கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி guinea hen

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021

ளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழியினங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது. இந்தியாவில், கோழி, காடை, வாத்து வளர்ப்புக்கு அடுத்த நிலையில் கினிக்கோழி வளர்ப்பு உள்ளது. குறைந்த முதலீடு மற்றும் குறைவான பராமரிப்பில், அதிக இலாபம் தரும் கினிக்கோழிகள், இறைச்சிக்காக, சிறு சிறு அளவில் வளர்க்கப்படுகின்றன.

கினிக்கோழி வகைகள்

இந்தியாவில், சாம்பல், வெள்ளை, இலாவெண்டர், வெள்ளை மார்பக வகைக் கினிக்கோழிகள் உள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், நந்தனம் கினிக்கோழி 1 என்னும் தரம் உயர்த்தப்பட்ட கினிக்கோழியை அறிமுகப்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஈசட் நகரிலுள்ள மத்திய கோழியின ஆராய்ச்சி நிலையம், கடம்பரி, சிற்றம்பரி, செடெம்பரி ஆகிய கினிக்கோழி வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. தரம் உயர்த்தப்பட்ட இந்தக் கினிக்கோழிகள், குறைந்த வயதில் அதிக எடையில் வளரும் திறனும், முட்டையிடும் திறனும் மிக்கவை.

கினிக்கோழியின் சிறப்புகள்

கறுத்த உடலில் வெள்ளைப் புள்ளிகளுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதிக நோயெதிர்ப்புச் சக்தியுடன் இருக்கும். எல்லாத் தட்பவெப்பச் சூழலிலும் வளரும். வீட்டுக்கும் வயலுக்கும் காவலாக இருக்கும். கீரையைப் போன்ற இலை தழைகள், புற்களைத் தீனியாகக் கொள்வதால், தீவனச் செலவும் குறையும். புறக்கடை வளர்ப்புக்கு ஏற்றது. மண்ணிலுள்ள புழு, பூச்சிகள், களைகள் போன்றவற்றை உண்பதால், சிறந்த பூச்சிக்கொல்லி உயிரியாக விளங்குகிறது.

பாம்பு போன்றவற்றைக் கண்டால், ஓசையெழுப்பி அவற்றைத் துரத்தும் தன்மை மிக்கது. வீட்டில் வளர்த்தாலும் இதன் இறைச்சி, காட்டுக்கோழி இறைச்சியைப் போலவே வாசமாக இருக்கும். கினிக்கோழி இறைச்சி சிறந்த விலங்கினப் புரதமாகும். இதில், உயிர்ச் சத்துகள் நிறைந்தும், கொழுப்புக் குறைந்தும் இருப்பதால், சிறியோர் முதல் பெரியோர் வரை, அனைவரும் உண்ணலாம். முட்டையின் ஓடு தடித்து இருப்பதால் உடைவது குறைவாக இருக்கும்; நெடுநாட்கள் கெடாமலும் இருக்கும். இதன் எச்சம் நல்ல எருவாகும்.

வளர்ப்பு முறை

திறந்தவெளி மேய்ச்சல் முறை: இம்முறையில் வெட்டவெளியில் மேயும் கினிக்கோழிகள், இரவில் மரக்கிளைகளில் தங்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் 400-500 கினிக்கோழிகளை வளர்க்கலாம். கொட்டகை மற்றும் அடர் தீவனச் செலவு இல்லாததால், முதலீட்டுச் செலவும், பராமரிப்புச் செலவும் குறைவாகவே இருக்கும். ஆனால் இம்முறையில், கோழிகளைக் கவனிப்பதும், நோய்த்தடுப்பு முறைகளை எடுப்பதும், முட்டைகளைச் சேகரிப்பதும் கடினம்.

மேய்ச்சல் கலந்த கொட்டில் முறை: இம்முறை, கிராமங்களில் பரவலாக உள்ள புறக்கடை கோழி வளர்ப்பு முறையாகும். இதில், பகலில் வெளியில் மேயும் கினிக்கோழிகள், இரவில் கொட்டகையில் தங்கும். இதனால், விலங்குகளிடம் இருந்து இவற்றைப் பாதுகாக்க முடியும். மேலும்,  மாலை நேரத்தில் சிறுதானியங்கள், சமையல் கழிவுகள் அல்லது அடர் தீவனத்தை அளிப்பதால், சத்துக் குறைகளைத் தவிர்க்கலாம்.

