முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைப்பது. நமது உடல் நலத்துக்குத் தேவையான உயிர்ச் சத்துகள், தாதுச் சத்துகள் போன்றவை நிறைந்திருப்பது. எல்லோரும் வாங்கி உண்ணத் தக்க வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் பழமாக இருப்பதால், ஏழைகளின் பழம் எனப் போற்றப்படும் பழம் வாழைப்பழம்.
இதில், கற்பூரவள்ளி, கதலி, பூவன், செவ்வாழை, இரஸ்தாளி, பேயன், பச்சை, நேந்திரன், மொந்தன், எலச்சி, மலைவாழை எனப் பல வகைகள் உண்டு. இவை அனைத்தும் மருத்துவக் குணமிக்க பழங்கள் தான். இவற்றில் ஒன்றான நேந்திரன் வாழையைப் பயிர் செய்திருக்கிறார், கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், கே.ஜி.புதூரைச் சேர்ந்த ரெ.நடராஜன். இவரிடம் நேந்திரன் வாழை சாகுபடி அனுபவங்களைக் கூறுங்கள் எனக் கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது:
“நானு ஒரு ஏக்கர் நெலத்துல நேந்திரன் வாழையை சாகுபடி செஞ்சிருக்கேன். இப்போ ஆறு மாதப் பயிரா இருக்கு. ஆறடி இடைவெளியில கன்னுகள நட்டுருக்கேன். ஒரு ஐநூறு கன்னுக வரைக்கும் இருக்கு. எல்லாக் கன்னுகளும் நல்ல வளர்ச்சியில இருக்கு.
வாழை சாகுபடி நெலத்த முதல்ல மூனு நாலு தடவை நல்லா உழுவேன். அடியுரமா தொழுவுரத்த போதுமான அளவுக்குப் போடுவேன். ஏக்கருக்கு ஒரு அஞ்சு டன் ஒரமாவது போடுவேன். பிறகு, வரிசைக்கு வரிசை, பயிருக்குப் பயிர் ஆறடி இடைவெளி இருக்குற வகையில குழிகள எடுப்பேன். அடுத்து நாலஞ்சு நாள் கழிச்சு ஒவ்வொரு குழியிலயும் கையளவு வேப்பம் புண்ணாக்க போட்டு, கன்னுகள நட்டுப் பாசனம் செய்வேன். மத்தபடி செயற்கை உரம் எதையும் அடியுரமா போடுறதில்ல.
எங்க நெலம் இருமண் நெலம்ங்கிறதால நாலு நாளைக்கு ஒருமுறை பாசனம் குடுப்பேன். வாழைக்குத் தண்ணி அதிகமா தேவைப்படும். அதனால, நெலம் எப்பவும் ஈரப்பதமா இருக்குற மாதிரி பாசனம் செய்வேன். ஒரு அஞ்சு மாசம் கழிச்சு கலப்புரத்த வாங்கி மேலுரமா குடுப்பேன்.
இந்த மேலுரத்த குடுக்குறதுக்கு முன்னால, பக்கக் கன்னுகள கழிச்சு விட்டுருவேன். அதோட வாழை மரங்கள்ல இருக்குற காஞ்சு போன பட்டைகளையும் அறுத்து எடுத்துருவேன். இதுமட்டுமில்லாம, களைகள் இல்லாம தோட்டத்த சுத்தமா வச்சுக்கிருவேன். தோட்டம் சுத்தமா இருந்தா நோயோ, பூச்சியோ வாழையைத் தாக்குறதுக்கு வாய்ப்பில்ல. என்னோட அனுபவத்துல, நோயோ, பூச்சியோ எங்க வாழைய தாக்குனதில்ல.
வாழைக் குலைகள பன்னெண்டு மாசத்துல அறுவடை செய்யலாம். பொதுவா வாழைக்குலையோட எடை கால நிலையைப் பொறுத்தும், பராமரிப்பைப் பொறுத்தும் இருக்கும். ஒரு வாழைக்குலை பதினஞ்சுல இருந்து இருபது கிலோ வரைக்கும் இருக்கும். நல்ல சூழல் இருந்தா முப்பது கிலோ எடையுள்ள வாழைக்குலைக கூட கிடைக்கும். ஒரே நேரத்துல எல்லாக் குலைகளும் ஒரே சீரா வெளையாது. கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும்.
தோட்டத்துல ஒரு நூறு மரம் இருக்குன்னா முதல்ல ஒரு முப்பது மரம் அறுவடைக்கு வரும். அடுத்து ஒரு இருபது இருபத்தஞ்சு மரம் அறுவடைக்கு வரும். இப்பிடி, மூனு நாலு தடவை அறுவடை செய்ய வேண்டியிருக்கும். நல்லா வெளஞ்ச குலைகள மட்டும் அறுவடை செய்வோம்.
விற்பனைன்னு சொன்னா, வியாபாரிக தோட்டத்துக்கே வந்து எடை போட்டு வாங்கிட்டுப் போயிருவாங்க. விலையும் சூழ்நிலையைப் பொறுத்துத் தான் அமையும். கிலோ பத்துக்கும் போகும், பதினஞ்சுக்கும் போகும், முப்பதுக்கும் போகும், ஒரு சமயத்துல கிலோ எழுபது ரூபாய்க்குக் கூட போயிருக்கு. அந்த மாதிரி நேரத்துல விவசாயிகளுக்கு யோகம் தான்’’ என்றார்.
பசுமை
சந்தேகமா? கேளுங்கள்!