மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

மடிவீக்க Phibro Mastitis Koe hero desktop

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020

றவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது.

கலப்பினப் பசுக்களை மடிநோய் அதிகமாகத் தாக்கும். இது, பால் சுரக்கும் திசுக்களைத் தாக்கி, பாலின் நிறம், தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் உற்பத்தியைக் குறைக்கும். உரிய நேரத்தில் சரியான சிகிச்சையை அளிக்கா விட்டால், மடி முழுவதும் பாதிப்படைந்து, பாலுற்பத்தி நிரந்தரமாக நின்றுவிட வாய்ப்புண்டு. எனவே, இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்க்க, பண்ணையில் முறையான நோய்த்தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும்.

நோய்க்காரணம் 

ஸ்டஃபைலோகாக்கஸ், எஸ்சரீஸிசியா மற்றும் ஸ்டெரெப்டோகாக்கஸ் வகை நுண்ணுயிரிகளே இந்நோய்க்குக் காரணம். இவை, சுத்தமற்ற மடியின் காம்புத்துளை வழியாக மடிக்குள் சென்று திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும். கறவையாளரின் சுத்தமற்ற கை, கறவை இயந்திரம் மற்றும் கறவைப் பொருள்கள் மூலம், மடிநோயுள்ள மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்குப் பரவும். சுத்தமற்ற சுற்றுப்புறம் இக்கிருமிகள் வளரக் காரணமாகும்.

நோய் அறிகுறிகள்

கிருமிகளின் தாக்கம் மற்றும் தாக்க வேகத்தைப் பொறுத்து, இந்நோய் பல வகைகளில் ஏற்படும். பாலுற்பத்தி மிகுந்த மாடுகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகும். பால்மடி வீங்கியும் சூடாகவும் இருக்கும். இது அதிதீவிர நிலையாகும். இதனால், பால் முழுவதும் கெட்டு விடும். சில மாடுகளின் மடிகளில் வீக்கம் இல்லாமல் பாலில் மட்டும் மாற்றம் ஏற்படும். இது, தீவிரம் குறைந்த நிலையாகும். இதனால், பால் திரிந்து விடும்.

சில மாடுகளின் மடிகளில் அல்லது பாலில் மாற்றமிருப்பது வெளிப்பார்வையில் தெரியாது. ஆனால், பாலின் வெள்ளை அணுக்களில் பெருமளவில் மாற்றம் இருக்கும். இது, மறைமுக நிலையாகும். இதனால், பாலின் சுவை மட்டும் மாறும். எருமைகளில் இந்நிலை அதிகமாக இருக்கும்.

சிகிச்சை

மருத்துவர் மூலம், கிருமியின் வகையறிந்து, விரைந்து சிகிச்சை செய்தால், பாதிப்பும், இழப்பும் குறையும். காம்பு மூலமும், இரத்தத்தில் கலக்கும் வகையில் ஊசி மூலமும் மருந்தைச் செலுத்த வேண்டும். தொடர் சிகிச்சை இருக்க வேண்டும். பயனிலுள்ள ஆம்பிசிலின், அமாக்சிலின், சிளாக்சலின், பென்சிலின்-ஜி, ஸ்ட்ரெப்டோபென்சிலின், என்ரோஃபிளாக்சசின், சிப்ரோபிளாக்சஸின், பிஃபிளாக்சசின் ஆகியவற்றில் ஒன்றை, மருத்துவர்  மூலம் சுகாதாரமான முறையில் மடிக்குள் மருந்தைச் செலுத்த வேண்டும்.

அதிதீவிர நோய்ச் சிகிச்சை

கெட்டுப் போன பாலை மடியில் தங்க விடாமல் அடிக்கடி பீய்ச்சி விட வேண்டும். இரத்தம் மூலமும், காம்பு வழியாகவும் கிருமியெதிர்ப்பு மருந்துகளைச் செலுத்த வேண்டும். உடலில் ஏற்படும் திரவ இழப்பைச் சரி செய்ய, தகுந்தளவில் திரவ மருந்துகளை உடலில் செலுத்த வேண்டும். காய்ச்சல் மற்றும் வலியைக் கட்டுப்படுத்த மருந்தளித்தல் அவசியம். எவ்வகை மடிநோயையும் பண்ணையாளர்களால் மட்டுமே குணப்படுத்த முடியாது. மருத்துவர் உதவியும், விரைவான சிகிச்சையும் அவசியம்.