கொட்டில் முறை: வணிக நோக்கில் பெரியளவிலும் மற்றும் குறைவான இடத்தில் அதிகளவிலும் கினிக்கோழிகளை வளர்ப்பதற்கு, கொட்டில் முறையே சிறந்தது. கொட்டிலின் நீளவாட்டம் கிழக்கு மேற்கில் அமைய வேண்டும். நீளம் நூறு அடிக்கு மிகாமலும், அகலம் 24 அடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். தட்பவெப்ப நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில், ஆழ்கூள முறையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கினிக்கோழிக்கு 1.5 சதுரடி, முட்டைக்காக வளர்க்கப்படும் கினிக்கோழிக்கு 2.5 சதுரடி வீதம் இடவசதி இருக்க வேண்டும். கூண்டு முறையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கினிக்கோழிக்கு 0.75 சதுரடி, முட்டைக்காக வளர்க்கப்படும் கினிக்கோழிக்கு ஒரு சதுரடி வீதம் இடவசதி இருக்க வேண்டும்.

வளர்ப்புப் பருவம்

கோழிகளைப் போலவே, கினிக்கோழி வளர்ப்பில், நான்கு வாரம் வரை இளம் குஞ்சுப் பருவம், 5-8 வாரம் வரை குஞ்சுப் பருவம், 9-20 வாரம் வரை வளர் பருவம், 20 வாரங்களுக்கு மேல் முட்டையிடும் மற்றும் இனப்பெருக்கப் பருவம் எனக் கணக்கிட்டுப் பராமரிக்க வேண்டும்.

இளம் குஞ்சுகள் பராமரிப்பு

ஒருநாள் கினிக்கோழிக் குஞ்சின் எடை 25-30 கிராம் இருக்கும். இந்தக் குஞ்சுகளுக்குச் செயற்கை வெப்பம் கொடுக்க வேண்டும். இதற்கான குஞ்சுக் காப்பானை, குஞ்சுகள் பிறப்பதற்கு ஒருநாள் முன்பே தயாராக வைக்க வேண்டும். தரையில் மூன்று அங்குல உயரத்தில் நெல்லுமியைப் பரப்பி, அதற்கு மேல் செய்தித்தாள் அல்லது கோணிப்பையை விரித்து வைக்க வேண்டும். குஞ்சுக் காப்பான், குடிநீர்க்கலன், தீவனக்கலன் ஆகியன வட்ட வடிவில் இருக்க வேண்டும்.

ஒரு ச.மீ. பரப்பில் 20 குஞ்சுகளை வளர்க்கலாம். முதல் வாரத்தில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொடுக்க வேண்டும். அடுத்து, வாராவாராம் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீதம் குறைத்து, அறையின் இயல்பான வெப்ப நிலையை வழங்க வேண்டும். இந்தக் குஞ்சுகளைக் கூண்டில் வளர்க்க, எட்டு வாரம் வரையில், சாதாரணக் கோழிக்குஞ்சுக் கூண்டையே பயன்படுத்தலாம். தீவனக்கலன், குடிநீர்க்கலன் வசதியுடன் கூடிய 2x2x1 அடி நீள, அகல, உயரக் கூண்டில் 22 கினிக்கோழிக் குஞ்சுகளை வளர்க்கலாம்.

வளர்நிலைக் கோழிகள் பராமரிப்பு

கினிக்கோழி வளர்ப்பில், 9-20 வார வயதுள்ள கினிக்கோழிகள் வளரும் கோழிகள் எனப்படும். இப்போது ஒரு கினிக்கோழிக்கு 1.5 சதுரடி வீதம் இடம் தர வேண்டும். செயற்கை வெப்பம் தேவையில்லை. வளர்நிலைக் கினிக்கோழிகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

முட்டைக்கோழிகள் பராமரிப்பு

இருபது வாரங்களைக் கடந்த கினிக்கோழிகள், முட்டை மற்றும் இனவிருத்திக் கோழிகள் எனப்படும். மேய்ச்சல் முறை கினிக்கோழி முட்டையிடும் இடத்தில் ஒரு பொய் முட்டையைச் செய்து அந்த இடத்தில் வைத்து விட்டு, அதன் முட்டையைச் சேகரிக்க வேண்டும். இல்லையெனில், மறுநாள் முட்டையிடும் இடத்தை மாற்றி விடும். ஒரு கோழி ஓராண்டில் 150-160 முட்டைகளை இடும். சேவலுக்கு 3 சதுரடி, பெட்டைக்கு 2.5 சதுரடி வீதம் இடம் தர வேண்டும்.

இனப்பெருக்கக் கினிக்கோழிகள் பருவத்துக்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும். 24 வாரத் தொடக்கத்தில் ஆண்: பெட்டைக் கோழிகளை 1:4 வீதம் பிரித்துவிட வேண்டும். இது, அதிக முட்டைகளை இடவும், கரு உற்பத்தி மற்றும் குஞ்சுப் பொறிப்புத் திறன் அதிகமாகவும் உதவும்.

கினிக்கோழிகளில் தொடக்க நிலையில் ஆண், பெண் வேறுபாட்டை அறிவது கடினம். எழுப்பும் ஒலி, தலை, தாடி, கொண்டை ஆகியவற்றின் மூலம் பாலினத்தை அறியலாம். கினிக்கோழிகளின் இனவிருத்தித் திறன், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுபடும். எனவே, இந்தக் கோழிகளுக்கு ஒளி மிகவும் அவசியம். நூறு சதுரடிக்கு ஒரு 40 வாட் குண்டு விளக்கு வீதம் ஆறடி உயரத்தில் 16 மணி நேரம் தொடர்ந்து எரிய வேண்டும்.

குஞ்சுப் பொறிப்புத் திறன்

கினிக்கோழி முட்டையின் அடைக்காலம் 28 நாட்களாகும். 5-7 நாட்களில் சேகரித்த முட்டைகளை இயற்கை முறையில் நாட்டுக்கோழிகள் மூலமும், செயற்கை முறையில் குஞ்சுப் பொறிப்பான் மூலமும் குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். கினிக்கோழி முட்டைகளின் குஞ்சுப் பொறிப்புத் திறன் 70% இருக்கும். இதை மேலும் கூட்ட, செயற்கைக் கருவூட்டல் முறையைக் கையாளலாம். வாய்ப்பற்ற காலநிலைகளில் ஏற்படும் கருவுறும் திறன் இழப்பைத் தவிர்க்க, செயற்கைக் கருவூட்டல் முறை உதவும்.

தீவன நிர்வாகம்

மேய்ச்சல் முறையில் வளரும் கினிக்கோழிகள்; கொசுக்கள், உண்ணிகள், வண்டுகள், புழுக்கள், நத்தைகள், கம்பளிப் புழுக்கள் போன்றவற்றை உண்டு, தமது சத்துத் தேவையைச் சரிக்கட்டிக் கொள்ளும். ஆனால், கொட்டிலில் வளரும் கோழிகளுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லை. எனவே, எல்லாச் சத்துகளும் அடங்கிய அடர் தீவனத்தை இந்தக் கோழிகளுக்குக் கொடுக்க வேண்டும்.

தீவனச் செலவைக் குறைக்க, வேலிமசால், முயல் மசால், சூபாபுல், அசோலா, கரையான் போன்றவற்றைத் தீனியாகத் தரலாம். கினிக்கோழிகளுக்குப் புரதம் மிகுந்த அடர் தீவனம் கிடைக்காத நிலையில், சோயா புண்ணாக்கு, கருவாடு ஆகியவற்றை உரிய அளவில் முட்டைக்கோழித் தீவனத்தில் கலந்து தரலாம். கொட்டிலில் தீவனத் தட்டுகள், நீர்க்கலன்கள் போதியளவில் இருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் எந்நேரமும் இருக்க வேண்டும்.


ஆலோசனை

கினிக்கோழிகளை வளர்க்க விரும்புவோர், தங்களின் சுற்றுப்புறத்தில் கினிக்கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனை வாய்ப்புகளை நன்கு அறிந்து கொண்டு, கினிக்கோழிகளை வளர்க்க வேண்டும்.


கினிக்கோழி Dr. K.PREMAVALLI e1629361785551

முனைவர் க.பிரேமவல்லி,

இணைப் பேராசிரியர், கோழி இனவிருத்திப் பிரிவு, கால்நடை அறிவியல் முதுகலை

ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்-603203, செங்கல்பட்டு.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!