கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021
கறவை மாடுகளைப் பாதிக்கும் புருசில்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய் புருசில்லா அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளில், கருச்சிதைவு, சினைக் கருப்பைச் சுழற்சி, கருச்சிதைவு தங்குதல், மலட்டுத் தன்மை, பால் உற்பத்திக் குறைவு, விரை வீக்கம், மூட்டு வீக்கம், மூட்டுவலி ஆகியன ஏற்படும்.
நோய் பரவும் முறை
நுண்ணுயிரி கலந்த தீவனம், பால் ஆகியவற்றை உண்பதாலும், நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் கருப்பைத் திரவம், சிதைவுற்ற கரு, கருச் சவ்வுகள், சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம், நலமாக உள்ள கால்நடைகளுக்குப் பரவுகிறது. நோயுற்ற காளைகளின் விந்துவைச் செயற்கை முறை கருவூட்டலுக்குப் பயன்படுத்துவதன் மூலமும் இந்நோய் பரவுகிறது.
நோய் அறிகுறிகள்
இந்நோய் தாக்கிய சினை மாடுகளில் ஆறு மாதத்துக்கு மேல் திடீரென்று கருச்சிதைவு ஏற்படும். கன்று இறந்து பிறக்கும். சளி மற்றும் சீழ் கலந்த திரவம் பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும். கருச்சிதைவு ஏற்பட்ட மாடுகளில் நஞ்சுக்கொடி விழாது. இந்த மாடுகளில் மூட்டு வீக்கம், மடிவீக்கம், மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புண்டு.
காளைகளில் விரை முனைப்பைச் சுழற்சி, விரை வீக்கம் ஆகியன ஏற்படும். பாதிக்கப்பட்ட காளைகள் பாலியல் உணர்வுகளை இழப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படலாம். இந்நோய், பருவமடைந்த விலங்குகளையே தாக்கும்.
பருவமடையாத கன்றுகள் நோயெதிர்ப்பு சக்தியுடன் இருக்கும். ஆனால், நோயுற்ற மாட்டுக்குப் பிறந்த கன்றுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாட்டின் பாலைக் குடிக்கும் கன்றுகள் இந்நோய்க்கு உள்ளாகும்; பருவமடைந்த பிறகு நோய்ப் பரப்பியாகச் செயல்படும்.
தடுப்பு முறைகள்
மாடுகள் மற்றும் 4-12 மாத கிடேரிக் கன்றுகளுக்கு எஸ்.9 என்னும் தடுப்பூசியைப் போட வேண்டும். இத்தடுப்பூசி, காளைக் கன்றுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதால் அவற்றுக்கு இவ்வூசியைப் போடுவதில்லை.
புதிதாக வாங்கப்பட்ட மற்றும் கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட மந்தையில் இருந்து வாங்கப்பட்ட அனைத்துக் கால்நடைகளையும் தனியே வைத்துக் கண்காணிக்க வேண்டும். இனவிருத்திக்குப் பயன்படுத்தும் மாடுகளை, ஒரு சினைக் காலத்தைக் கடக்கும் வரை வைத்திருக்க வேண்டும்.
சினை மாடுகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வாங்கும் நிலையில், கன்று ஈனும் வரை அவற்றைத் தனியாக வைத்துக் கண்காணிக்க வேண்டும். மேலும், கால்நடை மருத்துவரின் உதவியுடன் அவற்றை முப்பது நாட்கள் இடைவெளியில் ஒருமுறை கருச்சிதைவுத் தொற்று நோய் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். சோதனை முடிவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட கால்நடைகளை நீக்கிவிட வேண்டும். நல்ல கால்நடைகளுக்குக் கால்நடை மருத்துவர் மூலம் தடுப்பூசியைப் போட வேண்டும்.
பருவமடையாத கன்றுகளை 2-3 ஆண்டுகள் தனியே வைத்துக் கண்காணிக்க வேண்டும். நோயுள்ள மந்தையில் இருந்து ஓராண்டுக்கு மேற்பட்ட கிடேரிகளை விற்பனை செய்யக் கூடாது. நோயுற்ற கால்நடைகளை முற்றிலும் பண்ணையில் இருந்து நீக்கிவிட வேண்டும்.
நோயுற்ற கால்நடைகளை நல்ல கால்நடைகளுடன் சேர்த்து இனவிருத்தி செய்யக் கூடாது. நோயுற்ற காளைகளின் விந்துவைச் செயற்கை முறை கருவூட்டலுக்குப் பயன்படுத்தக் கூடாது. கருச்சிதைவால் சிதைவுற்ற கரு, கருப்பைத் திரவம், கருச்சவ்வு ஆகியவற்றைச் சுகாதாரமான முறையில் அகற்ற வேண்டும். கிருமிநாசினி மூலம் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
இந்நோய்க்கு உள்ளான கால்நடைகளில் நோயெதிர்ப்புத் திறன் ஏற்படுவதில்லை. மேலும், நோயுற்ற கால்நடைகள் நோய்ப் பரப்பியாகச் செயல்படும். எனவே, 4-8 எட்டு மாதமுள்ள அனைத்துக் கால்நடைகளுக்கும் கால்நடை மருத்துவர் மூலம் தடுப்பூசியைப் போட வேண்டும்.
முனைவர் க.தேவகி,
முனைவர் ப.இரா.நிஷா, வேளாண்மை அறிவியல் நிலையம்.
முனைவர் கா.செந்தில் குமார், முதுகலை கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையம்,
காட்டுப்பாக்கம்.
சந்தேகமா? கேளுங்கள்!