விவசாயிகள் நலன் காக்கும் இந்தச் சட்டம் எத்தனை பேருக்குத் தெரியும்?

விவசாயி A farmer and his cows scaled e1612181252310

மிழக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்று ஒப்பந்தப் பண்ணையத் திட்டம்.

ஒப்பந்த சாகுபடி முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த போதிலும் இதில் பங்கு பெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்கான சட்டம் எதுவும் இதுவரையில் இல்லை. அதற்கான சட்டத்தை இயற்றுவதற்கான அறிவிப்பு, 2018-19 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியானது.

அதன்படி, கடந்த 14.02.2019 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணையம் மற்றும் சேவைகள் சட்டம் இயற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அண்மையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

விலை வீழ்ச்சி

விவசாயிகளை வாழ வைப்பதும் வீழ வைப்பதும் விளைபொருள்களின் விலைதான். கடன் வாங்கிப் பயிரிட்டு விளைவித்த பொருள்களுக்குப் பல நேரங்களில் குறைந்த விலையே கிடைக்கிறது. இதனால், விவசாயிகள் வேதனையில் சிக்கித் தவிக்கிறார்கள்.

நெல், கரும்பு போன்ற பொருள்களின் கொள்முதல் விலையை அரசு நிர்ணயிக்கிறது. மற்ற பொருள்களின் விலையைத் தரகர்கள் அவ்வப்போது முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் தான், ஒப்பந்த சாகுபடிச் சட்டம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஒப்பந்தப் பண்ணையச் சட்டம் 2019

தேசியளவில் தமிழ்நாடு அரசு தான் முதன் முதலில் தனிச்சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது என்பது சிறப்பாகும். இந்தச் சட்டத்தின் கீழ் இயங்க விரும்பும் வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், அந்தந்தப் பகுதியைச் சார்ந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், இதற்கான ஒப்பந்தத்தை, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் போன்ற, விளைபொருள் உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து, அந்த அலுவலர் முன்னிலையில் பதிவு செய்து கொள்ளவும் வேண்டும்.

இதைத் தொடர்ந்து, ஒப்பந்தம் செய்த நாளில் முடிவு செய்யப்பட்ட விலையிலேயே ஒப்பந்தப் பொருள்களைக் கொடுப்பதும் பெறுவதும் நடைபெற வேண்டும். விலை வீழ்ச்சி ஏற்பட்டாலும், விவசாயிகளுக்கு எவ்விதப் பொருள் இழப்போ பண இழப்போ ஏற்படாமல், ஒப்பந்த விலையிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

இதனால் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு நியாயமான விலை உறுதி செய்யப்படுகிறது. வணிகர்களும் தங்களுக்குத் தேவையான பொருள்களை, நல்ல தரத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருள்களை பெறவும் இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கும் வேளாண்மை சார்ந்த ஆலைகளுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும்.

விதைப்புக் காலத்துக்கு முன்பே பொருள்களின் விலையை நிர்ணயம் செய்வதால், அனைத்து உத்திகளையும் பின்பற்றி விளைச்சலைப் பெருக்கி, விவசாயிகள் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

விளைபொருள்களைக் கொள்முதல் செய்வோர் ஒப்பந்த விதிகளை மீறும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இடர்களைக் களைந்து, அவர்களின் பொருள்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகையைப் பெற்றுத் தருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இச்சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு அல்லது இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தால் தடை செய்யப்பட்ட விளை பொருள்களையும், ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான சட்ட விதிகளைத் தமிழக அரசு வகுத்து வருகிறது.

மாற வேண்டிய பார்வை

ஒப்பந்தப் பண்ணையத் திட்டத்தால் உழவர்களின் கடன் சுமை அதிகரிக்கும்; இத்திட்டம், இடுபொருள்களையும் தொழில் நுட்பங்களையும் உழவர்களின் தலையில் கட்டுவதற்கான ஏற்பாடு; ஒப்பந்தத்தைப் போட்ட பிறகு, அதிக உற்பத்தி என்னும் போர்வையில், கொல்லைப்புறம் வழியாகப் பிடுங்கிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது;

தொழிற்சாலைகள் தரும் இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால், உழவர்களின் நிலவளம் குறையும்; இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள், கட்டாய வேளாண்மைக்குத் தள்ளப்படுவர் என்பன போன்ற எதிர்மறையான கருத்துகள் இருந்தால், அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்ளலாம்.

ஏனெனில், இச்சட்டம் உழவர்களைப் பல்வேறு வகைகளில் பாதுகாக்கும் நோக்கங்களையே கொண்டுள்ளது. இடுபொருள்களை வழங்கும் நிறுவனங்கள், அவற்றை இயற்கை சார்ந்த பொருள்களாகக் கொடுத்து மண்வளத்தைக் காக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதற்குத்  தமிழக அரசு வழிவகை செய்தால், இச்சட்டத்தை உழவர்கள் போற்றி மகிழ்வர்.


விவசாயி V.KEERTHANA scaled e1612244828570

முனைவர் வ.கீர்த்தனா,

சா.மியூசி ரோஸ், இமயம் வேளாண்மை&தொழில்நுட்பக் கல்லூரி, 

துறையூர்-621206, திருச்சி மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!