நோய்த்தடுப்பு முறைகள்

அதிகமாகப் பாலைத் தரும் கலப்பின மாடுகளையே இந்நோய்த் தாக்குவதால், அவற்றைச் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும். சினைக் காலத்தில் இருந்தே மடியை நன்கு பராமரித்து வந்தால், ஈன்ற பிறகு மடிநோய் வராமல் காக்கலாம். சுத்தமான நீரில் மடியை நன்கு கழுவி விட்டுப் பாலைக் கறக்க வேண்டும். பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரில் மடியைக் கழுவுவது நல்லது.

கறவைக்குப் பிறகு, நோய்க்கிருமிகள் பரவாமல் இருக்க, மருத்துவரின் ஆலோசனைப்படி, சாவ்லான் கிருமிநாசினிக் கலவையில் காம்புகளை முக்கி எடுக்க வேண்டும். கறவையாளர் சுகாதாரமாக இருப்பதுடன், கறவைக்கு முன், கிருமிநாசினி மூலம் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். தினமும் கறவை இயந்திரத்தைக் கிருமிநாசினி மூலம் கழுவிச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; அதன் செயல் திறனைப் பராமரிக்க வேண்டும்.

முதலில் நோயற்ற மாடுகளில் பாலைக் கறந்து விட்டு, நோயுள்ள மாடுகளில் கடைசியில் கறக்க வேண்டும். பாலைக் கறந்து வைக்குமிடமும் கொட்டிலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். தரை ஈரமாக இருக்கக் கூடாது. காம்பிலோ மடியிலோ சிறு புண் இருந்தாலும் உடனே குணப்படுத்த வேண்டும். மென்மையாகக் காம்பைப் பிடித்துக் கறந்தால் காயங்களைத் தவிர்க்கலாம். எருமைகளில் இதை முக்கியமாகப் பின்பற்ற வேண்டும்.

எருமைகளில் காம்பு வீக்க நோயைத் தவிர்க்க, சினைக் காலத்தில் இருந்தே தினமும் அவற்றின் மடி மற்றும் காம்பைப் பிடித்தும் நீவியும் விடுவது நல்லது. காம்புகளில் வீக்கம் இருந்தால் உடனே மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். மடி, மடி சார்ந்த பகுதி மற்றும் கொட்டில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

கறவைக்குப் பின்னும் சற்று நேரம் வரையில் காம்புத் துளைகள் மூடாமல் இருக்கும். இந்நிலையில், மாடுகள் படுத்தால், காம்புக்குள் கிருமிகள் சென்று விடும். எனவே, பாலைக் கறந்ததும் மாடுகளைப் படுக்க விடக் கூடாது. அடிக்கடி மடிநோய்க்கு உள்ளாகும் மாடுகளை நீக்கிவிட வேண்டும். கடந்த ஈற்றில் மடிநோய்க்கு உள்ளாகி, இப்போது சினையாக இருக்கும் மாடுகளில், மருத்துவர் மூலம் மடிநோய்ச் சிகிச்சையைத் தந்தால். எதிர் காலத்தில் இந்நோய் வராமல் காக்கலாம்.

ஈனுவதற்கு 21 நாட்களுக்கு முன், வைட்டமின் சி மற்றும் செலினியத்தைச் செலுத்தினால் நோய்த் தாக்கம் குறையும். உருளைக் காம்புள்ள மடிகளை, இந்நோய் அதிகமாகத் தாக்குவதால், கூம்புக் காம்புள்ள மாடுகளை வளர்க்க வேண்டும். மடிநோய் ஐயம் எழுந்தால், கறுப்புக் கிண்ணத்தில் பாலைக் கறந்து பார்க்கலாம். அதில் சிறு கட்டிகள் அல்லது பால் திரிந்து இருந்தால் நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். மடிநோயைத் தடுப்பதில் சுற்றுப்புறத் தூய்மைக்கு முக்கியப் பங்குண்டு.


மடிவீக்க VISHA 1 e1628798135240

முனைவர் .விஷா,

இணைப் பேராசிரியர், அ.இளமாறன், உதவிப் பேராசிரியர், 

கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!