை குறையும். இதனால் பாலுற்பத்தியும் குறையும். எனவே, மிகுந்த பாலுற்பத்தித் திறனுள்ள மாடுகளுக்கு அசையூண் பகுதியில் செரிக்காத பை-பாஸ் கொழுப்பை அளித்தால், பால் கொழுப்பின் அளவு கூடும்.
வெய்யில் காலத்தில் ஏற்படும் அயர்ச்சியை மட்டுப்படுத்த, கொழுப்புச்சத்துச் சரியாக உள்ள கலப்புத் தீவனத்தை மாடுகளுக்கு அளிக்க வேண்டும். உணவின் மூலம் கிடைக்கும் தரமான கொழுப்பானது, சிறந்த பாலுற்பத்திக்கு மட்டுமின்றி, கால்நடைகளின் உடல் நலத்துக்கும் உதவும்.
கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,
தொழில்நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை,
பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!