நிலத்தை வளமாக்கும் அருமையான உரங்களைத் தயாரிப்பது எப்படி?

உரங்களைத் தயாரிப்பது எப்படி agriculture land

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021

யிருள்ள பொருள் மண். இது பயனற்ற பொருள்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றுவதில் தொழிற்கூடம் போலச் செயல்படுகிறது. இது பல வகைப்படும். ஒவ்வொரு வகை மண்ணிலும் கவனம் செலுத்திச் சீராக்க வேண்டும். சாகுபடிக்குப் பயன்படாத நிலங்களைக் கூட நவீன உத்திகள் மூலம் சீர்திருத்தலாம். நம் எல்லோருக்கும் விளைநிலம் இல்லையெனினும், அதைச் சார்ந்தே நாம் வாழ்கிறோம். எனவே, மண்ணின் உற்பத்தித் திறனைப் பராமரிப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

இயற்கை வழிகளில் சத்து நிர்வாகம்

இயற்கை உரங்களில் தொழுயெரு, கம்போஸ்ட், பசுந்தாள் எரு ஆகியன, மண்ணில் ஈரத்தை ஈர்த்து வைத்து, நுண்ணுயிர்கள் பெருக உதவும். பயிர்களுக்குத் தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணுரங்களையும் அளிக்கும். நிலத்தில் இடும் ஒரு டன் தொழுவுரம் சுமார் 50 கிலோ நெல் விளைச்சலைத் தரும். மேலும், தொழுயெருவும் கம்போஸ்ட்டும் மண்ணின் அமைப்பை வளப்படுத்தும். மண்ணின் அயனி மாற்றுத் திறனைக் கூட்டும்; இறுகிய மண்ணைப் பொலபொலப்பாக்கும்.

தொழுயெரு அல்லது கம்போஸ்ட் தேவைக்குக் கிடைக்காத போது ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இடலாம். இதைத் தயாரிக்க, ஏக்கருக்கு 300 கிலோ மட்கிய தொழுவுரம் தேவை. இத்துடன், இடப்போகும் பயிருக்குத் தேவையான சூப்பர் பாஸ்பேட்டைக் கலந்து, ஒரு மாதம் மூட்டம் போட்டு வைக்க வேண்டும். பிறகு, தேவையான அளவு சாம்பல் சத்தைக் கலந்து அடியுரமாக இடவேண்டும். இதனால், பயிர்களுக்கு மணிச்சத்து எளிதில் கிடைக்கும். மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை மிகும். வேர்கள் நன்கு வளரும். மானாவாரிப் பயிர்கள் வறட்சியைத் தாங்கி வளரும்.

தக்கைப்பூண்டு, சீமையகத்தி, கொளுஞ்சி, சணப்பு, அவுரி, நரிப்பயறு எனப்படும் பில்லிப்பயறு ஆகியன நல்ல பசுந்தாள் உரமாகும். வேம்பும், புங்கனும் பூச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். கொளுஞ்சியும், சணப்பும் நஞ்சைக்கு ஏற்றவை. அதிகளவில் தழையைக் கொடுக்கும் தக்கைப்பூண்டு களர் உவர் நிலங்களுக்கு ஏற்றது. ஒரு எக்டர் பசுந்தாள் பயிர்கள் சுமார் 80 கிலோ தழைச்சத்தைக் கொடுக்கும்.

இவற்றைப் போல, பண்ணை மற்றும் ஆலைக் கழிவுகளையும் உரமாகப் போடலாம். இவ்வகையில், தென்னைநார்க் கழிவை கம்போஸ்ட்டாக மாற்றி, எக்டருக்கு 12.5 டன் இட்டால், நெல், சோளம், நிலக்கடலை போன்ற பயிர்களில் மகசூல் மிகும். மணற்பாங்கான நிலத்தில் மண்ணின் நீர் தாங்கும் திறன் இரண்டு மடங்காகும். பாசன நீரின் உப்புத் தன்மையும், களர் மண்ணின் காரத்தன்மையும் குறையும். தென்னைநார்க் கழிவு கம்போஸ்ட்டில் 1.06% தழைச்சத்தும், 0.06% மணிச்சத்தும், 1.2% சாம்பல் சத்தும் உள்ளன. இவற்றைத் தவிர, துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ் ஆகிய நுண் சத்துளும் உள்ளன.

