கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019
பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் போதுமான அளவில் மழை பெய்யாமல் போவதால், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே, அரிதாகப் பெய்யும் மழைநீரைச் சேமிப்பது அவசியமாகும். உழவர்கள் மழைநீரைச் சேமிக்கப் பல்வேறு உத்திகள் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆழச்சால் அகலப் பாத்திகளை அமைத்தல், வரப்பை உயர்த்திக் கட்டுதல், நீர்நிலைகளைத் தூர்வாருதல், தடுப்பணைகளை அமைத்தல், மரங்களைச் சுற்றி வட்டப்பாத்திகளை அமைத்தல் போன்ற பல முறைகளில் மழைநீரைச் சேமிக்கலாம். மேலும், விவசாயிகள் தங்களின் நிலங்களில் பண்ணைக் குட்டைகளை அமைத்து நீரைச் சேமிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
பண்ணைக் குட்டையை அமைத்தால், வழிந்தோடும் நீரை இதில் சேமிக்கலாம். மண்ணரிப்பைத் தடுக்கலாம். மண்வளத்தைப் பாதுகாக்கலாம். பெருமழையால் ஏற்படும் வெள்ளப் பாதிப்பைக் குறைக்கலாம். இதன் அண்மைப் பகுதியில் குளிர்ந்த சூழலை உருவாக்கலாம். இதனால் புவி வெப்பத்தைக் குறைக்கலாம். நீரைச் சேமிக்கத் தவறினால் வருங்கால மக்கள் நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவர். எனவே, மழைநீர்ச் சேமிப்புக்குப் பண்ணைக் குட்டை அருமையான வழியாகும்.
பண்ணைக் குட்டையை அமைத்தல்
ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது ஒரு சென்ட் பரப்பில் பண்ணைக் குட்டையை அமைக்க வேண்டும். குட்டையின் ஆழம் 1.5-2.0 மீட்டர் இருக்கலாம். அதிகளவாக 10 சென்ட் பரப்பில் பண்ணைக் குட்டையை அமைக்கலாம். இதை வரப்போரத்தில் அல்லது நிலத்தின் மையத்தில், குறிப்பாக, நிலத்தின் தாழ்வான பகுதியில் அமைக்க வேண்டும். ஒரு சென்ட் பண்ணைக் குட்டையில் 60,000 லிட்டர் நீரைத் தேக்கி வைக்கலாம்.
15 மி.மீ. நீரை ஒரு சென்ட் பண்ணைக் குட்டையில் சேமிக்க முடியும். மண்ணின் தன்மையைப் பொறுத்து நீர்ப்பிடிப்புத் திறன், நீரைத் தக்க வைக்கும் தன்மை ஆகியன வேறுபடும். பெய்யும் இடத்திலேயே மழைநீரைப் பண்ணைக்குட்டை மூலம் சேமிப்பதால், மழைநீர் வீணாவது தடுக்கப்படும். ஒவ்வொரு பண்ணைக் குட்டையும் சிறிய நீர்த் தேக்கமாகச் செயல்படும்.
பண்ணைக் குட்டையை, கரும்பு, வாழை, முந்திரி, தென்னை மற்றும் பலாமரத் தோப்புகளில் அமைத்தால், நீண்ட நாள் பயிர்களில் வறட்சியால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கலாம். மேலும், எலுமிச்சை, சப்போட்டா, நாவல், கொய்யா போன்ற பழமரங்களைக் குட்டையின் கரைகளில் வளர்ப்பதன் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். கிணறு மற்றும் குழாய் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள் தங்களின் நிலத்தில் 5 சதப் பரப்பில் பண்ணைக் குட்டையை அமைக்க வேண்டும். இதன் பயனை ஓராண்டிலேயே அவர்கள் அடையலாம்.
எனவே, விவசாயிகள் அனைவரும், தங்களுக்கும், இந்தச் சமூகத்துக்கும் உதவும் வகையில், அவரவர் நிலத்தில் பண்ணைக் குட்டையை அமைத்துப் பயனடைய வேண்டும்.
முனைவர் மு.சுகந்தி,
முனைவர் அ.இளங்கோ, ச.த.செல்வன், கால்நடை அறிவியல்
முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம் – 603 203.