கேந்தி மலர் சாகுபடி!

மலர் marigold flower

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

கேந்தி அல்லது மேரிகோல்டு மலரின் தாயகம் மெக்சிகோ. குறுகிய வயது, எளிய சாகுபடி  முறை, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வளர்தல், ஆண்டு முழுவதும் பூத்தல், பல்வேறு நிறம், வடிவம் ஆகிய சிறப்புகளால் கேந்தி சாகுபடி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

பயன்கள்

மஞ்சள் தங்கம், செண்டுமல்லி, செவ்வந்தி எனப் பல பெயர்களைக் கொண்ட கேந்திப்பூ, பல்வேறு விழாக்கள், மதச்சடங்குகளில் பயன்படுகிறது. நீண்ட நேரம் கெடாமலிருப்பதால் கொய்மலராகவும் பயன்படுகிறது.

குட்டை இரகமான பிரெஞ்ச் கேந்தி, அதிக மலர்களைப் பூப்பதால், பாறைத் தோட்டம், தொங்கும் தொட்டிகள், சன்னலோரத் தொட்டிகளில் வளர்க்கப் பயன்படுகிறது. நெட்டைக் கேந்தி, கொய்மலருக்காக, மலர்ப் பாத்திகள் அமைக்க, வீடு மற்றும் அலுவலகங்களைச் சுற்றி அழகுத் தோட்டங்கள் அமைக்க உதவுகிறது.

கேந்தி இலைகளை அரைத்துத் தடவினால், கொப்புளங்கள், புண்கள் குணமாகும். இலைச்சாறு தலைவலிக்குச் சிறந்த மருந்து. மலர்ச்சாறு, மூலம், குடல் நோய்களைக் குணப்படுத்த, இரத்தத்தைச் சுத்தப்படுத்த உதவுகிறது.

கேந்திப்பூ எண்ணெய், நறுமணப் பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது. கேந்திப் பூவிலிருந்து கிடைக்கும் சேந்தோபில் என்னும் நிறமி, கோழிகளுக்குக் கவர்ச்சியான நிறத்தைக் கொடுக்க உதவுகிறது. மஞ்சள் கேந்திப் பூவில் கெலனைன் என்னும் இரசாயனப் பொருள் உள்ளது.

கேந்திப்பூ எண்ணெய், கொசுக்களை விரட்டியடிக்கும். இரசாயன உரச்செலவு மற்றும் பக்கவிளைவு இல்லாமல் நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, கேந்திச் செடிகள் உதவுகின்றன. தக்காளியில் 16 வரிசைக்கு ஒரு வரிசையில் நடப்படும் கேந்திச் செடிகள், தக்காளிப்பழத் துளைப்பான்களை ஈர்த்துச் சேதத்தைத் தடுக்கும். 

வகைகள்

கேந்தியில், 90 செ.மீ. வளரும் நெட்டைக் கேந்தி, 30 செ.மீ. வளரும் குட்டைக் கேந்தி என இரு வகை உண்டு. நெட்டைக் கேந்திப்பூ, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் பல்லடுக்கு இதழ்களுடன் இருக்கும். இது வணிக நோக்கில் பயிரிடப்படுகிறது. குட்டைக் கேந்திப்பூ, சிறிதாக, பல நிறங்களில் அடர்த்தியாகப் பூக்கும். இது பூங்காக்களில் அழகுக்காகப் பயன்படுகிறது. 

ஆப்பிரிக்கன் கேந்தி: இதில் ஜெயின்ட் ஆப்பிரிக்கன் ஆரஞ்சு டபுள், ஜெயின்ட் ஆப்பிரிக்கன் எல்லோ டபுள், கிரேக்கர் ஜேக், கிளைமாக்ஸ், கோல்டன் ஏஜ், கிரைசேன்தியம் சார்ம், கிரவுன் ஆப் கோல்டு, ஸ்டார் கோல்டு, பிரைம்ரோஸ், பிஸ்டா, மதுரை 1 ஆகிய வகைகள் உள்ளன.

தமிழகத்தில் மதுரை 1, உள்ளூர் மஞ்சள், உள்ளூர் ஆரஞ்சு போன்ற இரகங்கள் பயிரிடப்படுகின்றன. 1986 இல் மதுரை வேளாண்மைக் கல்லூரி மூலம் வெளியிடப்பட்ட மதுரை 1, உயர் விளைச்சல் வகையாகும். நடுத்தரமாக வளரும் இச்செடியொன்று இளம் ஆரஞ்சு நிறத்தில் 100 பூக்களைப் பூக்கும். எக்டரில் 20 டன் பூக்கள் கிடைக்கும்.

பிரரெஞ்ச் கேந்தியில், ரெட் போரேகேட், ரஸ்டி ரெட், பட்டர் ஸ்கார்சு, வேலன்சியா, சுசானா, கார்கிமொனு, பிளேம்ஸ் ஸ்பிரோ ஆகிய வகைகள் உள்ளன. நெட்டை மற்றும் குட்டைக் கேந்திக் கலப்பில் உருவாக்கப்பட்ட வீரிய ஒட்டு வகைகளில், ரெட், கோல்டு, நுக்கட் ஆகியன முக்கியமானவை.

இனப்பெருக்கம்

விதைகள் மற்றும் வேர்விட்ட நுனிக் குச்சிகள் மூலம் இனவிருத்திச் செய்யப்படுகிறது. பெரும்பாலும் விதை முறையே பயனில் உள்ளது. 6-10 செ.மீ. நீள நுனிக்குச்சிகளை, 1000-1500 பி.பி.எம். வரையில் கலக்கப்பட்ட, ஐ.பி.ஏ. என்னும் வளர்ச்சி ஊக்கியில் நனைத்து நட்டால், 90-95% வேர் விட்டுப் பயன்படும்.

மண்

ஆழம், வளம், வடிகால் வசதியுள்ள எல்லா மண்ணிலும் வளரும். நிலத்தின் அமில காரத்தன்மை 6-7.5 இருக்க வேண்டும். களர், உவர் மண் கேந்தி சாகுபடிக்கு ஏற்றதல்ல.

தட்பவெப்பம்

கேந்திக்குச் சீரான மிதவெப்பம் தேவை. அதிக வெப்பம், கடுங்குளிர் இதற்கு ஆகாது. மலைப்பகுதியிலும் கேந்தி பயிராகிறது. கேந்திக்கு, 15-21 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஏற்றது.

பருவம்

ஆண்டு முழுவதும் பயிரிடலாம் என்றாலும், மூன்று பருவங்கள் மிகவும் உகந்தவை. 1.மழைக்காலமான ஜூன் கடைசி முதல் ஜூலை முதல் வாரம் நாற்று விட்டு, ஆகஸ்ட் முதலிரண்டு வாரங்களில் நடுதல். 2.குளிர் பருவமான செப்டம்பர் நடுவில் நாற்று விட்டு, அக்டோபர் நடுவில் நடுதல். 3.ஜனவரி முதல் வாரம் நாற்று விட்டு, பிப்ரவரி முதல் வாரம் நடுதல்.

நாற்றங்கால்

நன்கு பண்படுத்திய நிலத்தில், கடைசி உழவுக்கு முன், ச.மீ.க்கு 10 கிலோ வீதம் மட்கிய தொழுவுரத்தை இட்டு நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 3 மீ. நீளம் 1 மீ. அகலத்தில் 8-10 மேட்டுப் பாத்திகளை அமைக்க வேண்டும்.

இதற்கு 1-1.5 கிலோ விதை தேவை. விதைகளை 15 செ.மீ. இடைவெளியில் வரிசையாக விதைத்து, மண் அல்லது மணலால் மூடி, பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும். அரைக்கிலோ அசோஸ்பயிரில்லத்தில் விதைகளை நேர்த்தி செய்து விதைத்தால் நாற்றுகள் நன்கு வளரும்.

கரையான் இருந்தால் பி.எச்.சி. 10% தூளை, ச.மீ.க்கு 2.5 கிராம் வீதம் நிலத்தில் இட வேண்டும். ஏழு நாட்களில் விதைகள் முளைத்து விடும். முளைக்கும் வரை நாற்றங்கால் ஈரமாக இருக்க வேண்டும். ஒரு மாதத்தில் அரையடி உயரம் வளர்ந்து நடவுக்குத் தயாராகி விடும். நாற்றுகள் நன்கு முளைக்க, 18-30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உகந்தது.

நிலத்தயாரிப்பும் நடவும்

நிலத்தைப் புழுதியாக உழுது எக்டருக்கு 30 டன் தொழுவுரத்தை அடியுரமாக இட வேண்டும். பிறகு, ஆப்பிரிக்கன் கேந்தியெனில் 1.5 அடி இடைவெளி, பிரெஞ்ச் கேந்தியெனில் 20 செ.மீ. இடைவெளியில் பார்களை அமைத்து நாற்றுகளை நட வேண்டும்.

ஆப்பிரிக்கன் கேந்தியை 30 செ.மீ., பிரெஞ்ச் கேந்தியை 20 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். மாலையில் நடுவது நல்லது.

பாசனம்

நட்டு மூன்றாம் நாளில் உயிர் நீரும், பின்னர் தேவைப்படியும் நீர் பாய்ச்ச வேண்டும். பூக்கும் போது போதுமான பாசனம் இருந்தால் மலர்களின் தரம் கூடும். கேந்தியானது, 55-60 நாட்களில் தழை வளர்ச்சியை முடித்துப் பூக்கத் தொடங்கி விடும். இந்தப் பருவத்தில் பாசனத் தட்டுப்பாடு ஏற்பட்டால், மகசூல் குறைந்து விடும்.

உரம்

எக்டருக்குத் தேவையான 45:90:75 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக் கிடைக்க ஏதுவாக, 100:560:120 கிலோ யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாசை அடியரமாகக் கொடுக்க வேண்டும். நட்ட 45 நாள் கழித்து 45 கிலோ தழைச்சத்தை மேலுரமாகக் கொடுக்க, 100 கிலோ யூரியாவை இட வேண்டும்.

உரமிட்டதும் மண்ணை அணைத்துப் பாசனம் செய்ய வேண்டும். எக்டருக்கு 2 கிலோ அசோஸ்பயிரில்லம் இட்டால், தழைச்சத்துத் தேவை 50% வரை குறைவதுடன், செடிகள் செழித்து வளர்ந்து அதிக மகசூலைக் கொடுக்கும்.

வளர்ச்சி ஊக்கிகள்

எத்திரல் என்னும் வளர்ச்சிக் குறைப்பானை 250 பி.பி.எம். தெளித்தால், செடிகளின் உயரம் குறைந்து, பூக்கும் கிளைகள் நிறையத் தோன்றும். மேலும், நட்டு 30 நாட்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலத்தை 1000 பி.பி.எம். தெளித்தால் பூக்கள் நிறையப் பூக்கும்.

சைட்டோசைமை 30, 60 நாட்களில் தெளித்தால், பெரிய பூக்கள் நிறையக் கிடைக்கும். வளர்ச்சி ஊக்கிகளைக் காலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.

பின்செய் நேர்த்தி

களைகள் இருந்தால் மகசூல் குறையும். அதனால், நட்டு 15 நாளில் ஒருமுறையும், பிறகு அவ்வப்போதும் களைகளை அகற்ற வேண்டும். செடிகளில் பூக்கள் அதிகமாகக் கிடைக்க, கிளைகள் உருவாக வேண்டும். இதற்கு, நட்டு 40 நாட்களில் செடிகளின் நுனிகளைக் கிள்ளிவிட வேண்டும்.

பாதுகாப்பு: பூச்சிகள்

செஞ்சிலந்தி: இலைகள் மற்றும் பூக்களின் சாற்றை உறிஞ்சி அவற்றைக் காயச் செய்யும் செஞ்சிலந்தியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி கெல்த்தேன் வீதம் கலந்து தெளிக்கலாம்.

மொக்குப்புழு: வளரும் மொக்குகளையும், பூக்களையும் சேதப்படுத்தம் இப்புழுவைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி புரபனபாஸ் வீதம் கலந்து தெளிக்கலாம்.

கம்பளிப்புழு: இலைகளைச் சேதமாக்கும் கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் நுவானைக் கலந்து தெளிக்கலாம்.

