கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019
விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைகள். எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகள், நோய்கள் மூலம் இவற்றின் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு நேரலாம். இதற்கு மருத்துவரை அணுகி மருத்துவம் பார்ப்பதற்கு முன், பாதிப்பு மிகாமலிருக்க, உங்களிடம் உள்ள மருந்துகளைக் கொண்டு செய்யும் உதவியே முதலுதவியாகும்.
காயங்கள்
கால்நடைகளுக்குக் காயம் ஏற்பட்டால் முதலில் காயத்தை, சுத்தமான நீரில் டெட்டால் அல்லது சாவ்லானைக் கலந்து கழுவ வேண்டும். பின், சுத்தமான துணியால் ஒற்றியெடுத்து விட்டு டிங்ச்சர் அயோடின் அல்லது மஞ்சள் தூளை இட வேண்டும். பிறகு கால்நடை மருத்துவரை அணுகலாம். உடலில் புண் இருந்தால் ஈக்கள் மூலம் புழுக்கள் உண்டாகிக் காயத்தை ஆழமாக்கி விடும். இதற்குக் கற்பூரத்தைப் பொடித்துப் புண்ணில் வைக்கலாம். அல்லது வேப்ப எண்ணெய்யைப் புண்ணில் தடவலாம். புழுக்கள் இருந்தால் கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
எலும்பு முறிவு
எதிர்பாராத விபத்தினால் எலும்பு முறிவு ஏற்பட்டால், முறிந்த நிலையிலேயே அதிக அசைவு ஏற்படாத வகையில் மூங்கில், துணி கொண்டு கட்டுப்போட வேண்டும். பின்னங்கால், தொடை எலும்பு முறிவு ஆகியவற்றுக்கு மருத்துவம் செய்வது கடினம். எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஒருசேர இருப்பின் அந்தக் காயங்களுக்குக் கட்டுப்போடக் கூடாது. உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கொம்பு முறிவு
மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதால் அல்லது வெளியில் மேயும்போது கொம்பு முறிய வாய்ப்புண்டு. நுனிக்கொம்பு முறிந்தால் பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரில் கழுவிய பின், பொவிடோன் அயோடின் களிம்பைத் தடவலாம். இரத்தப் போக்கு அதிகமாக இருப்பின் அதன் மேல் துணியைச் சுற்றி டிங்ச்சர் பென்சாயினை ஊற்ற வேண்டும். கொம்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் ஈரமும் அழுக்கும் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயமான இடத்தில் துர்நாற்றம் வருகிறதா எனக் கவனிக்க வேண்டும். அப்படியிருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
கொம்பு முறிவு
கைகளைச் சுத்தமான நீர் அல்லது சோப்பால் கழுவி விட்டு, இரத்தம் வரும் இடத்தில் விரல்களை வைத்து அழுத்திப் பிடிக்க வேண்டும். இரத்தக் கசிவு அதிகமாக இருந்தால் சுத்தமான துணியால் கட்டுப் போடலாம்.
தீக்காயம்
கால்நடைக் கொட்டகை தீப்பிடிப்பதால் கால்நடைகளின் உடம்பில் தீக்காயம் ஏற்படலாம். உடம்பில் தீப்பிடித்து எரிந்தால் அடர்த்தியான போர்வை அல்லது சாக்குப் பையால் போர்த்த வேண்டும். பின்பு சுத்தமான நீரை ஊற்ற வேண்டும். கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
இரசாயனத்தால் ஏற்படும் காயங்கள்
இரசாயனத் திரவங்கள் உடம்பில் பட்டால் தோல், தசை முதலியன வெந்து விடும். அமில வகைத் திரவங்கள் உடம்பில் பட்டால் சோப்புநீர் அல்லது சோடா உப்புக் கலந்த நீரால் கழுவ வேண்டும். காரவகைத் திரவங்கள் உடம்பில் பட்டால் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்த நீரால் கழுவ வேண்டும். எந்த வகை இரசாயனம் எனத் தெரியா விட்டால் சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.
