My page - topic 1, topic 2, topic 3

கறவை மாடுகளுக்குப் புரதச்சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020

னிதர்களைப் போன்றே கால்நடைகளுக்கும் மாவுச்சத்து, புரதச்சத்து,  கொழுப்பு, தாதுப்புகள், நீர்ச்சத்து ஆகிய ஆறும் மிகவும் தேவையாகும். இவற்றுள் புரதச்சத்து மிக முக்கியமானதாகும். உடல் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு, பால் உற்பத்தி, சினைப்பிடிப்பு, கரு வளர்ச்சி, நோயெதிர்ப்புத் திறன் ஆகியவற்றுக்கு புரதம் மிகவும் அவசியம்.

பசும்பாலில் 3-3.2% புரதம் உள்ளது. அதாவது, ஒரு லிட்டர் பாலில் 30-32 கிராம் புரதம் உள்ளது. இது எல்லா வகையான அமினோ அமிலங்களும் சரியான விகிதத்தில் அமையப் பெற்ற உயர்வகைப் புரதமாகும். முப்பது கிராம் பால் புரதம் உருவாக, 80-100 கிராம் புரதம் பசுக்களின் உணவில் அளிக்கப்பட வேண்டும். இத்துடன், கறவை மாட்டின் உடலைப் பராமரிக்க, தினமும் 300-600 கிராம் புரதத்தை உணவின் மூலம் வழங்க வேண்டும். 

ஆடு, மாடுகளின் வயிறானது நான்கு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.  இவற்றில், முதல், பெரிய, முக்கிய அறையின் பெயர் ரூமன். அதாவது, அசையூண் என்பதாகும். உணவில் அளிக்கப்படும் ஒரு பகுதிப் புரதம், அசையூணிலுள்ள பாக்டீரியாக்களால் சிதைந்து அம்மோனியாவாக மாறும். பாக்டீரியாக்கள் இதிலுள்ள நைட்ரஜனை உட்கொண்டு பாக்டீரிய புரதமாக மாற்றிப் பல்கிப் பெருகும். அதாவது, உணவுப் புரதம் பாக்டீரிய புரதமாக மாற்றப்படும். இந்த பாக்டீரிய புரதம் அனைத்தும் சிறுகுடலில் செரித்துக் கிரகிக்கப்படும். 

இந்தப் புரதமானது ரூமன் சிதைவுறும் புரதமாகும். மற்றொரு பகுதிப் புரதம், அசையூணில் எவ்வித மாற்றமும் அடையாமல், சிறுகுடலை அடைந்து செரித்துக் கிரகிக்கப்படும். இப்புரதம் பைபாஸ் புரதம் எனப்படும். இவ்விரு புரதங்களையும், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்புகளுடன் கலந்து, கறவை மாடுகளின் உடல் நிலை மற்றும் பால் உற்பத்திக்கு ஏற்ப, சரியான அளவிலும், விகிதத்திலும் தினமும் அளிக்க வேண்டும்.

கறவை மாடுகளுக்குப் புரதக் குறைபாடு ஏற்பட்டால், உடல் வளர்ச்சி, கருப்பை வளர்ச்சி, நோயெதிர்ப்புச் சக்தி ஆகியன குறையும். குறைந்த எடையில் கன்று பிறக்கும். இதுவே தேவைக்கு அதிகமாக இருந்தால், அது வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி, யூரியாவாக மாறிச் சிறுநீரில் வெளியேறி விடும். இதனால், பணம் வீணாவதுடன், கறவை மாடுகளின் கருத்தரிப்புத் திறனும் பாதிக்கப்படும்.

தேங்காய்ப் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, பருத்திக்கொட்டைப் புண்ணாக்குப் போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக இருப்பினும், அவற்றில் மாவுச்சத்து, வைட்டமின்கள், தாதுப்புகள் போன்றவை மிகவும் குறைந்தும் சரிவிகிதமற்றும் இருக்கும். எனவே, அவற்றால் தற்காலிகமாகப் பால் உற்பத்தி அதிகரித்தாலும், தொடர்ந்து கொடுக்கும் போது, கால்நடைகளின் கருவுறும் திறன் குறைந்து, சினைப்பிடிப்புத் தாமதமாகி, ஈற்றுக்கால இடைவெளி அதிகமாகும். 

தரமான, சமச்சீரான கறவைமாட்டுத் தீவனத்தில், ரூமன் சிதைவுறும் மற்றும் ரூமன் சிதைவுறாப் புரதங்கள், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் அனைத்துத் தாதுப்புகளும் சரியான அளவிலும், விகிதத்திலும் கலந்திருக்கும்.  அதைக் கறவை மாடுகளுக்கு அளித்தால், அதிகப் பால் உற்பத்தி, நிறைவான உடல் பராமரிப்பு, சிறப்பான சினைப்பிடிப்பு, சரியான இடைவெளியில் ஈனும் தன்மை போன்றவற்றைத் தவறாமல் பெற்று இலாபமடையலாம்.


கிருஷி நியூட்ரிஷன் கம்பெனி பிரைவேட் லிமிடெட்,

தொழில் நுட்பம் மற்றும் திட்ட அமலாக்கத்துறை,

பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்.

Share:

  சந்தேகமா? கேளுங்கள்!  

 

இன்னும் படியுங்கள்!

Enable Notifications OK No thanks