நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

Incubation by chickens

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019

நோயெதிர்ப்புச் சக்தியுள்ள நாட்டுக் கோழிகள், பருவநிலை மாற்றம் மற்றும் முறையான வளர்ப்பின்மையால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் நமது பாரம்பரிய மூலிகை மருத்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வெள்ளைக் கழிச்சல் நோய்

இராணிக்கெட் என்னும் வெள்ளைக்கழிச்சல், ஆண்டு முழுதும் கோழிகளைத் தாக்கினாலும், வெய்யில் மிகுந்த சித்திரை, வைகாசியில் கடுமையாக இருக்கும். வெள்ளையாகக் கழிவது, கொக்கைப் போல் குறுகி, உண்ணாமல்  இருப்பது இதன் அறிகுறிகள். நோயுற்ற கோழிகளில் தலைச்சுற்றல், இறக்கைத் தளர்ச்சி இருக்கும். நரம்புப் பாதிப்பால், கால்களை இழுத்துக் கொண்டு, கழுத்தைத் திருகிக் கொண்டு, தீனி எடுக்காமல் 2-3 நாளில் இறந்து விடும். குஞ்சுகளின் கண்களில் நீர் மிகுந்திருக்கும். ஒரு கோழிக்கு வரும் நோய் எல்லாக் கோழிகளையும் தாக்கி இறக்கச் செய்து விடும். 

இந்நோய் வருமுன் தடுப்பூசியைப் போட்டால் இறப்பைக் குறைக்கலாம். இது வராமல் தடுக்க, குஞ்சுகள் பிறந்து 5-7 நாளில் ஆர்.டி.வி. எஃப்/பி1 என்னும் சொட்டு மருந்தைக் கண்ணில் விட வேண்டும். 21 நாளில் லசோட்டா என்னும் மருந்தை வாய்வழியாகத் தர வேண்டும். எட்டு வாரக் குஞ்சுக்கு, ஆர்.டி.வி.கே. என்னும் ஊசி மருந்தை இறக்கையில் போட வேண்டும். இது கால்நடை மருத்துவ மனைகளில் சனிக்கிழமையில் இலவசமாகப் போடப்படுகிறது. தானுவாஸ் வெள்ளைக்கழிச்சல் குருணை மருந்தை, 2-3 மாதங்களுக்கு ஒருமுறை வாய்வழியாகக் கொடுக்கலாம்.

கோடையில் ஒரு கிராம் மஞ்சளை 5 லிட்டர் நீரில் கலந்து கொடுத்தால், கோழிகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி மிகும். நோயுற்ற கோழிகளுக்கு 10 கிராம் சீரகத்துடன் 50 கிராம் கீழாநெல்லியைச் சேர்த்து இடித்து, மிளகளவு உருண்டையாக உருட்டி, தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து ஒரு மணிக்கு ஒருமுறை 3-5 நாட்களுக்குக் கொடுக்கலாம். இந்த அளவு 10 கோழிகளுக்குப் பொருந்தும்.

கோழியம்மை

இது கோடையில் கோழிகளைத் தாக்கும். கோழிகளின் தலை, கண், கொண்டையில் கொப்புளங்கள் தோன்றும். கண்ணில் தோன்றும் கொப்புளங்கள் பார்வையை மறைப்பதால் உண்ண முடியாது. இது, வளர்ந்த கோழிகளில் அதிக இறப்பை ஏற்படுத்தாது. ஆனால், குஞ்சுகளில் அதிக இறப்பை ஏற்படுத்தும். இதைக் கட்டுப்படுத்த, கோழியம்மைத் தடுப்பூசியை, மூன்றாவது வாரத்தில் ஊசி மூலம் இறக்கையில் போட வேண்டும்.

நோயுற்ற குஞ்சுகளின் முதலுதவிக்காக, 10 துளசியிலை, 10 வேப்பிலை, 5 பூண்டுப்பல், 5 கிராம் மிளகு, 10 கிராம் சீரகம், 5 கிராம் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்துச் சிறு உருண்டையாக உருட்டி, 5-7 நாள் கொடுக்க வேண்டும். கோழிகளைப் பாதுகாக்க, 10 கிராம் பூண்டு, 50 கிராம் துளசியிலை, 50 கிராம் வேப்பிலை, 10 கிராம் மஞ்சள் தூள், 50 கிராம் சூடம், 20 கிராம் சீரகம் ஆகியவற்றை அரைத்து, தலா 100 மில்லி விளக்கெண்ணெய், வேப்பெண்ணையில் கலந்து, லேசாகச் சூடாக்கி, அம்மையுள்ள இடங்களில் பூச வேண்டும்.

புற ஒட்டுண்ணிகள் பாதிப்பு

பேன், உண்ணியைக் கட்டுப்படுத்த, 100 கிராம் சாம்பல், 25 கிராம் வசம்புத்தூள், 10 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து கோழியின் இறகுகளை விலக்கித் தூவ வேண்டும்.

நோயெதிர்ப்பைத் தரும் மூலிகை மருத்துவம்

ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் சீரகம் வீதம் கலந்து காய்ச்சி ஆற வைத்து, வாரம் இருமுறை கொடுக்கலாம். கோடையில் சோற்றுக் கற்றாழையைச் சிறு துண்டுகளாக நறுக்கித் தனி உணவாக வாரம் 1-2 முறை கொடுக்கலாம். கீழாநெல்லியை வேருடன் பறித்து, சிறு துண்டுகளாக வெட்டிக் காய்ச்சி, குடிநீருடன் கலந்து கொடுக்கலாம்.


மரு.பா.பாலமுருகன்,

மரு.அ.செந்தில்குமார், மரு.சு.முருகேசன், உழவர் பயிற்சி மையம், தேனி.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!