My page - topic 1, topic 2, topic 3

மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உப்புக் கரிக்கும் கடல்நீரைக் குடித்து ஆவியாக்கி விண்ணில் ஏவி, மண்ணிலுள்ள உயிர்களை யெல்லாம் காக்க மழையென்னும் அமுதமாகப் பெய்யச் செய்யும் இயற்கை, இவ்வாண்டில் நமக்குச் சாதகமாக இருக்குமென்றே தெரிகிறது. தென்கிழக்குப் பருவமழையுடன் வெப்பச் சலனமும் சேர, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வடகிழக்குப் பருவமழைக் காலம். இதுவும் நமக்குக் கைகொடுக்கும் என்றே நம்பலாம்.

ஏற்கெனவே ஓரளவு பெய்து மண்ணெல்லாம் நனைந்துள்ள நிலையில், அடுத்துப் பெய்யும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடவே செய்யும். இந்த நீரைச் சரியான கட்டமைப்புகள் மூலம் தேக்கி வைத்தால் தான், 2015இல் உண்டான வெள்ளப் பெருக்கைப் போன்ற நிலையும், கடந்தாண்டு உண்டான கடும் வறட்சியைப் போன்ற நிலையும் ஏற்படாமல் இருக்கும்.

நீரின் அருமையை நாம் உணர்ந்திருந்தாலும், அதைப் பாதுகாத்து வைப்பதற்கான செயலாக்க நிலை இன்னும் நமக்குள் வலுப்பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நீர் சற்று அதிகமாகக் கிடைக்கும் காலத்தில், பழுதடைந்த குடிநீர்க் குழாய்கள் மூலம் நீர் தெருக்களில் வீணாக ஓடுவதே இதற்குச் சாட்சி.

மழைநீர் தான் நிலத்தடி நீராக, கிணற்று நீராக, ஏரி குளத்து நீராக, அணை நீராக நின்று மண்ணுயிர்களைக் காக்கிறது. இந்த நீரை வீணாக்கினோம் என்றால், நாம் இயற்கையின் நடவடிக்கையைத் துச்சமென நினைக்கிறோம் என்று பொருள். இயற்கை கொடுக்கும் போது பெற்றுப் பாதுகாத்து வைக்க வேண்டும். இல்லையெனில் அது நமக்குப் பாடம் கற்பிக்கும் என்பது நாம் அறியாததல்ல.

நீரிறங்க முடியா வகையில், தார்ச்சாலைகளாக, சிமெண்ட் தளங்களாக இந்த மண் ஆக்கப்பட்டு விட்ட நிலையில், வீடுகள் அனைத்திலும் மழைநீர்ச் சேமிப்புக் கட்டமைப்பை அமைக்க வேண்டியது அவசியமானது மட்டுமல்ல, கட்டாயமும் கூட. இந்த அமைப்பை நிலத்தடி நீராதார அமைப்பாகவும் அமைக்கலாம். தொட்டிகளில் சேமித்து வைத்து நேரடியாக மழைநீரைப் பயன்படுத்தும் வகையிலும் அமைக்கலாம்.

2001-2006 ஆம் ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, வீடுதோறும் மழைநீர்ச் சேமிப்பைக் கட்டாயமாக்கினார். இதனால், அந்தக் காலத்தில் சென்னையில் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீரின் அருமையை உணர்ந்த நம் முன்னோர், ஊரெல்லாம் ஊருணிகளை, கண்மாய்களை, ஏரிகளை, குளங்களை வெட்டி வைத்தனர். அவர்களைப் போல நம்மால் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியா விட்டாலும், இருப்பனவற்றை அழிக்காமலாவது இருத்தல் நல்லது. மழைநீர் தானே நிலத்தடி நீர்; இதை மறந்தால் வருமா குடித்திட நீர்?


ஆசிரியர்

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks