பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

தொழுவுரம் maxresdefault 1

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020

வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில், வேர் வளர்ச்சியின் மூலமே பயிர் வளர்ச்சி மேம்படும்.

மணிச்சத்தைப் பயிர் வளர்ச்சியின் தொடக்க நிலையில் அளித்தால் மட்டுமே, அதைப் பயிரால் எடுத்துக்கொள்ள முடியும். வளர்ந்த பயிருக்கு மணிச்சத்தை அளிப்பதால் எவ்விதப் பயனுமில்லை. அதனால், விதைப்புக்குச் சற்றுமுன் மணிச்சத்தை நிலத்தில் இட வேண்டும். மண்ணில் குறைந்தளவில் இருந்து அதிகளவு வரை மணிச்சத்து இருந்தாலும், அது பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் இல்லை.

எனவே, மணிச்சத்தை ஊட்டமேற்றிப் பயிருக்கு அளிப்பதன் மூலம் இருவித நன்மைகள் கிடைக்கின்றன. முதலில், பயிர் வளர்ச்சியின் தொடக்கத்தில், எளிதில் எடுத்துக் கொள்ளும் வகையில் பயிருக்கு மணிச்சத்துக் கிடைக்கிறது. அடுத்து, தொழுவுரப் பயன்பாடு குறைந்து வரும் நிலையில், பயிருக்குத் தேவையான அங்கக உரம் கிடைக்க ஏதுவாகிறது.

தயாரிப்பு முறை

நன்கு மட்கிய 750 கிலோ தொழுவுரத்துடன், மண்ணாய்வு அடிப்படையில் இட வேண்டிய மணிச்சத்து அல்லது குறிப்பிட்ட பயிருக்கு ஓர் எக்டருக்குத் தேவையான மணிச்சத்தை நன்றாகக் கலந்து குவியலாக்கி, ஈர மண்ணால் நன்கு மூடி வைக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகு, இந்தக் கலவையைக் கிளறி விட்டு, நீரைத் தெளித்து, மீண்டும் குவியலாக்கி ஈர மண்ணால் மூடி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால், ஒரு மாதத்தில் ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாராகி விடும்.

ஓர் எக்டர் மானாவாரி நிலத்துக்கு 6.25 டன் தொழுவுரத்தை இட வேண்டும். ஆனால், இந்தளவில் தொழுவுரம் கிடைப்பது அரிதாக இருப்பதால், அதன் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஊட்டமேற்றிய தொழுவுரம் நல்லதொரு மாற்று உரமாக அமைகிறது.

பயன்படுத்தும் முறை

மணிச்சத்தைக் கொண்டு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை, கடைசி உழவுக்கு முன், பயிருக்குத் தேவையான தழைச்சத்து உரத்துடன் கலந்து நிலத்தில் சீராகத் தூவ வேண்டும்.

பயன்கள்

ஊட்டமேற்றிய தொழுவுரத்தில் இருக்கும் மணிச்சத்தானது, பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் உள்ளது. மானாவாரி நிலங்களில் இந்த உரத்தை இட்டால், பயிரின் வேர் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும். மண்ணில் மணிச்சத்து நிலை நிறுத்தப்படுவது தடுக்கப்படுவதால் மணிச்சத்தின் பயன்பாடு அதிகமாகும். மணிச்சத்துடன் தொழுவுரமும் பயிருக்குக் கிடைப்பதால், வேர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, இந்த வேர்கள், அதிகளவில் சத்துகளை உறிஞ்சுவதால் மகசூலும் அதிகமாகும்.


தொழுவுரம் BALAJI

முனைவர் தி.பாலாஜி,

முனைவர் ப.பாலசுப்பிரமணியன், முனைவர் ஜெ.இராம்குமார்,

முனைவர் எஸ்.கவிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், இராமநாதபுரம்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading