கேழ்வரகு சாகுபடி நுட்பங்கள்!

கேழ்வரகு 2934263357 3e13dc7af7 o

கட்டுரை வெளியான இதழ்: மே 2018

கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு முதலிய, உருவில் சிறிய தானிய வகைகள் சிறுதானியங்கள் எனப்படுகின்றன. இவை உருவில் தான் சிறியனவே தவிர, வலிமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் பெரியவை. பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளைச் சிறுதானியங்கள் மிகுதியாக அளிக்கின்றன. மேலும், இன்றைய பருவநிலை மாற்றங்களான, குறைவான மழைப்பொழிவு, கூடுதலான வெப்பநிலை, குன்றிய மண்வளம் மற்றும் தேவைக்கு அதிகமான உரப்பயன்பாடு போன்றவற்றால், நாம் சாகுபடியில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. மேலும், வேளாண் இடுபொருள்களின் விலையும் கூடிக்கொண்டே இருப்பதால், குறைந்த செலவில், நிறைவான இலாபத்தைத் தருவது சிறுதானிய சாகுபடி மட்டும்தான்.

ஏனெனில், தற்போதைய காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, மாறிவரும் உணவுப் பழக்க வழக்கங்களில் கோடைக்கு ஏற்ற இதமான முக்கிய உணவுப் பொருள்களாகச் சிறுதானியங்கள் விளங்குகின்றன. எடுத்துக்காட்டாகக் கேழ்வரகுக் கூழானது, அடித்தட்டு மக்களின் உணவு என்றிருந்த நிலைமாறி, பெரு நகரங்களில் அதிகளவில் பரவிவரும் உணவாக மாறி விட்டது. கேழ்வரகுக் களி, கூழ், கேழ்வரகு அடை ஆகியன, அனைவரும் காலை, மதியம் மற்றும் மாலைச் சிற்றுண்டியாக விரும்பி உண்ணும் உணவுகளாக மாறி வருகின்றன.

இதற்கு இன்னுமொரு ஒரு காரணம், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடி வருவதாகும். மேலும், கேழ்வரகை நமது உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் எலும்புகள் வலுப்படும். ஏனெனில், இதில் கால்சியம் மிகுதியாக உள்ளது. அதாவது,  344 கி/100கி என்னுமளவில் உள்ளது. எனவே தான், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பெரிதும் பரிந்துரைக்கப் படுகிறது. தற்போதுள்ள பணிச்சுமையில், பேருந்தில் நீண்ட நேரம் தினமும் பயணிப்பவர்கள், இந்தக் கேழ்வரகை உணவாகப் பயன்படுத்தினால், முதுகுவலியும் குறைந்து எலும்புகள் நன்கு வலுவடையும். எனவே, தற்போது சிறுதானியங்களில் கூடுதலாகப் பயிரிடப்படும் முதன்மைப் பயிரான கேழ்வரகு சாகுபடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

இறவை சாகுபடி

நிலத் தயாரிப்பு: கோடை மழையைப் பயன்படுத்தி உளிக்கலப்பை அல்லது சட்டிக் கலப்பையால் நிலத்தை ஆழமாக உழ வேண்டும். பின்னர், கட்டிகள் இல்லாமல் 2, 3 முறை உழவு செய்து, விதைப்புக்கு ஏற்ப நிலத்தைத் தயாரிக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன்பு எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுவுரத்தைச் சீராக இடவேண்டும். புழுதி உழவு முடிந்ததும் நிலத்தை நன்கு சமன்படுத்தி அகலப்பாத்தி அல்லது பகுதிப் பாத்திகளை அமைக்க வேண்டும்.

பட்டம் மற்றும் இரகம்: மார்கழிப் பட்டம் அதாவது, டிசம்பர் ஜனவரியிலும், சித்திரைப் பட்டமான ஏப்ரல் மே-யிலும் கோ(ரா) 14, கோ 15, கே 5, கே 7, பையூர் 1, டி.ஆர்.ஒய் 1 ஆகிய இரகங்களைப் பயிரிடலாம்.

விதையளவு: ஒரு எக்டர் நிலத்தில் வரிசை விதைப்புக்கு 10 கிலோ விதை தேவைப்படும். சாதாரண விதைப்புக்கு 12.5 கிலோ விதை தேவைப்படும். பயிர் இடைவெளி: வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளி என்னுமளவில், சதுர மீட்டருக்கு 33 பயிர்கள் இருக்க வேண்டும். 

விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ், 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னுமளவிலான கலவையில் விதைகளை நன்கு கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். நுண்ணுயிர் விதை நேர்த்திக்கு, எக்டருக்குத் தேவையான விதைகளுடன், அசோஸ்பைரில்லம் 600 கிராம், பாஸ்போபாக்டீரியா 600 கிராம் என்னுமளவில் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றங்கால் தயாரிப்பு: ஒரு எக்டர் நிலத்தில் நடுவதற்கான நாற்றுகளைப் பெற, 12.5 சென்ட் நிலத்தில், அதாவது, 500 ச.மீ. பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். நன்கு சமன்படுத்திய நிலத்தில் 3மீ.க்கு 1.5 மீ. அளவில் மேட்டுபாத்திகளை அமைக்க வேண்டும். பிறகு, ஒரு எக்டருக்குத் தேவையான  5 கிலோ விதைகளை 1 செ.மீ. ஆழத்தில் விரல்களைக் கொண்டு கிழிக்கப்பட்ட கோடுகளில் சீராக விதைக்க வேண்டும். விதைத்ததும் 500 கிலோ மட்கிய தொழுரத்தால் நன்றாக மூடி, பூவாளியால் லேசாக நீரைத் தெளிக்க வேண்டும். அடுத்து, மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப நீரைத் தெளிக்க வேண்டும்.

நடவு வயல் தயாரிப்பும் நடவும்: நடவு வயலை 10 முதல் 20 மீட்டர் இடைவெளியில் பாத்திகளாகப் பிரித்து, பாசனத்துக்கான குறுக்கு வாய்க்கால்களை அமைக்க வேண்டும். 17 முதல் 20 நாட்கள் வயதுள்ள நாற்றுகளைப் பிடுங்கி ஒரு குத்துக்கு இரண்டு மூன்று நாற்றுகள் வீதம் 30க்கு 10செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.

உரமிடுதல்: பொதுவாக மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், ஒரு எக்டருக்குப் பரிந்துரைக்கப்படும் 60:30:30 கிலோ என்னுளவில் தழை, மணி, சாம்பல் சத்துகளை இடவேண்டும். இந்தச் சத்துகளில் தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும் மீதியை மேலுரமாகவும் இடவேண்டும். மணி மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும்.

நீர் நிர்வாகம்: முறையான நீர் நிர்வாகத்தால் மட்டுமே இறவைப் பயிரில் சிறந்த மகசூலைப் பெற முடியும். நடவு நீர், உயிர் நீர் மற்றும் வளர் பருவம், பூக்கும் பருவம், பால் பிடிக்கும் பருவம், முதிர்ச்சிப் பருவம் ஆகியவற்றின் போது பாசனம் செய்தால், கேழ்வரகு சாகுபடியில் நல்ல விளைச்சலைப் பெறலாம்.

களை நிர்வாகம்: நடவு செய்த 15 மற்றும் 30 நாட்களில் கைக்களை எடுக்க வேண்டும். அல்லது களை எடுக்கும் கருவியைக் கொண்டு இரண்டு முறை களைகளை அகற்ற வேண்டும்.

அறுவடை: நன்கு முற்றிய கதிர்கள் காய்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். கேழ்வரகு ஒரே சமயத்தில் முதிர்ச்சியடைவதில்லை. அதனால், குறைந்தது இரு முறையாவது அறுவடை செய்ய வேண்டும். பின்பு கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்து, தானியத்தைத் தனியாகப் பிரித்தெடுத்துச் சுத்தம் செய்து, சணல் அல்லது துணிப்பைகளில் சேமித்து வைக்க வேண்டும்.

மானாவாரி சாகுபடி

கோடையுழவு: கோடை மழையைப் பயன்படுத்திச் சட்டிக் கலப்பையால் நிலத்தை  ஆழமாக உழ வேண்டும். கோடைழவால் மண்ணரிப்புத் தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும், கோடை மழையில் முளைக்கும் களைகளும், பூச்சி மற்றும் நோய்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நிலத் தயாரிப்பு: நிலத்தை உளிகலப்பை அல்லது சட்டிக்கலப்பையாப் ஆழமாக உழ வேண்டும். பிறகு, புழுதி புரள இரண்டு மூன்று முறை  உழுது நிலத்தை விதைப்புக்குத் தயாரிக்க வேண்டும். கடைசி உழவுக்கு முன், எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுரத்தைச் சீராக இடவேண்டும்.

பட்டம் மற்றும் இரகம்: ஆடிப் பட்டமான ஜூலை ஆகஸ்ட்டில், கோ(ரா) 14, கோ 15, பையூர் 2 ஆகிய இரகங்களையும், புரட்டாசிப் பட்டமான செப்டம்பர் அக்டோபரில், கோ(ரா) 14, கோ 15, பையூர் 1 ஆகிய இரகங்களையும் விதைக்கலாம்.