மின்னதிர்ச்சி
கால்நடைகளின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தால் நினைவிழப்பும் இறப்பு ஏற்படலாம். சில வேளைகளில் காயங்கள் ஏற்படாலாம். மின் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். பின்பே அருகில் செல்ல வேண்டும். கொட்டகையில் மின் கசிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், மின் கம்பம் அல்லது அதனருகில் கால்நடைகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
உடல் வெப்பத்தால் ஏற்படும் அதிர்ச்சி
வெய்யில் காலத்தில் அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் மற்றும் போதுமான காற்றோட்டம் இல்லாத நிலையில் கால்நடைகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் வெப்ப அதிர்ச்சி ஏற்படும். எனவே, கால்நடைகளை நல்ல காற்றோட்டமான இடத்தில் நிழலில் கட்டி வைக்க வேண்டும். கோடையில் காலை அல்லது மாலையில் மேய்ச்சலுக்கும் பிற வேலைகளுக்கும் அனுப்பலாம். வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மீது ஈரத்துணி மற்றும் பனிக் கட்டிகளை வைத்து உடல் வெப்ப நிலையைக் குறைக்கலாம்.
வயிற்று உப்புசம்
தீவனத்தைத் திடீரென மாற்றுவதால் அல்லது பயறுவகைத் தீவனத்தை அதிகமாக உண்பதால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். இதற்கு, 250 மில்லி கடலெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யை வாய்வழியே ஊற்ற வேண்டும். எண்ணெய்யுடன் கனிந்த வாழய்ப்பழம் இரண்டைச் சேர்த்துப் பிசைந்து ஊட்டலாம். மருந்தை, புரை ஏற்படாமல் கவனமாக ஊற்ற வேண்டும்.
வயிற்று உப்புசம் அதிகமானால் கால்நடைகள் மூச்சுவிடச் சிரமப்படும். எனவே, உடனே மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். மேலும், உள்வயிறு சுழன்று கொள்தல், புளித்த உணவை அதிகமாக உண்ணுதல் மற்றும் உணவுக்குப் பின் நீரை நிறையக் குடிப்பதாலும் வயிற்று உப்புசம் ஏற்படலாம்..
அமில நச்சு
மரவள்ளி இலை, தோல், கிழங்குப்பட்டை, இளம் சோளப்பயிர் ஆகியவற்றில் இந்நச்சு உள்ளது. எனவே, இவற்றை அதிகமாக உண்ணும் கால்நடைகள் இந்நச்சுவின் பாதிப்புக்கு உள்ளாகி ஒருமணி நேரத்தில் இறக்க நேரிடும். எனவே, இத்தகையை சூழ்நிலையில் கால்நடை மருத்துவர் மூலம் உடனே சிகிச்சையளிக்க வேண்டும். இதைத் தடுக்க, மேலே சொல்லியுள்ள தீவனங்களை வெய்யிலில் நன்கு உலர்த்திக் கொடுக்க வேண்டும்.
மீந்துபோன அரிசிச்சோறு, அழுகிய வாழைப்பழம், தானியங்களை அதிகமாக உண்டால் வயிறு உப்புசம் ஏற்படலாம். இதனால் கால்நடைகள் மூச்சுவிடச் சிரமப்படும். இதற்கு 100 கிராம் சமையல் சோடாவை 500 மி.லி. நீரில் கரைத்து 2-3 முறை கொடுக்க வேண்டும். மேலும், உடனே கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும். தேவைப்பட்டால், வயிற்றுப்போக்கு மருந்தைக் கொடுக்க வேண்டும்.
யூரியா நச்சு
யூரியா கலந்துள்ள தொட்டி நீரை அல்லது யூரியாவை இட்ட வயல் நீரை, மாடுகள் குடித்தால் இந்நச்சு ஏற்படலாம். இதன் தாக்கம் இருந்தால், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரை வடிதல், மூச்சுவிடச் சிரமப்படுதல், வலிப்பு ஏற்படுதல் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். இதற்கு முதலுதவியாக, கறவை மாடுகள் மற்றும் எருதுகளுக்கு 2-4 லிட்டர் வினிகரைப் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆடுகளுக்கு அரை லிட்டர் கொடுக்கலாம்.
நச்சுத்தன்மை
கால்நடைகள் நச்சுத்தன்மை மிகுந்த செடிகளை அல்லது பூச்சி மருந்துகளை எதிர்பாரமல் உண்பது, பூச்சிக்கொல்லி மருந்துப் புட்டிகளை நக்குவது, பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட பயிரைத் தின்பது போன்றவற்றால் உடம்பில் நச்சுத்தன்மை ஏற்படும். அச்சமயம் வயிறு உப்புசம், வாயிலிருந்து எச்சில் மற்றும் நுரை வடிதல், மூச்சுவிடச் சிரமப்படுதல், வலிப்பு, நினைவிழப்பு ஏற்பட்டுக் கால்நடைகள் இறக்க நேரிடும்.
