கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020
இயற்கை மற்றும் செயற்கை முறையில் நாம் உற்பத்தி செய்யும் பல கழிவுகள் இறுதியாக மண்ணையே சேர்கின்றன. மண்புழுக்கள் மண்ணையும் அதனுடன் சேரும் கரிமம் நிறைந்த கழிவுகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை அவற்றின் உடலில் சென்று பல வேதி மாறுதல்களுக்கு உள்ளாகி, ஊட்டமேறிய எச்சமாக வெளியேறுகின்றன. இது பயிர்களுக்குச் சிறந்த உரமாக விளங்குகிறது.
மண்புழு உரத் தயாரிப்பில் தென்னை
ஒரு தென்னையில் இருந்து ஆண்டுக்கு 10-12 மட்டைகள் விழுகின்றன. ஒரு மட்டையின் எடை 6 கிலோ என்று கொண்டால், ஒரு எக்டரிலுள்ள 175 மரங்களில் இருந்து 7-10 டன் மட்டைகள் கிடைக்கும். இவற்றில் இருந்து 90 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்துக் கிடைக்கும். மேலும், 20-30% அங்ககக் கரிமமும் மண்ணுக்குக் கிடைக்கும்.
ஒரு மரம் ஆண்டுக்கு 100 கிலோ உயிர்ப் பொருள்களைத் தருகிறது. ஒரு எக்டரில் இருந்து சுமார் 12 டன் ஓலை உள்ளிட்ட அங்ககப் பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றை மண்புழு உரமாக மாற்றினால் வளமான இயற்கை உரம் கிடைக்கும்.
தயாரிப்பு முறை
தென்னை மட்டைகளையும், 3-6 மாதமான பழைய ஓலைகளையும் மண்புழு உரமாக மாற்றலாம். மட்டைகளைத் துகள்களாக மாற்ற வேண்டும். இந்த ஓலைகளைச் சாப்பிட மண்புழுக்கள் தயங்கும் என்பதால், 1000 கிலோ ஓலைக்கு 100 கிலோ சாணம் வீதம் எடுத்து நீரில் கரைத்துத் தெளித்து 20 நாட்களுக்கு மூட்டம் போட்டு வைத்துப் பயன்படுத்த வேண்டும். ஒரு டன் ஓலைக்கு 1000 மண்புழுக்கள் வீதம் விட வேண்டும்.
உற்பத்தி இடம்
தேவைக்கு ஏற்ப தொட்டியைக் கட்டிக் கொள்ளலாம். நிலமாக இருந்தால், தரை கெட்டியாக இருக்க வேண்டும். தரை மென்மையாக இருந்தால், மண்புழுக்கள் மற்றும் மண்புழுப் படுக்கையில் தெளிக்கப்படும் நீரில் கரையும் சத்துகள் மண்ணுக்குள் போகும் வாய்ப்பு ஏற்படும். மழை, வெய்யிலில் பாதிக்காத வகையில் மண்புழுப் படுக்கைக்கு மேலே கூரை இருக்க வேண்டும்.
தென்னந் தோப்பில் நான்கு தென்னை மரங்களின் மத்தியில் தேவையான நீள, அகலத்தில், ஒரு மீட்டர் ஆழத்தில் குழியை எடுத்தும் மண்புழுப் படுக்கையை அமைக்கலாம். இதை வைக்கோலால் மூடி ஈரப்பதத்துக்காக இலேசாக நீரைத் தெளித்து வர வேண்டும்.
மண்புழு உரம்
இப்படிச் செய்தால் 45-60 நாட்களில் தென்னைக் கழிவுகள் மண்புழு உரமாக மாறிவிடும். பொலபொலப்பாக, இலேசாக, அடர் பழுப்பு நிறத்தில் குருணைகளாக இருக்கும் இந்த உரம், தேயிலையைப் போல எவ்வித வாடையும் இல்லாமல் இருக்கும். இது எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும்.
இதன் கரிம மற்றும் தழைச்சத்து விகிதம் 100:1 லிருந்து 20-24:1 ஆகக் குறைந்திருக்கும். உரத்தைச் சல்லடையில் சலிக்கும் போது கிடைக்கும் மட்காத கழிவுகளை மீண்டும் மண்புழுப் படுக்கையில் இடலாம். சேகரித்த உரத்தை நிழலும் காற்றோட்டமும் உள்ள இடத்தில் சேமிக்க வேண்டும்.
