நல்ல இலாபம் தரும் வெட்டி வேர் சாகுபடி!

Pachaiboomi - vetti ver

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020

வெட்டிவேர், விவசாயிகளுக்கு நல்ல இலாபம் தரும் பயிர். ஏக்கருக்கு ஆறு டன் மகசூல் கிடைக்கும். மண்ணரிப்பைத் தடுக்கும். இதிலிருந்து, மருந்துகள், வாசனைப் பொருள்கள், பொம்மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், விசிறிகள் போன்ற பொருள்களைத் தயாரிக்கலாம்.

வெட்டிவேர் இருக்கும் இடத்தில், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் குறையும். தனிப்பயிராக இல்லா விட்டாலும், வரப்போரப் பயிராகக் கூட வளர்க்கலாம்.

மருத்துவப் பயன்கள்: வெட்டிவேர், குளிர்ச்சி, நறுமணம் மற்றும் உற்சாகத்தைத் தரும். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், மணமூட்டியாகத் தைலங்களிலும், குளியல் சோப்புகளிலும் பயன்படுகிறது. இது, கை, கால் பிடிப்புகளுக்கும் மருந்தாகும். வெட்டிவேர் கலந்த நீர், நாவறட்சி, தாகத்தை நீக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும்.

வாந்தி பேதிக்கும் நல்ல மருந்தாகும். வெட்டிவேர் விசிறி உடல் எரிச்சலைப் போக்கும். வெட்டிவேர்த் தட்டிகளைச் சன்னல்களில் கட்டித் தொங்க விட்டால், கோடை வெப்பம் குறையும்; நல்ல மணமும் கிடைக்கும்.

இரகங்கள்: வெட்டிவேர் புல்வகைத் தாவரமாகும். இயற்கையாகக் காடுகளில் வளரும். கேரளம், ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. லக்னோ மத்திய மருந்து மற்றும் வாசனைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், கே.எஸ்.1, 2, சுகந்தா ஆகிய உயர் விளைச்சல் இரகங்களை வெளியிட்டுள்ளன. உள்ளூர் இரகத்தை விட, இவற்றில் இருந்து 5-6 மடங்கு எண்ணெய் கூடுதலாகக் கிடைக்கும்.

மண் வகை: நிலத்தில் நல்ல வடிகால் வசதி இருக்க வேண்டும். எல்லா வகை மண்ணிலும் வளரும். கார அமிலத் தன்மை 9.5-10.5 உள்ள மணல் சார்ந்த நிலத்திலும் விளையும்.

தட்ப வெப்பம்: வெட்டிவேர், எல்லாத் தட்பவெப்ப நிலையிலும் வளரும். கடல் மட்டத்திலிருந்து 800-1000 மீட்டர் உயரத்தில் உள்ள மலைகளிலும் வளரும். ஆண்டு மழையளவு 50 செ.மீ. மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். வறட்சியில் அதிகப் பலனைத் தரும். குளிர்ச்சியுள்ள மலைப்பகுதி இதற்கு ஏற்றதல்ல. ஜூன் ஜூலையில் நடலாம். மழைக்காலத் தொடக்கத்தில் நடுவது நல்லது.

பயிர்ப் பெருக்கம்: ஏக்கருக்கு 50 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். இதற்கு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். முதல் ஆண்டு மட்டும் தான் இந்தச் செலவு. அடுத்தடுத்த சாகுபடிக்கு நம்மிடம் இருப்பதையே நடலாம். 25-30 செ.மீ. உயரமுள்ள பக்கத் தூர்களை நடலாம்.

இவற்றை வளமான குத்துகளிலிருந்து பிரித்தெடுக்கலாம். வரிசை இடைவெளி 60-75 செ.மீ., பயிர் இடைவெளி 45 செ.மீ. இருக்க வேண்டும். நிலத்தை நன்கு பண்படுத்தி அடியுரமாக இயற்கை எருவை இட வேண்டும்.

உரமிடுதல்: எக்டருக்கு 40 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை அடியுரமாக இட வேண்டும். இரண்டாம் ஆண்டு 40 கிலோ தழைச்சத்தை மேலுரமாக ஜூலையில் மழைக்குப் பிறகு இட வேண்டும்.

பின்செய் நேர்த்தி: வெட்டிவேர் நன்றாக வளர்ந்த பிறகு களைகள் அதிகமாக வளராது. ஆகஸ்ட் செப்டம்பரில் மண்வெட்டி மூலம் ஒருமுறை நிலத்தைக் கொத்தி விடுவது நல்லது. இது வறட்சியைத் தாங்கி வளரும் என்றாலும், மிகவும் வறட்சியான காலத்தில் பாசனம் செய்தால், வேர்கள் உற்பத்தி அதிகமாகும்.

அறுவடை: நடவு செய்த 12 மாதங்கள் கழித்து அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கரில் குறைந்தது இரண்டு டன் வேர்கள் கிடைக்கும். ஒரு ஏக்கரில் பயிரிட 70 ஆயிரம் ரூபாய் செலவாகும். இந்தச் செலவு போக ஒரு இலட்சம் ரூபாய் வரை இலாபம் கிடைக்கும்.


Pachaiboomi_VENKADALAKSHMI

முனைவர் க.வேங்கடலெட்சுமி,

உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம்,

விருத்தாச்சலம், கடலூர் மாவட்டம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!