கோடையிலும் அசோலா உற்பத்தி!

அசோலா

கட்டுரை வெளியான இதழ்: மே 2019

நெல் மகசூலைக் கூட்டுவதில் அசோலா பெரும் பங்கு வகிக்கிறது. புரதச்சத்து மிகுந்துள்ளதால், கால்நடைத் தீவனத்திலும் பயன்படுகிறது. எளிதாக அசோலா உற்பத்தி செய்யப்படினும், கோடை வெய்யிலில் இந்த உற்பத்தியை நிலைப்படுத்தவும், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யவும் விவசாயிகளால் இயலவில்லை. கடும் வெப்பமே இதற்குக் காரணம். சரியான நிழல், நன்னீர், உர மேலாண்மை சரியாக இருப்பினும், வெப்ப உயர்வால் அசோலா வளர்வது குறைந்து காய்ந்துவிட நேர்கிறது.

நல்ல சூழலில் 20x5x0.5 அடி பாத்தியில், 10-15 நாளில் 3-3.5 கிலோ அசோலா கிடைக்கும். ஆனால், அதிகக் குளிர் மற்றும் வெப்பத்தில் வளர்ச்சி குறையும். அசோலாவுக்கு ஏற்ற வெப்பநிலை 27-30 டிகிரி செல்சியஸ் ஆகும். 32-35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலும் வளரும். எனினும், இதே வெப்பநிலை தொடர்ந்தால் தண்டுப் பெருக்கம் பாதிக்கும். ஈரப்பதம் 60-70% இருக்கலாம். 60%க்குக் குறைந்தால் உலர்ந்து விடும்.

கோடைக்காலப் பராமரிப்பு

நிழலும் வெய்யிலும் கிடைக்கும் இடத்தில் அசோலாப் பாத்தியை அமைக்க வேண்டும். பாத்தியில் வெய்யில் விழக் கூடாது. குறிப்பாக, பகல் 12-3 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும். இதைப் போல, வெப்பக்காற்றும் அசோலாப் பாத்தியின் ஒரு பகுதியில் தேங்கி விடும். இதனால், அசோலா முதிராமலே பிரிந்து விடும். ஒளியடர்த்தி மிகுந்தால் அசோலா இதழ்கள் அடர் சிவப்பு நிறமாக மாறிவிடும். அசோலா வளர்ப்புக்கு நன்னீர் (உப்பின் அளவு 150 பி.பி.எம்.) மிகவும் ஏற்றது. கடும் வெப்பத்திலும் நன்னீரில் அசோலா இயல்பாக வளரும்.

ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும், அசோலாப் பாத்தியில் உரமிடக் கூடாது. உதாரணமாக. ஒரு பாத்தியில் 10 நாள் இடைவெளியில் மாதத்துக்கு மூன்று முறை அறுவடை செய்யலாம். இச்சூழலில், மூன்று முறை உரமிடக் கூடாது. அசோலா உயிர் உரமாகும். அதாவது, அசோலாவில் வாழும் அனபீனா அசோலே பாக்டீரியா, வளிமண்டலத் தழைச்சத்தை, அசோலா இலைகளில் நிலை நிறுத்தும். அசோலா வளரும் காலம் முழுவதும் இந்தச் செயல் நிகழும். இதனால் தேங்கியுள்ள நீரில் தழைச்சத்து அதிகளவில் கரைந்திருக்கும்.

இந்நிலையில், சத்துகளின் அடர்த்தி மிகுவதால், அசோலா வேர்கள் சத்துகளை உறிஞ்சுவது தடைபட்டு வளர்ச்சிக் குன்றும். இந்நிலையில், பாத்தியில் உள்ள நீர் முழுவதையும் மாற்றி விட்டால் நன்கு வளரும். வெய்யில் காலத்தில் அசோலாப் பாத்தியில் உள்ள நீர் அதிகளவில் ஆவியானால், பாத்தியின் அளவுக்கு ஏற்ப, 10-30 லிட்டர் நீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கவனிக்க வேண்டியவை

அசோலா பின்னேட்டா, அசோலா மைக்ரோபில்லா இரகங்கள் அதிக வெப்ப நிலையைத் தாங்கி வளரும். 20 செ.மீ. முதல் 2 அடி வரையில் நீரைத் தேக்கி வைக்கலாம். கார அமிலத் தன்மை 5-5.7 வரை இருக்கலாம். காற்று மிகுந்தால் அசோலாவின் வளர்ச்சி பாதிக்கும். நைட்ரஜன் குறைவாக அல்லது நைட்ரஜன் சத்து இல்லாத இடங்களில் அசோலா நன்கு வளரும்.

தொட்டி அல்லது பாத்தியில் வளர்த்தால், மூன்று மாதத்துக்கு ஒருமுறை, மண்ணையும் நீரையும் மாற்றிவிட வேண்டும். பாத்தியில் வளர்க்க, 20x5x0.5 அடி பாத்தி ஏற்றது. கால்நடைகளின் இருப்புக்கு ஏற்ப, 4-5 பாத்திகளை அமைக்கலாம்.

கொடுக்க வேண்டிய அளவு

பால் மாடு, உழவு மாட்டுக்கு 1-1.5 கிலோ. முட்டைக்கோழி, இறைச்சிக் கோழி, வான்கோழிக்கு 20-50 கிராம். ஆட்டுக்கு 300-500 கிராம். வெண் பன்றிக்கு 1.5-2 கிலோ. முயலுக்கு 100 கிராம். அசோலாவை நிழலில் உலர்த்தி அடர் தீவனத்துடன் கலந்தும் தரலாம். 


DAISY

முனைவர் மா.டெய்சி,

வேளாண்மை அறிவியல் நிலையம், நாமக்கல். முனைவர் ந.அகிலா, 

கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!