சர்க்கரை ஆலையிலிருந்து கிடைக்கும் பிரஸ்மட் எனப்படும் சர்க்கரைக் கழிவையும் உரமாகப் பயன்படுத்தலாம். இது களர் நிலத்தில் சோடியத்தின் காரத் தன்மையை நீக்கும். இதில் நுண் சத்துகளும் உள்ளதால் பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதையும் ஊட்டமேற்றிய தொழுவுரமாகத் தயாரித்துப் பயிர்களுக்கு இடலாம்.

கரும்புத் தோகையை நிலத்திலேயே எரிப்பதால், அதிலுள்ள சத்துகள் வீணாகி விடும். மேலும், இந்தத் தீயில் மண்புழுக்களும் இறந்து விடும். எனவே, கரும்புத் தோகையை கம்போஸ்ட்டாக மாற்றி நிலத்தில் இடலாம். மேலும், வீட்டிலிருந்து வீணாகும் பொருள்களையும் உரமாகப் பயன்படுத்தலாம். இவற்றிலுள்ள சத்துகள் நல்ல முறையில் கிடைக்க, பின்வரும் முறைகளைக் கையாள வேண்டும்.

கம்போஸ்ட் உரத்துடன் சிறிதளவு யூரியாவைச் சேர்க்கலாம். தொழுயெரு, கம்போஸ்ட், பசுந்தாள் எருவை, சாகுபடிக்கு 3-4 வாரங்களுக்கு முன்பே இட்டால் தான் அவை சிதைவுற்று, பயிரின் வளர்ச்சிக் காலத்தில் பயிர்களுக்குச் சத்துகளை அளிக்கும். அவரையைச் சுழற்சி முறையில் பயிரிட்டால், அது காற்றிலுள்ள தழைச்சத்தை நிலைப்படுத்தி பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும். யூரியாவுடன் வேப்பம் புண்ணாக்கைக் கலந்து இட்டால், தழைச்சத்து வீணாகாது. மண்ணாய்வு முடிவின்படி உரங்களை இட வேண்டும். நுண்ணுயிர் உரங்களை இட்டால், தழைச்சத்தைத் தரும் இரசாயன உரத்தில் 25 சதத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

தொழுயெரு

தொழுயெருவை முறையாகச் சேமிக்க வேண்டும். ஒரு மாடு தினமும் 10 கிலோ பச்சைச் சாணத்தையும், 7 லிட்டர் சிறுநீரையும் வெளியேற்றும். இவ்வகையில், ஒரு மாட்டிலிருந்து ஓராண்டில் 3.5 டன் சாணமும், 2,500 லிட்டர் சிறுநீரும் கிடைக்கும். எனவே, ஒரு மாடு இருந்தாலே ஆண்டுக்குத் தேவையான இயற்கை எருவைப் பெற முடியும். முக்கியமாக, சாணத்தை எரிபொருளாகப் பயன்படுத்தாமல் எருவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மாட்டின் சாணத்தைவிட அதன் சிறுநீரில், தழைச்சத்து 50%, சாம்பல் சத்து 25% கூடுதலாக உள்ளன. எனவே, சிறுநீரை வீணாக்காமல் உரமாகப் பயன்படுத்த வேண்டும். மட்கிய 100 கிலோ தொழுயெருவில் தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 300 கிராம், சாம்பல் சத்து 500 கிராம் உள்ளன.

கோழியெரு

ஒரு கோழி தினமும் 68 கிராம் எச்சத்தை இடும். 100 கிலோ எச்சத்தில், 2.75 கிலோ தழைச்சத்தும், 3 கிலோ மணிச்சத்தும், 2.05 கிலோ சாம்பல் சத்தும் உள்ளன. இந்த எச்சத்தை ஒரு மாதம் வரை நிழலில் வைத்திருந்த பிறகே இட வேண்டும்.

ஆட்டுப் புழுக்கை

ஒரு ஆடு தினமும் 300 கிராம் புழுக்கை மற்றும் 200 மில்லி சிறுநீரைக் கழிக்கும். ஆட்டெரு அவ்வருடம் மாட்டெரு மறு வருடம் என்பது பழமொழி. 100 கிலோ ஆட்டெருவில் ஒரு கிலோ தழைச்சத்தும், 400 கிராம் மணிச்சத்தும், ஒரு கிலோ சாம்பல் சத்தும் உள்ளன. மாட்டெருவில் உள்ளதை விட ஆட்டெருவில் சத்து அதிகம்.

பசுந்தாள் எருப்பயிர்கள்

பசுந்தாள் எருப் பயிர்கள் மட்குச் சத்தாகப் பயன்படும். இவை காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைப்படுத்தும். இவை நிலத்தின் அடியிலுள்ள சத்துகளை மேலே கொண்டு வந்து பயிர்களுக்குக் கிடைக்கச் செய்யும். இத்தழைகள் விரைவாக மட்கி, நுண்ணுயிர்களின் இயக்கத்தை ஊக்கப்படுத்தி, பயிருக்குத் தேவையான சத்துகளை விரைந்து கிடைக்கச் செய்யும்.

தனது தண்டு, வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிர்கள் மூலம், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகிப்பதில், மற்ற பயிர்களைவிட மணிலா அகத்தியின் பங்கு அதிகம். இது 45 நாட்கள் வரை அதிகத் தழைகளைக் கொடுக்கும். இதைப் பயன்படுத்தினால், நெல்லுக்கு இடும் தழைச்சத்தில் 25 சதத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இதை நெல் வயலின் பட்டங்களில் 20 செ.மீ. இடைவெளியில் வளர்த்து 45 நாளில் சேற்றில் மடக்கி விடலாம். தாளடியில் பாதியிலேயே அறுத்துக் கட்டைப்பயிராக விடலாம். இம்முறையில், தாளடியில் எக்டருக்கு 750 கிலோ நெல் கூடுதலாகக் கிடைக்கும்.

தக்கைப்பூண்டு, சணப்பை, கொளுஞ்சியை, கரும்பில் ஊடுபயிராக வளர்த்து, 45 நாளில் அறுத்து, கரும்புக்கு உரமாக இட்டு, மண்ணை அணைத்து விட்டால், எக்டருக்கு 12.5 டன் கரும்பு கூடுதலாகக் கிடைக்கும்.

பசுந்தழை உரம்

பலவகை மரங்களின் தழைகள், புதர்ச் செடிகள், சிறு செடிகள் பசுந்தழை உரமாகும். இவ்வகையில், வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, சிலோன் வாகை, புங்கன், எருக்கு, அகத்தி, சூபாபுல் மற்றும் புதர்ச் செடிகள் மண்வளத்தை மேம்படுத்த உதவும். அத்துடன் நீர்ப்பிடிப்புத் திறனும் கூடும். பசுந்தழைகளை இட்டால், களைச்செடிகள் குறையும். காரத்தன்மையுள்ள மண் சீராகும். வேர் முடிச்சு நூற்புழுக்கள் கட்டுப்படும்.

இப்படி, இயற்கை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்தினால், நிலத்தை வளமாக்கி, உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும்.


PB_Anuradha

முனைவர் அ.அனுராதா,

முனைவர் வீ.விஜிலா, முனைவர் மு.இராமசுப்பிரமணியன், 

வேளாண்மை அறிவியல் நிலையம், நீடாமங்கலம், திருவாரூர்-614404.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!