இலைப்பேன்: சாற்றை உறிஞ்சி பூக்கள் மற்றும் இலைகளை வாடச் செய்யும் இலைப்பேனைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் டைமீத்தோயேட் அல்லது மீத்தைல் பாரத்தியானைக் கலந்து தெளிக்கலாம்.

தத்துப்பூச்சி: இலைகள் வாடிச் சுருளவும், தண்டின் நுனி வாடவும் காரணமாகும் தத்துப் பூச்சியைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் மாலத்தியானைக் கலந்து தெளிக்கலாம்.

நோய்கள்

வேரழுகல்: நீர் தேங்கும் நிலத்திலுள்ள நாற்றுகள் மற்றும் வளர்ந்த செடிகளின் வேர்களை இந்தப் பூசணம் தாக்குவதால், வேர்கள் அழுகிச் செடிகள் காய்ந்து விடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் பைட்டலான் அல்லது பெவிஸ்டின் மருந்தைக் கலந்து, மூன்று முறை செடிகளைச் சுற்றி ஊற்றலாம்.

இலைப்புள்ளி நோய்: முதலில் இலைகளில் வட்டமான சிவப்புப் புள்ளிகள் தோன்றும். பிறகு இந்தப் புள்ளிகள் இணைவதால் இலைகள் கருகி விடும். இதைக் கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் பெவிஸ்டின் மருந்தைக் கலந்து தெளிக்கலாம்.

சாம்பல் நோய்: இது இலைகளில் சாம்பல் நிறப் பூசண வளர்ச்சியை உண்டாக்கி, ஒளிச் சேர்க்கையைக் குறைத்து விடும். இதைக் கட்டுப்படுத்த, 0.5 சத காரத்தேனைத் தெளிக்கலாம் அல்லது கந்தகத் தூளைத் தூவலாம்.

மகசூல்

நட்ட 35 நாளிலிருந்து 140 நாட்கள் வரை மகசூல் கிடைக்கும். வாரம் ஒருமுறை வீதம் 12 முறை பூக்களைப் பறிக்கலாம். நெட்டைக் கேந்தி மூலம் எக்டருக்கு 18 டன், குட்டைக் கேந்தி மூலம் 12 டன் பூக்கள் கிடைக்கும்.

விதை உற்பத்தி

கேந்தி அயல் மகரந்தச் சேர்க்கைப் பயிர் என்பதால், 1-1.5 கிலோ மீட்டர் விலகு தூரம் கொடுத்துப் பயிரிட வேண்டும். ஆறு மாதங்களில் விதை கிடைக்கும். குளிர்காலக் கேந்தி, மலர் மற்றும் விதை உற்பத்திக்கு மிகவும் உகந்தது. நெட்டைக் கேந்தியில் எக்டருக்கு 375 கிலோ விதை, குட்டைக் கேந்தியில் 1250 கிலோ விதை கிடைக்கும்.

வருமானம்

சாகுபடிச் செலவாக எக்டருக்கு ரூ. 15,000 ஆகும். ஒரு கிலோ பூவின் குறைந்தளவு விலை ரூ.2.20 வீதம் 18,000 கிலோ பூக்களின் மொத்த விலை ரூ.39,600. இதில் சாகுபடிச் செலவு போக எக்டருக்கு நிகர வருமானமாக ரூ.24,600 ஆறு மாதத்தில் கிடைக்கும்.

விதைக்காக நெட்டைக் கேந்தியைப் பயிரிட்டால் 375 கிலோ விதைகள் கிடைக்கும். ஒரு கிலோ விதைகளின் விலை ரூ.100 வீதம் கணக்கிட்டால், ரூ.3,75,000 வருமானமாகக் கிடைக்கும். சாகுபடி மற்றும் விதைப் பிரிப்புச் செலவு ரூ.17,500 போனால் கூட, எக்டருக்கு ரூ.3,57,500 நிகர வருமானமாக அரையாண்டில் கிடைக்கும். 


முனைவர் அ.சங்கரி,

வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை, முனைவர் எம்.ஆனந்த், 

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு, 

கே.கயல்விழி, வேளாண்மைப் பொறியியல்&ஆராய்ச்சி நிலையம், குமுழூர்.

பகிருங்கள்:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!