தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!

தென்னை Coconut drought scaled

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020

தென்னைக்குத் திறமையான நீர் நிர்வாகம் அவசியம். தென்னை வளரவும், சத்துகளைக் கிரகிக்கவும், நுண்ணுயிர்கள் இயங்கவும் நிலத்தில் ஈரப்பதம் தேவையாகும். ஒருமுறை வறட்சிக்கு இலக்காகும் தென்னை, அந்தப் பாதிப்பிலிருந்து மீள 3-4 ஆண்டுகள் ஆகும். மட்டைகள் சரிதல், பூக்கள், குரும்பைகள் உதிர்தல், மரம் வெளிர்தல், காய்கள் சிறுத்தல் மற்றும் கடும் வறட்சியில் மரமே காய்ந்து விடுதல் வறட்சிக்காலப் பாதிப்புகளாகும். முறையான நீர் நிர்வாகம் மூலம் வறட்சியிலிருந்து தென்னையைக் காக்கலாம்.

பாசன முறைகள்

பரவல் பாசனம்: நீர் அதிகமாக உள்ள இடங்களில், ஒருவாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை தோப்பெங்கும் பரவலாக நீர் விடப்படுகிறது. இதனால், அதிகளவில் நீர் வீணாகும். சத்துகள் நீரில் கரைந்து அடி மண்ணுக்குச் சென்று விடும். களைகள் நிறையத் தோன்றும். ஒரு மரத்தைத் தாக்கும் நோய்க்காரணிகள் எளிதாக அடுத்தடுத்த மரங்களுக்கும் பரவும்.

வட்டப்பாத்திப் பாசனம்: இம்முறையில் இரண்டு மீட்டர் ஆரமுள்ள பாத்திகளை உருவாக்கி நீர் விடப்படுகிறது. மண்ணின் ஈரப்பதம் மற்றும் பருவ நிலையைப் பொறுத்துப் பாசனக் காலத்தை நிர்ணயிக்கலாம்.

சொட்டுநீர்ப் பாசனம்: இம்முறையில் சொட்டுச் சொட்டாக வேர் மண்டலத்தில் நீர் விடப்படும். இதனால் குறைந்த நீரை அதிகப் பரப்பில் பாய்ச்சலாம். பரவல் பாசனத்தை விட இம்முறையில் 40% நீர் மிச்சமாகும். களைகள் கட்டுப்படும். ஆட்களின் தேவையும் குறையும். அனைத்து மரங்களுக்கும் சீராக நீர் கிடைக்கும். பாசன நீருடன் உரத்தையும் கலந்து விட்டு உரத்தின் பயனைக் கூட்டலாம். ஊடுபயிர் உள்ள தோப்புகளில் தெளிப்பான்கள் மூலம் பாசனம் செய்யலாம்.

வறட்சி மேலாண்மை

தென்னையைக் கடினப்படுத்துதல்: நீர் நிறைய இருந்தாலும், தேவைக்கு மேல் பாய்ச்சக் கூடாது. நீரைத் தேக்கி நிறுத்தினால் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்திறன் குறையும். சத்துகள் வீணாகிக் குரும்பைகள் உதிரும். பல்வேறு சத்துகளின் சுழற்சி தடைபடும். பெருமழைக்குப் பிறகு வேர் மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களால் தென்னைகளில் மஞ்சள் படர்வது கண்கூடு. நீரைத் தொடர்ந்து தேக்கி நிறுத்தினால், வேர்கள் ஆழமாகவும், பக்கவாட்டிலும் பரந்து செல்வது தடுக்கப்படும். இந்த நிலைகளுக்குப் பழகிய மரங்கள், வறட்சியில் அதிகமாகப் பாதிக்கப்படும். எனவே, காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாய்ச்சி, வறட்சியைத் தாங்கும் வகையில் மரங்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.

நிலப் போர்வை: இது, மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் எளிய உத்தி. கீழே விழும் காய்ந்த மட்டைகளின் அடிப்பகுதியை வெட்டிவிட்டு, ஓலைகளை மட்டும் பாத்திகளில் 2-3 அடுக்குகளாகப் பரப்ப வேண்டும். ஒரு பாத்திக்கு 15-20 ஓலைகள் தேவைப்படும். இவற்றை 2-3 துண்டுகளாக வெட்டியும் போடலாம். போதிய நீர் இருந்தால் இந்த ஓலைகள் மட்கி நல்ல உரமாகும். ஓலைகளை ஒதுக்கி விட்டு இரசாயன உரங்களை இடலாம். ஓலைகள் மட்கத் தொடங்கியதும் புதிய ஓலைகளைப் பரப்ப வேண்டும்.

உரிமட்டை மூடாக்கு: இரண்டு மீட்டர் ஆரமுள்ள வட்டப் பாத்திகளில் நார்ப்பகுதி கீழே இருக்கும் வகையில் உரிமட்டைகளை அடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 100-250 மட்டைகள் தேவைப்படும். காய்ந்த ஒரு மட்டை, தன் எடையில் 3-5 சத நீரைப் பிடித்து வைக்கும். மட்டைகளின் மேற்பகுதி, நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்தும். இம்மட்டைகள் 3-4 ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும்.