புழுக்களைப் பிரித்தல்
நன்கு உரமாக மாறிய படுக்கையில் மண்புழுக்கள் அதிகமாகப் பெருகியிருக்கும். இந்நிலையில், படுக்கையில் நீரைத் தெளிப்பதை நிறுத்த வேண்டும். படுக்கை உலர உலர, மண்புழுக்கள் படுக்கையின் கீழே சென்று விடும். அப்போது உரத்தைக் கையால் எடுக்க வேண்டும். பிறகு அடியிலுள்ள உரத்திலிருந்து மண்புழுக்களைக் கையால் அகற்ற வேண்டும். மண்புழு உரத்தை 3 மி.மீ. சல்லடையில் சலித்தால், மண்புழு முட்டைகள் மற்றும் சிறிய மண்புழுக்களைப் பிரிக்கலாம்.
கவர்தல் முறையில் புழுக்களை எளிதாகப் பிரிக்கலாம். அதாவது, படுக்கையில் ஆங்காங்கே சாணப்பந்துகளை இட்டு விட்டால் இவற்றை நோக்கி 24 மணி நேரத்தில் புழுக்கள் வந்துவிடும். உடனே இந்தப் பந்துகளை நீரிலிட்டுச் சாணம் கரைந்து, புழுக்கள் தனியாகப் பிரிந்து விடும்.
சத்துகள்
மண்புழு உரத்தில், அங்ககக் கரிமம் 9.5-17.98%, தழைச்சத்து 0.5-1.5%, மணிச்சத்து 0.1-0.3%, சாம்பல் சத்து 0.15-0.56%, சோடியம் 0.06-0.30%, கால்சியம் 22.67-47.60 மி.கி., மெக்னீசியம் 100 கிராம், தாமிரம் 2-9.5 பிபிஎம், இரும்பு 2-9.3 பிபிஎம், துத்தநாகம் 5.7-11.5%, கந்தகம் 128-548 பிபிஎம். இந்தச் சத்துகள் அனைத்தும் பயிர்கள் எளிதில் கிரகித்துக் கொள்ளும் வகையில் உள்ளன. மேலும், வைட்டமின் பி, சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் உள்ளன.
மண்புழு நீர்
பிளாஸ்டிக் உருளையின் அடியில் ஒரு அடி உயரத்துக்கு ஜல்லிக் கற்களையும், அடுத்து ஒரு அடிக்குப் பெருமணலையும், அடுத்து இரண்டடி உயரத்துக்கு மட்கிய தொழுவுரத்தையும் இட வேண்டும். பிறகு இதில் ஒரு கிலோ மண்புழுக்களை விட்டு, நீரையும் சாணக்கரைசலையும் தெளிக்க வேண்டும். இப்படிச் செய்து இரண்டு நாட்களில் உருளையின் அடியிலுள்ள துளைவழியே நீர் வரத் தொடங்கும். இதை ஒரு பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.
பயன்கள்
இந்நீரில் பயிருக்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்து, சுண்ணாம்பு, மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலை சத்துகள், துத்தநாகம், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, போரான் போன்ற நுண்சத்துகளும் உள்ளன. இந்நீர், பூச்சி மற்றும் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பயிருக்குக் கொடுக்கிறது. இதை, ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி வீதம் கலந்து அனைத்துப் பயிர்களுக்கும் தெளிக்கலாம். நீண்டகாலப் பயிர்களுக்கு 20-30 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.
மண்புழுவின் எதிரிகள்
பூச்சி, பூசணம், பாக்டீரியா, நூற்புழு, தட்டைப்புழு, சிலந்தி, குளவியால் மண் புழுக்கள் பாதிக்கப்படுகின்றன. காகம், வானம்பாடி, மைனா, வாத்து, கொக்கு, பெருச்சாளி, எலி, மூஞ்சூறு, செந்நாய், மரவட்டை, மீன், தட்டைப்புழு, நண்டு, எறும்பு போன்றவை மண்புழுக்களை உணவாகக் கொள்கின்றன.
மண்புழுக்களைப் பெருக்குதல்
சிமெண்ட் தொட்டி அல்லது மரப்பெட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் மாட்டுச் சாணம் மற்றும் கழிவுகளைச் சம அளவில் கலக்க வேண்டும். பின்னர் 10 கிலோ கழிவுக்கு 50 புழுக்கள் வீதம் விட வேண்டும். காய்ந்த சருகு, வைக்கோல் அல்லது கோணிப்பையால் மூடி நிழலில் வைத்து, நீரைத் தெளித்து ஈரப்பதத்தைக் காத்து வர வேண்டும்.
உபரி நீர் வெளியேறத் துளைகள் இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் இரண்டு மாதங்களில் மண்புழுக்கள் 30 மடங்காகப் பெருகி விடும். ஜூன்-பிப்ரவரி காலத்தில் மண் புழுக்களின் இயக்கமும் இனப்பெருக்கமும் அதிகமாக இருக்கும்.
முனைவர் சி.சுதாலட்சுமி,
முனைவர் ஈ.இராஜேஸ்வரி, முனைவர் க.வெங்கடேசன்,
தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர், கோவை.