கட்டுரை வெளியான இதழ்: மே 2019
பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் வாத்து வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திருச்சி, நெல்லை, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல் மாவட்ட, நெல் சாகுபடிப் பகுதிகளில் வாத்து வளர்ப்பு நன்றாக உள்ளது. நமது நாட்டின் மொத்தப் பறவைகளில் 10%, முட்டை உற்பத்தியில் 6-7% வாத்துகளின் பங்காகும். கோழிகளுக்கு அடுத்து, வாத்துகள் தான் அதிக முட்டைகளைத் தருகின்றன. அதிக முட்டையிடும் காக்கிகேம்பல், அதிக இறைச்சியுள்ள வெள்ளை பெகீன் போன்ற வாத்துகள் வந்தபின் தான் வாத்து வளர்ப்பு இலாபந் தருவதாக உள்ளது.
இனப்பெருக்க வாத்துப் பராமரிப்பு
6-8 வார ஆண், பெண் வாத்துகள் இனவிருத்திக்கு ஏற்றவை. நல்ல இனச்சேர்க்கைக்கு, ஆண் வாத்துகள் 4-5 வாரம் மூத்தவையாக இருக்க வேண்டும். ஆண் பெண் விகிதம் 1:6 அல்லது 1:8 என இருக்கலாம். அடைக்காலம் 28 நாட்களாகும். 6-8 வார வாத்துகளின் முட்டைகளையே அடையில் வைக்க வேண்டும். இனச்சேர்க்கை முடிந்து 10 நாட்களுக்குப் பின்பு பெண் வாத்து முட்டையிடத் தொடங்கும். அழுக்கு முட்டைகளை கிருமிநாசினி கலந்த 27 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் கழுவி உலர வைக்க வேண்டும். இல்லையெனில் முட்டை அழுகிவிடும். 14-16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 80% ஈரப்பதமுள்ள இடத்தில் முட்டைகளைச் சேமிக்க வேண்டும்.
நோய்கள்
வாத்து பிளேக், பூசண நச்சு நோய், பாஸ்சுரெல்லா நோய், வாத்துகளைத் தாகும். பூசணமற்ற தீவனங்களைக் கொடுப்பதே இவற்றைத் தடுப்பதற்கான முக்கிய வழி.
வாத்துக்கொள்ளை நோய்-பிளேக்
இந்த வைரஸ் நோய் முதிர்ந்த வாத்துகளையே தாக்கும். இதனால் பாதிக்கப்படும் வாத்துகளில் இரத்த நாளங்கள் உடைந்து குடலிலும் இரைப்பையிலும் இரத்தம் பரவும். பாதிப்புக்குப் பிந்தைய சிகிச்சையால் பலன் கிடைக்காது. எனவே, வாத்து பிளேக் தடுப்பூசியை 8-12 வாரத்தில் போட வேண்டும். இந்த வைரஸால் வாத்துக் குஞ்சுகளில் கல்லீரல் ஒவ்வாமை ஏற்பட்டால் இறப்பு மிகும்.
வாத்துக் கழிச்சல்-காலரா
பாசுரெல்லா மல்டோசிடா என்னும் பாக்டீரியா, 4 வார வாத்துகளில் பரவும். இதனால், பசியின்மை, உடல் வெப்பம் கூடுதல், தாகம், வயிற்றுப்போக்கு, திடீர் இறப்பு போன்றவை நிகழும். சல்பா மருந்துகள் மற்றும் தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தலாம். 4 மற்றும் 18 வார வாத்துகளுக்கு, காலரா தடுப்பூசியைப் போட வேண்டும்.
பூசண நச்சு நோய்
பூசணமுள்ள மக்காச்சோளம், பளிச்சென அரைக்கப்பட்ட அரிசியை உணவாக அளிப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. அதிக ஈரப்பதமும், உணவுகளைச் சரிவர உலர்த்தாமல் விடுவதும் இந்நோய்க்குக் காரணமாகும். பி, பி2, ஜி, ஜி2 ஆகிய நான்கு அப்ளாடாக்ஸினில் பி வகை அதிக நச்சுத்தன்மை மிக்கது. இதனால் கல்லீரலில் புண்கள் உண்டாக, வாத்துகள் இறந்து போகும். சோம்பல், கல்லீரல் ஒவ்வாமை போன்றவற்றாலும் வாத்துகள் இறக்கும். இப்பூசண நோய்க்கு மருந்து எதுவுமில்லை. தீவனத்தை நன்கு உலர்த்தி, பூசணமின்றிக் கொடுப்பதே சிறந்த தீர்வாகும்.
ஒட்டுண்ணிகள்
தேங்கிய குட்டை, கலங்கிய ஓடைகளில் உலவும் வாத்துகளை, தட்டைப்புழு, உருளைப்புழு, நாடாப்புழு போன்றவை தாக்கும். இவை, வாத்துகளின் உடலிலுள்ள சத்துகள் மற்றும் இரத்தச் சிவப்பணுக்களை அழித்து விடுவதால் சோகை நோய் ஏற்படும். இவற்றைத் தடுக்க, குடற்புழு நீக்க மருந்தே சிறந்த வழி.
தெள்ளுப்பூச்சி, உண்ணி, சிற்றுண்ணி ஆகியன வாத்துகளைத் தாக்கும் புற ஒட்டுண்ணிகள். இவற்றின் தொல்லையால் முட்டை உற்பத்தி பாதிக்கும். பியூடாக்ஸ் மருந்தை நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
மரு.ம.ஜெயக்குமார்,
முனைவர் இரா.சரவணன். மரு.மலர்மதி, விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்-637002.
சந்தேகமா? கேளுங்கள்!