மற்றொரு முறையில் இரு தென்னை வரிசைக்கு இடையில், அரை மீட்டர் ஆழம், அரை மீட்டர் அகலம், மூன்று மீட்டர் நீளமுள்ள குழிகளை எடுத்து, உரிமட்டையின் நார்ப்பகுதி மேல் நோக்கி இருக்கும்படி அடுக்கி மண்ணால் மூடிவிட வேண்டும். இதனால், மண்ணில் புகும் நீரைச் சேமித்து ஈரப்பதத்தைக் காக்கலாம்.

தென்னைநார்க் கழிவை இடுதல்: ஒரு பாத்திக்கு 50 கிலோ வீதம் இந்தக் கழிவை இட்டு மண்ணால் மூடிவிடலாம். இதனால், மண்ணின் கட்டமைப்பு, பொலபொலப்புத் தன்மை, நீர்ப்பிடிப்புத் திறன் ஆகிய மண்ணின் பௌதிகப் பண்புகள் மேம்படும்.

வேளாண் கழிவுகள், பசுந்தாள் பயிரைப் பரப்புதல்: புல், களைகள், சீமையகத்தி போன்ற பசுந்தாள் பயிரை, பாத்திக்கு 25 கிலோ வீதம் பரப்பி ஈரப்பதத்தைக் காக்கலாம். இவை தென்னைக்கு உரமாகவும் அமையும்.

அதிகளவில் சாம்பல் சத்தை இடுதல்: வறட்சி, பூச்சி, நோய்த் தாக்குதல், பனி போன்றவற்றைத் தென்னை தாங்கி வளர, சாம்பல் சத்து அவசியம். எனவே, 50% சாம்பல் சத்தைக் கூடுதலாக இட்டு, தென்னையின் வறட்சியைத் தாங்கும் திறனைக் கூட்டலாம்.

வண்டல் மண்ணை இடுதல்: பாத்திக்கு 150 கிலோ வீதம் வண்டல் மண்ணை இடலாம். இதனால், மண்ணின் பௌதிகப் பண்புகள் மேம்பட்டு, நீர்ப்பிடிப்புத் திறன் கூடும். இதிலுள்ள சத்துகளால் நிலவளம் மேம்படும்.

பசுந்தாள் பயிர் சாகுபடி: நீருள்ள போது, சணப்பை, தக்கைப்பூண்டு, கொள்ளு, கொளுஞ்சி, கலப்பைக்கோனியம் போன்றவற்றைத் தோப்பில் விதைக்கலாம். இவை இயற்கை மூடாக்காகச் செயல்பட்டு, நிலம் வெப்பமாவதைத் தடுக்கும். களைகளும் கட்டுப்படும். இந்தப் பயிர்களை 40-45 நாட்களில் மடக்கி உழுது நிலவளம் மற்றும் நீர்ப்பிடிப்புத் திறனைக் கூட்டலாம்.

குழியெடுத்தல்: தென்னை வரிசைக்கு இடையில் 2 அடி ஆழம், 2 அடி அகலம், 10 அடி நீளத்தில் குழிகளை எடுத்து, தென்னை மட்டை, பாளையைப் போட்டு வைக்கலாம். இக்குழிகளில் 5% சாணக் கரைசலைத் தெளித்தால் இப்பொருள்கள் மட்கி உரமாகும். மழைநீரைச் சேமித்து வைத்துத் தென்னை மரங்களுக்குக் கொடுக்கும். ஆனால், இந்தக் குழிகளில் காண்டாமிருக வண்டுகள் முட்டையிடும் ஆபத்து உள்ளது. எனவே, இக்குழிகளில் மெட்டாரைசோபியம் அனிசோப்லியே பூசணத்தை இட வேண்டும்.

வரப்போர மரங்கள்: வரப்பைச் சுற்றிச் சவுக்கு, தேக்கு, அரளி, செம்பருத்தி போன்றவற்றை நட்டு மண்ணின் ஈரத்தைக் காக்கலாம். இவை உயிர்வேலியாக அமைவதுடன், நன்மை செய்யும் பூச்சிகளைப் பெருக்கி, தென்னையின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். மண்ணரிப்பைத் தடுத்து ஈரத்தைக் காக்கும்.

பண்ணைக் குட்டை அமைத்தல்: நிலத்தின் தாழ்வான பகுதியில் பண்ணைக் குட்டையை அமைத்து மழைநீரைச் சேமிக்கலாம். இந்நீர், கிணற்றைக் காய விடாமல் காப்பதுடன், வறட்சியில் கைகொடுக்கும்.

மேலும், மழைக்காலத்தில் மரங்களுக்கு இடையில் சரிவை ஏற்படுத்துதல், ஊடுழவு செய்தல், உயர வரப்புகளை அமைத்து நீரைத் தேக்குதல், வறட்சியைத் தாங்கும் இரகங்களைப் பயிரிடுதல் ஆகியவற்றின் மூலமும்; கடும் வறட்சியில் அடி மட்டைகளை வெட்டி விடுதல், இரசாயன உரங்களைத் தவிர்த்தல், அங்கக உரங்களை அதிகமாக இடுதல் மூலமும் வறட்சியில் தென்னையைக் காக்கலாம்.


தென்னை C.SUDHA LAKSHMI

முனைவர் சி.சுதாலட்சுமி,

முனைவர் சு.இராணி, முனைவர் க.வெங்கடேசன், 

தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர்-642101, கோவை மாவட்டம்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!