தொட்டம்பட்டி இரா.செல்வத்தின் அனுபவம்
கட்டுரை வெளியான இதழ்: மே 2021
பருவ நிலையில் மாற்றம், மழை பெய்வதில் மாற்றம், கூலி உயர்வு, இடுபொருள்கள் செலவு உயர்வு, வேலையாள் கிட்டாமை போன்ற பல்வேறு சிக்கல்களால், நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், கால்நடை வளர்ப்பு, கிராம மக்களின் வாழ்க்கை ஆதாரமாக மாறி வருகிறது.
ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் கோழிகள் வளர்ப்பில் கிராம மக்கள் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். நினைத்த நேரத்தில் ஆடுகளை விற்றுப் பணமாக்க முடியும் என்பதால், அவை நடமாடும் பணப்பெட்டி எனப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், தொட்டம்பட்டி பூ.சங்கர் தனது அனுபவத்தைக் கூறுகிறார்.
“நாங்க எங்க தாத்தா காலத்துல இருந்தே ஆடுகளை வளர்த்துட்டு வர்றோம். எங்களுக்கு மூணரை ஏக்கர் நெலமிருக்கு. இதுல ஆடுகளுக்கு வேண்டிய அகத்தி, சூபாபுல், சீமைப்புல் வச்சிருக்கோம். விவசாயத்தைக் காட்டிலும் ஆடு வளர்ப்புல தான் எங்களுக்கு ஈடுபாடு அதிகம். ஏன்னா, எங்க குடும்பச் செலவுக்கும், மற்ற செலவுகளுக்கும் பணம் கொடுக்குறது இந்த ஆடுகள் தான். அவசரமா பணம் தேவைப்படுதுன்னா ஒரு ஆட்டை வித்து உடனே காசாக்கிறலாம். அதனால ஆடுகள ரொம்ப கவனமா வளர்க்குறோம்.
இப்போ எங்ககிட்ட பத்து வெள்ளாடுகள், பத்து வெள்ளாட்டுக் குட்டிகள், ஆறு செம்மறி ஆடுகள் இருக்கு. இந்த ஆடுகள் மழையால, வெய்யிலால பாதிக்காம இருக்க ஏதுவா நல்ல கொட்டம் போட்டுருக்கோம். கொட்டம் சுத்தமா இருந்தா ஆடுகளை நோய்நொடிகள் அண்டாம இருக்கும். அதனால காலையில எழுந்ததும் முதல் வேலையா கொட்டத்தைச் சுத்தம் செய்வோம்.
இந்த வேலையை முடிச்சிட்டு, ஆடுகளுக்கு முதல் தீனியா, அகத்தி அல்லது சூபாபுல் அல்லது கோ.4 சீமைப்புல்லோட குடிநீரையும் குடுப்போம். இதுல ஆடுகளுக்கு வயிறு நெறஞ்சிரும். அடுத்து, பகல் பன்னிரெண்டு மணிக்கு, கடலைப்பொட்டு, கோதுமைத் தவிடு, அரிசித்தவிடு, கடலைப் புண்ணாக்குக் கலந்த தண்ணியை வைப்போம். இதைக் குடிச்ச பிறகு சில ஆடுகள் அப்பிடியே உலாத்திட்டுத் திரியும். சில ஆடுகள் படுத்துரும்.
மறுபடியும் சாயங்காலம் நாலு மணிக்கு மேல, காலையில எதைக் குடுக்கலியோ அதைக் குடுப்போம். இப்போ காலையில அகத்தியும் சீமைப்புல்லும் குடுத்திருந்தா, சாயங்காலம் சூபாபுல்லையும் சீமைப்புல்லையும் கலந்து குடுப்போம். அப்புறம், தேவைப்படுற நேரத்துல ஆடுகள் தண்ணி குடிக்குறதுக்கு வசதியா தொட்டியில தண்ணியை ஊத்தி வச்சுருவோம். புளி, மிளகாய், பிரண்டையை நல்லா அரச்சு உருட்டி, அப்பப்போ குடுத்து வந்தா ஆடுகள் நல்லா வளரும்.
எங்க ஆடுகளுக்கு இதுவரைக்கும் நோய் எதுவும் வந்ததில்ல. பாப்பாரபட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்துல ஆடு வளர்ப்பைப் பத்திச் சொல்லிக் குடுத்ததும் எங்களுக்கு உதவியா இருக்கு. இப்பவும் அவங்களோட தொடர்புல இருக்கோம். இதுவும் நல்லபடியா ஆடுகளை வளர்க்கத் துணையா இருக்கு.
எங்ககிட்ட இருக்குறது எல்லாமே நாட்டு ஆடுக தான். ரெண்டு குட்டிகளை ஈனும். சில சமயத்துல மூணு குட்டிகளைப் போடும். தாய் ஆடுகள், குட்டிகளைப் போட்டு ரெண்டு மாசத்துல மறுபடியும் சினைக்கு வந்துரும். ஒரு குட்டி ஆறு மாசத்துல பத்துக்கிலோ அளவுக்கு வளந்துரும். இந்த நிலையில குறஞ்சது ஐயாயிரம் ரூபாய்க்கு விற்கலாம். அப்போ பத்தாடுகள் மூலம் கிடைக்கும் இருபது குட்டிகளை வித்தா ஒரு இலட்ச ரூபா வருமானம்.
இப்படி ஆறு மாசத்துக்கு ஒருமுறை வருமானம் வந்துக்கிட்டே இருக்கும். இதுல மூணுல ஒரு பங்கு செலவானாலும் ரெண்டு பங்கு மிச்சமாகும். அதனால, எங்களைப் பொறுத்த வரைக்கும் ஆடு வளர்ப்பு அருமையான தொழில் தான்’’ என்றார்.
பொம்மிடி முருகேசன்
சந்தேகமா? கேளுங்கள்!