விதையளவு: ஒரு எக்டரில் வரிசையாக விதைப்பதற்கு 10 கிலோ விதைகள் தேவைப்படும். பாரம்பரியமான சாதா விதைப்புக்கு 12.5 கிலோ விதைகள் தேவைப்படும். பயிர் இடைவெளி: வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்குப் பயிர் 10 செ.மீ. என்னுமளவில் இருக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 33 பயிர்கள் இருக்க வேண்டும்.

விதை நேர்த்தி: விதை மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த, விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ், 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்னுமளவிலான கலவையில், விதைகளை நன்கு கலந்து 24 மணிநேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும். நுண்ணுயிர் விதை நேர்த்திக்கு, எக்டருக்குத் தேவையான விதைகளுடன், அசோஸ்பைரில்லம் 600 கிராம், பாஸ்போபாக்டீரியா 600 கிராம் என்னுமளவில் எடுத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைகளைக் கடினப்படுத்துதல்: குறைவாக மழை பெய்யும் பகுதிகளில் விதைப்புக்குப் பிறகு தேவையான ஈரம் இல்லாமல் இருந்தால், முளைப்புத்திறன் பாதிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விதைகளைக் கடினமாக்குதல் முறையைப் பின்பற்றினால் முளைப்புத்திறன் கூடுவதுடன், நாற்றுகள் வீரியமாக வளரும். விதைகளைக் கடினப்படுத்த, விதைப்புக்கு முன், விதைகளை நீரில் 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, நிழலில் நன்கு உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை பயிர்களுக்கு அதிகரிக்கிறது.

உர நிர்வாகம்: அடியுரமாக எக்டருக்கு 12.5 டன் மட்கிய தொழுரத்தைக் கடைசி உழவுக்கு முன் இடவேண்டும். அடுத்து, ஒரு எக்டருக்குப் பரிந்துரைக்கப்படும் தழை, மணி, சாம்பல் சத்தை 40:20:20 கிலோ என்னுமளவில் இடவேண்டும். அதாவது, தழைச்சத்தில் பாதியை அடியுரமாகவும், மீதியை மேலுரமாகவும் இடவேண்டும். மணி மற்றும் சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட்டுவிட வேண்டும்.

களை நிர்வாகம்: விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் இரண்டு முறை கையினால் களைகளை அகற்ற வேண்டும். வரிசை விதைப்பு என்றால், களைக்கருவி மூலம் இரண்டு முறை களைகளை அகற்ற வேண்டும்.

அறுவடை: நன்கு முற்றிய கதிர்கள் காய்ந்த பிறகு அறுவடை செய்ய வேண்டும். கேழ்வரகு ஒரே சமயத்தில் முதிர்ச்சியடையாது. எனவே, குறைந்தது இரண்டு முறையாவது அறுவடை செய்து, கதிர்களைக் களத்தில் காய வைத்து அடித்துத் தானியத்தைத் தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு, சுத்தம் செய்து சணல் அல்லது துணிப்பைகளில் சேமித்து வைக்க வேண்டும்.

இதுவரை கூறிய முறைகளில், உயர் விளைச்சல் இரகங்களைப் பயன்படுத்துவதாலும், சீரிய சாகுபடி முறையைக் கடைப்பிடிப்பதாலும், தமிழகத்தில் தோராயமாக எக்டருக்கு 2,950 கிலோ தானியமும், 5,030 கிலோ தட்டையும் மகசூலாகக் கிடைக்கின்றன.

சேமிப்பு: அறுவடை செய்த கேழ்வரகைத் தானியமாகப் பயன்படுத்த, அதன் ஈரப்பதம் 10% இருக்கும் வகையில் நன்கு காய வைத்துச் சாக்குப் பைகளில் சேமிக்கலாம். இதையே விதைக்காகச் சேமிக்க, 100 கிலோ விதைக்கு 1 கிலோ ஆக்டிவேட்டடு கயோலினைக் கலந்து சேமிக்க வேண்டும்.

மேலும் தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், சிறுதானிய மகத்துவ மையம், அத்தியந்தல் 606 603, திருவண்ணாமலை மாவட்டம், தொலைபேசி 04175-298001.


கேழ்வரகு PARASURAM

முனைவர் .பரசுராமன்,

முனைவர் கி.ஆனந்தி, முனைவர் கி.சிவகாமி, சிறுதானிய மகத்துவ மையம்,

அத்தியந்தல், திருவண்ணாமலை மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!