இந்நிலையில், கால்நடைகளை முதலில் நல்ல காற்றோட்டமான இடத்தில் நிறுத்த வேண்டும். வயிற்றில் இருந்து நஞ்சை வெளியேற்ற, சோப்பு அல்லது உப்புக் கரைசலை வாய்வழியாகக் கொடுக்கலாம். அடுப்புக்கரியைப் பொடியாக்கி நீரில் கலந்தும் வாயில் ஊற்றலாம்.
வெறிநாய்க்கடி
வெப்ப இரத்த விலங்குகள் அனைத்துக்கும் இந்நோய் வரும். இந்நோயுள்ள விலங்கின் உமிழ்நீரில் கருமி வெளியேறும். இத்தகைய விலங்கு கடித்தால் அல்லது இன்னொரு விலங்கின் உடம்பிலுள்ள புண் அல்லது காயத்தை நக்கினால், இக்கிருமி அந்த விலங்கின் உடம்புக்குள் புகுந்து, அந்தத் தசைப் பகுதியிலேயே பெருகி, நரம்பு வழியாகத் தண்டுவடம் மற்றும் மூளையை அடைந்து, 10 நாள் முதல் 7 மாதத்தில் அந்த விலங்கை இறக்கச் செய்து விடும்.
வெறிநோயுள்ள விலங்கு, கண்டவரை எல்லாம் கடிக்க வரும். கண்ணில் பட்டதையெல்லாம் தின்ன முற்படும். கீழ்த்தாடை தொங்கும். உமிழ்நீர் நூலாய் வழியும். சில நாட்களில் உறுப்புகள் செயலிழந்து அமைதியாகி விடும். இத்தகைய விலங்கைத் தனியாக அடைத்து வைக்க வேண்டும். கையுறை அணியாமல் அதைத் தொடக்கூடாது. கடிபட்ட இடத்தைச் சுத்தமான நீர் மற்றும் சோப்பால் கழுவி விட்டு, உடனே மருத்துவரை அணுக வேண்டும். வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் போடப்படும்.
பாம்புக்கடி
பாம்புக்கடி என்றால் இரத்தப் போக்கைக் கொஞ்ச நேரம் தடுக்காமல் விட்டு விடலாம். பிறகு, காயத்தைச் சுத்தப்படுத்திக் கட்டுப்போட வேண்டும். நிற்க முடியாமல் கீழே விழுதல், எழ முடியாது போதல். வாந்தி, உமிழ்நீர் வழிதல், மூச்சுவிடச் சிரமப்படுதல், சிறுநீரில் இரத்தம் வருதல், காயத்திலிருந்து தொடர்ந்து இரத்தம் வடிதல் ஆகியன பாம்புக்கடியின் அறிகுறிகளாகும். இந்நிலையில், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
தொண்டை அடைப்பு
மாடு அல்லது ஆட்டின் தொண்டையில் ஏதாவது அடைத்து விட்டால் கையை அல்லது விரலை விட்டு எடுத்து விடலாம். அவசியப்பட்டால் கைக்குட்டையால் நாக்கைக் கிழே அழுத்திக் கொண்டு இடுக்கி மூலம் அடைப்பை எடுத்து விடலாம். உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் வயிற்று உப்புசம் ஏற்படலாம். கவனிக்கா விட்டால் மாடுகள் 4-5 மணி நேரத்தில் இறந்து விடும்.
கருப்பை வெளித்தள்ளுதல்
சில மாடுகளுக்குச் சினைப் பருவத்தின் கடைசி மாதத்தில் அல்லது ஈன்ற பின், கருப்பை வெளியே வரும். இதைத் தடுக்க, ஒரே நேரத்தில் தீவனம் அல்லது நீரை அதிகமாகக் கொடுக்கக் கூடாது. மாடுகள் படுக்கும் போது பின்புறம் சற்று உயர்ந்தும், முன்புறம் சற்றுப் பள்ளமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கருப்பை வெளியே தள்ளப்பட்டால், மண் மற்றும் தூசு படாமல் இருக்கவும், உலர்ந்து விடாமல் இருக்கவும், சுத்தமான ஈரத்துணியை அதன் மீது போர்த்தலாம். பிறகு, உடனே மருத்துவரை அணுக வேண்டும். முதலுதவியுடன் விட்டு விட்டால், கால்நடைகள் இறக்க நேரிடும். எனவே, கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிப்பது அவசியம்.
மரு.கோ.கலைச்செல்வி.
மரு.மலர்மதி, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., சென்னை-600051.