கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019
வறட்சிக் காலத்தில் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையால் பெரும்பாலான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதைச் சமாளிக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
தீவனக் குறையால் கால்நடைகளின் உற்பத்தி பாதிக்காமல் இருக்க, அந்த நேரத்தில் கிடைக்கும் பல்வேறு வேளாண் துணைப் பொருள்களைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
உடைத்த இருங்குச் சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை, கொள்ளு, அரிசித்தவிடு, அரிசிக்குருணை, கோதுமைத்தவிடு, உளுந்து, பயறு, கடலைப்பொட்டு போன்றவற்றை மக்காச்சோளத்துக்குப் பதிலாக 50% வரை தீவனத்தில் சேர்க்கலாம்.
கிழங்குத் திப்பி, பருத்திவிதை, ஓடு நீக்கப்பட்ட புளிய விதை ஆகியவற்றை உடைத்துத் தீவனத்தில் சேர்க்கலாம். வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை, கடலைக்கொடி, காய்ந்த புல், சூரியகாந்திச் செடி, விதை நீக்கிய சூரியகாந்திப் பூக்கள், மக்காச்சோளத் தட்டை, கேழ்வரகுத் தாள் ஆகியவற்றைத் தீவனமாகக் கொடுக்கலாம்.
சத்துக்குறைந்த இந்த உலர் தீவனங்களில் 4% யூரியா கரைசலைத் தெளித்து, சில நாட்கள் காற்றுப் புகாமல் பாதுகாத்துச் சத்துள்ள தீவனமாக, ஆறு மாதம் கடந்த மாட்டுக்கு 4-5 கிலோ கொடுக்கலாம்.
ஆடுகளுக்குச் சோளத்தட்டையுடன் காய்ந்த உளுந்துச்செடி, துவரைச்செடி, கடலைக்கொடி, சவுண்டல், சீமையகத்தி, கொடுக்காய்ப்புளி, கருவேல், வாகை ஆகியன நல்ல உணவாகும். காய்ந்த பயறுவகைத் தீவனம் மிக நல்லது.
அன்றாடம் 20-25 கிலோ கரும்புத் தோகையை மாட்டுக்குக் கொடுக்கலாம். இதை சைலேஜ் முறையில் பதப்படுத்தி, தீவனக் குறையைப் போக்கலாம். புளிய விதை, மாங்கொட்டை போன்ற விதைகளை 20-30% வரை தீவனத்தில் சேர்க்கலாம்.
புரதம் அதிகமாகவும், எரிசக்தி குறைவாகவும் உள்ள மரத்தழைகளை முழுத் தீவனமாகக் கொடுக்கக் கூடாது. இவற்றுடன் வைக்கோல், சோளத்தட்டை, கம்பந்தட்டை போன்றவற்றைச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
கறவை மாட்டுக்கு 10-15 கிலோ, ஆட்டுக்கு 2.5 கிலோ தழையைத் தினமும் கொடுக்கலாம். அகத்தி, வேம்பு, பூவரசு, கருவேல், குடைவேல், பலா, ஆல், அரசு, உதியன், இலந்தை ஆகிய தழைகளையும் தீவனமாகக் கொடுக்கலாம்.
மரத்தழைகளை மற்ற உலர் தீவனத்துடன் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொடுக்க வேண்டும். 6-8 மணி நேரம் வாடவிட வேண்டும். ஈரப்பதம் 15-20%க்குக் கீழே உள்ள நிலையில் கொடுக்க வேண்டும். 2% உப்பு அல்லது வெல்லக் கரைசலைச் சேர்த்தால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.
மரத்தழைகளை உண்ணாத கால்நடைகளை, மரத்தழைகளை விரும்பி உண்ணும் கால்நடைகளுக்கு அருகில் கட்டி வைக்க வேண்டும்.
கால்நடைகள் பழக்கத்துக்கு அடிமையானவை. காலை அல்லது இரவில் நல்ல முறையில் உண்ணும். கடும் வெய்யிலில் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது. சுத்தமான நீரைக் கொடுக்க வேண்டும். தீவனத் தட்டைகளைச் சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டால் கழிவுகள் குறையும். நீரின்றி வாடும் இளம் சோளப்பயிரில் கால்நடைகளை மேய்க்கக் கூடாது.
ஏனெனில், இதிலுள்ள சைனிக் என்னும் விஷ அமிலம் கால்நடைகளைக் கொன்று விடும். முழுத் தீவனத்தையும் ஒரே தடவையில் கொடுக்காமல் 2-3 தடவையாகப் பிரித்துக் கொடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு: 94864 69044.
டாக்டர் வி.இராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குநர், கால்நடைப் பராமரிப்புத் துறை,
நத்தம், திண்டுக்கல் மாவட்டம்.
சந்தேகமா? கேளுங்கள்!