வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். கால்நடை வளர்ப்பு, குறிப்பாகக் கறவை மாடுகள் வளர்ப்பு, கிராம மக்களின் மிகப்பெரிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுக்கொரு முறை ஈன்று, அதிகமாகப் பாலைத் தரும் கறவை மாடுகளால் மக்களின் வாழ்க்கை வளமாக அமையும்.
ஆனால், ஆண்டுக்கொரு கன்று, காலம் தவறாமல் சினைப்பிடிப்பு என்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கறவை மாடுகள் வளர்ப்பில் சரியான உத்திகளைக் கையாளாமல் இருத்தல், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், சரியான முறையில், போதுமான அளவில் தீவனம் இடாமை போன்ற காரணங்களால் இத்தகைய சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
இந்நிலையில், சினைப் பருவத்துக்கு வந்தும், சினைப்படாத கறவை மாடுகளை, மூலிகை மருத்துவம் மூலம் சினைப்படுத்த முடியும். மிக எளிய மருத்துவ முறை மூலம், கறவை மாடுகளை வளர்ப்போர் பயன் பெற முடியும்.
இந்த மூலிகை மருத்துவத்தைச் செய்ய, வெள்ளை முள்ளங்கி 1, சோற்றுக் கற்றாழை மடல் 1, முருங்கைக்கீரை 4 கைப்பிடி, பிரண்டை 4 கைப்பிடி, கறிவேப்பிலை 4 கைப்பிடி, கொஞ்சம் வெல்லம், உப்பு, மஞ்சள் தூள் ஆகிய பொருள்கள் தேவைப்படும். இந்தப் பொருள்களை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
அதாவது, கறவை மாடு சினைப் பருவத்துக்கு வந்த நாள் அல்லது அதற்கு அடுத்த நாளிலிருந்து, மருத்துவத்தைத் தொடங்க வேண்டும். முதலில், தினமும் ஒரு முள்ளங்கி வீதம் எடுத்து, உப்பு, வெல்லத்துடன் சேர்த்து, ஐந்து நாட்களுக்கு மாட்டுக்குக் கொடுத்து உண்ண வைக்க வேண்டும். அடுத்து, தினமும் ஒரு சோற்றுக் கற்றாழை மடல் வீதம் எடுத்து, உப்பு, வெல்லத்தைச் சேர்த்து நான்கு நாட்களுக்கு மாட்டுக்குக் கொடுத்து உண்ண வைக்க வேண்டும்.
அடுத்து, தினமும் நான்கு கைப்பிடி முருங்கைக் கீரை வீதம் எடுத்து, உப்பு, வெல்லத்தைச் சேர்த்து, நான்கு நாட்களுக்கு மாட்டுக்குக் கொடுத்து உண்ண வைக்க வேண்டும். அடுத்து, தினமும் நான்கு கைப்பிடி பிரண்டை வீதம் எடுத்து, உப்பு, வெல்லத்தைச் சேர்த்து நான்கு நாட்களுக்கு மாட்டுக்குக் கொடுத்து உண்ண வைக்க வேண்டும்.
அடுத்து, தினமும் நான்கு கைப்பிடி கறிவேப்பிலை வீதம் எடுத்து, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் வெல்லத்தைச் சேர்த்து மாட்டுக்குக் கொடுத்து உண்ண வைக்க வேண்டும். இந்த மருத்துவத்தைச் செய்து முடிக்கவும், அடுத்த சினைப் பருவம் வரவும் சரியாக இருக்கும். அப்போது கருவூட்டல் செய்தால் அந்த மாடு சினைப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஆசிரியர்
சந்தேகமா? கேளுங்கள்!