செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022
இன்றைய சூழலில், ஒரு பண்ணைத் தொழிலை வெற்றியுடன் நடத்துவதற்கு உகந்தது, கால்நடைகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதாகும். ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் ஒரு தொழிலின் கழிவு அல்லது மிகுதி, மற்றொரு தொழிலுக்கு உகந்த பொருளாக அமைகிறது. கால்நடை மற்றும் மீன் பண்ணை இணைந்த பண்ணையத்தில் மிகவும் முக்கியமானது மற்றும் இலாபம் தரக் கூடியதாக அமைவது, பன்றியுடன் மீன் வளர்ப்பை ஒருங்கிணைத்தல் ஆகும்.
இம்முறையில், மீன் உற்பத்திக்கு ஆகும் தீவனச் செலவில் 60 விழுக்காட்டை, பன்றி வளர்ப்பில் கிடைக்கும் கழிவுகளை மீன்களுக்கு இடுவதன் மூலம் குறைத்துக் கொள்ளலாம். பன்றிக் கழிவு மீன்களுக்கு ஏற்ற சரிவிகித உணவாக உள்ளது.
நன்மைகள்
பன்றியுடன் இணைத்து மீன்களை வளர்ப்பதில், சமையல் கழிவு, காய்கறிக் கழிவு மற்றும் வேளாண் துணைப் பொருள்கள் பன்றிகளுக்கு உணவாக அமைகின்றன. இதைப் போலப் பன்றிகளில் இருந்து கிடைக்கும் கழிவானது, மீன் குட்டைக்கு ஏற்ற இயற்கை எருவாக அமைகிறது. மீன் குட்டையில் இருந்து கிடைக்கும் தாவரக் களைகள், பன்றிகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.
மீன் குட்டை நீரானது பன்றிக் கொட்டிலைக் கழுவப் பயன்படுகிறது. பன்றிக் கழிவில் உள்ள நொதிப்பான்கள் மீன்களுக்கு உகந்த செரிமானப் பொருளாக அமைகின்றன. மேலும், பன்றி எருவிலுள்ள கூடுதலான செல்லுலோஸ் சக்திகள் மீன்களுக்கு நேரடியாக உணவாகின்றன. பன்றிக்கழிவைத் தினமும் அகற்றி மீன்களுக்கு இடுவதால் சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பன்றி மற்றும் மீன் வளர்ப்பு மூலம், கூடுதல் வேலை வாய்ப்பும், வருவாயும் கிடைக்கின்றன.
பன்றிக் கொட்டில்
பன்றிக் கொட்டிலை மீன் குட்டைக்கு மேல் அல்லது அருகில் அமைத்துக் கொள்ளலாம். பன்றிக் கழிவில் பாஸ்பரஸ் என்னும் மணிச்சத்துக் கூடுதலாக உள்ளது. மேலும், கணிசமான அளவில் தழைச்சத்து, சாம்பல் சத்து மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் ஆகிய நுண் சத்துகளும் உள்ளன. பன்றிச் சிறுநீரில் தழைச்சத்து அதிகமாக உள்ளது. எட்டு மாதங்களில் ஒரு பன்றியானது 1,000 கிலோ சாணத்தையும், 1,200 கிலோ சிறுநீரையும் வெளியேற்றுகிறது. பொதுவாக, ஒரு பன்றியானது தன் உடல் எடையில் பத்து சதக் கழிவை வெளியேற்றும்.
கொட்டிலை மீன் குட்டைக்கு மேலே அமைக்கும் போது, பன்றிக் கழிவு தொடர்ந்து மீன் குட்டையில் விழுந்து கொண்டே இருக்கும். இதன் மூலம், காற்று மற்றும் நீரின் சுழற்சியில் நன்கு கரைந்து விடும். இதனால், மீன்களுக்குத் தேவையான சில தாவரங்களும் குட்டையில் உற்பத்தியாகும். இவற்றைப் புல் கெண்டை போன்ற நன்னீர் மீன்கள் உண்டு விரைவாக வளரும்.
எனினும், பன்றிக் கழிவு கூடுதலாகக் குட்டையில் விழுவதால், சில நேரங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே இம்முறையில், சரியான எண்ணிக்கையில் பன்றிகளை இருப்பு வைக்க வேண்டும். பன்றிக் கொட்டிலை மீன் குட்டைக்கு அருகில் அமைக்கும் போது, தேவையான அளவில் மட்டும் கழிவை இடுவதால் இக்குறையைத் தடுத்து, அதிக வருவாயை ஈட்டலாம்.
மீன் மற்றும் பன்றி இணைந்த வளர்ப்புக்கு, பெரிய மற்றும் நடுத்தர வெள்ளை யார்க்ஷயர், பெர்க்ஷர், லான்ட்ரேஸ் பன்றியினங்கள் உகந்தவை. மீன் குட்டைக்கு அருகில் அமைக்கப்படும் பன்றிக் கொட்டிலைச் சுகாதாரமாகப் பராமரித்தல் அவசியமாகும். பன்றிக் கொட்டிலைக் குளத்தின் ஒரு மூலையில் அமைத்தல் நல்லது. பன்றிகள் தங்கும் அறை, உணவளிக்கும் அறை என, இரு அறைகள் பன்றிக் கொட்டிலில் இருக்க வேண்டும். இரண்டு அறைகளுக்கும் இடையே இரும்புக் கதவு இருத்தல் நல்லது.
உணவு அறையில் தீவனமும் குடிநீரும் அளிக்கும் வசதி இருக்க வேண்டும். மீன் குட்டைக்கு அருகில் அமைக்கப்படும் பன்றிக் கொட்டிலின் அடித்தளத் தூண்கள், மற்ற சுவர்களின் அகலத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாக இருக்க வேண்டும். இதைப் போலக் குளத்தில் ஆழமாகப் பதிவதைப் போலத் தூண்களை அமைக்க வேண்டும். தரையானது சிமென்ட் கான்கிரீட்டில் இருந்தால், நீரின் அளவு கூடினாலும் பாதிப்பு ஏற்படாது.
பன்றிக் கொட்டிலின் கூரையானது, தரையில் இருந்து 2.5-3.0 மீட்டர் உயரத்தில் இருத்தல் நல்லது. இதை, கான்கிரீட், பனையோலை, தென்னை ஓலை, ஓடு ஆகியற்றால் அமைக்கலாம். பக்கச் சுவரைக் கம்பிகள் மூலம் அமைக்கலாம். வடிகால் வசதி மிகவும் அவசியம். வடிகாலின் அகலம் கால் மீட்டருக்கு மேல் அமைதல் மிகவும் நல்லது. மேலும், இது ஒவ்வொரு பத்து மீட்டருக்கும் இடையில் 2.5 செ.மீ. சாய்வுடன் இருந்தால் கழிவுகள் தங்காமல் எளிதாக வெளியேறும்.
உணவு
மீனுடன் இணைந்த பன்றி வளர்ப்பு முறையில், பன்றிகளை வளர்க்கும் நோக்கம் அறிந்து அதற்கேற்ப உணவளிக்க வேண்டும். இறைச்சிக்காக வளர்த்தால், அவற்றுக்கு உணவகம் மற்றும் விடுதிகளில் கிடைக்கும் கழிவுகள், காய்கறிக் கழிவுகளை ஒரு பாத்திரத்தில் இட்டுக் கொதிக்க வைத்து அல்லது சூடேற்றி ஆற வைத்துக் கொடுத்தாலே போதும்.
இதனால், தீவனச் செலவைக் குறைத்துக் கூடுதலான இலாபத்தைப் பெறலாம். இரண்டு மாதக் குட்டிகளை வாங்கி 6-8 மாதங்கள் வளர்த்து எடையைப் பெருக்கி நல்ல விலைக்கு விற்று விடலாம். சிறந்த பராமரிப்பு அல்லது 18 கிலோ எடையுள்ள பன்றிக்குட்டி, ஆறு மாதங்களில் 70 கிலோ எடையை அடையும்.
இன விருத்திக்காக விற்பனை செய்வதாக இருந்தால், தாய்ப்பன்றி மற்றும் கிடாப் பன்றிக்குச் சரிவிகித உணவை அளிக்க வேண்டும். இம்முறையில் பாதி உணவை, உணவக மற்றும் காய்கறிக் கழிவாகவும், பாதி உணவைக் கலப்புத் தீவனமாகவும் வழங்க வேண்டும். இதனால், பன்றிகளில் கருத்தரிப்பு வாய்ப்பு அதிகமாகும்.
மேலும், பன்றிகளில் செரிப்புத் தன்மையை அதிகரிக்க, நறுக்கிய தீவனப் புல்லையும் சிறிதளவு கொடுக்க வேண்டும். தாதுப்புக் குறைவால் நோய்கள் தாக்காமல் இருக்க, வைட்டமின் மற்றும் தாதுப்புச் சத்துகளைத் தீவனத்துடன் கலந்து கொடுப்பது மிகவும் அவசியமாகும்.
மீன் உற்பத்தி
ஓர் ஏக்கர் மீன் குட்டையில் 5,000 முதல் 6,000 மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து, ஐந்து வெள்ளை யார்க்ஷயர் பன்றிகளை இணைத்து வளர்த்தால், 4-5 டன் மீன்கள் கிடைக்கும். இதைப் போலப் பன்றிகள் மூலம் 8-9 டன் இறைச்சியும் கிடைக்கும்.
முனைவர் பா.குமாரவேல்,
முதல்வர், கால்நடை மருத்துவக் கல்லூரி,
உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!