பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பயறு வண்டு 0fafb7 59574338eaef4514aaa39b7baa223301 mv2

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020

யறு வகைகளில் அதிகளவில் புரதம், வைட்டமின்கள், தாதுப்புகள், நார்ச்சத்து இருப்பதால், இவை ஏழைகளின் புரதம் எனப்படுகின்றன. மேலும், மிகச் சிறந்த கால்நடைத் தீவனமாகவும், மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் காரணியாக, மண்ணரிப்பைத் தடுக்கும் போர்வையாகப் பயன்படுகின்றன. இவற்றின் குறைவான நீர்த்தேவை, பாதகமான காலநிலையைத் தாங்கும் தன்மையால், இவை, வளங்குன்றா மானாவாரி வேளாண்மையின் முக்கியக் காரணியாக உள்ளன.

இந்தியாவில் 13 வகைப் பயறுகள் விளைகின்றன. ஐக்கிய நாடுகள் சபை பயறுகளின் முக்கியத்தை உணர்ந்து 2016 ஆம் ஆண்டைப் பயறுவகைப் பயிர்களின் ஆண்டாக அறிவித்தது. இவற்றின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், இந்தியா தான் உலகளவில் முதலிடத்தில் உள்ளது.  உலகளவிலான மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 சதமாகும்.  

சராசரியாக எக்டருக்கு 752 கிலோ என்னுமளவில் குறைவான மகசூல் கிடைக்கக் காரணம், நிலத்திலும், சேமிப்பிலும் ஏற்படும் வண்டுகளின் தாக்குதலாகும். அறுவடைப் பருவத்தில் நிலத்தில் தொடங்கும் வண்டுகளின் தாக்குதல், சேமிப்புக் கிடங்கில் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. புரூகிட்ஸ் எனப்படும் இனத்திலுள்ள மூவகை வண்டுகள் அனைத்துப் பயறு வகைகளையும் தாக்குகின்றன.

சேதம்

இப்பூச்சிகளின் தாக்குதல் ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ளது. இந்தியாவில் பயறு வகைகள் விளையும் இடங்களில் இவற்றால் 100% வரை இழப்பு ஏற்படுகிறது. இவ்வண்டுகளின் புழுக்கள் தோலைக் குடைந்து பருப்பு முழுவதையும் உண்டு விடும். ஒரே விதையில் பல புழுக்கள் இருக்கும்.

வாழ்க்கை முறை

பயறுகள் மீது பெண் வண்டுகள் மஞ்சள் கலந்த வெண்ணிற நீள்வட்ட முட்டைகளைத் தனித்தனியாக இட்டு ஒருவிதத் திரவத்தால் ஒட்டிவிடும். ஒரு பயறில் பல முட்டைகள் இருக்கும். நிலத்தில் பச்சைக் காய்களின் மேல் முட்டைகளை இடும். இவற்றில் இருந்து 3-5 பொரிந்து வெளிவரும் புழுக்கள் பயறுக்குள் சென்று 2-3 வாரங்கள் அதை உண்ணும். நன்கு வளர்ந்த புழுக்கள் 5-7 மி.மீ. நீளத்தில் உருளை வடிவில் சதைப்பிடிப்புடன், கால்களற்று, சுருக்கங்களுடன் இருக்கும். பருப்புக்கு உள்ளேயே கூட்டுப் புழுவாக மாறி 4-10 நாட்களில் வண்டுகளாக வெளிவரும். இவை 25-40 நாட்கள் வாழும். குளிர் காலத்தில் இந்த நாட்கள் சற்று அதிகமாகும். வளர்ந்த வண்டு கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் புள்ளிகளுடன் இருக்கும். சுறுசுறுப்பாக இயங்கும் இவற்றைத் தொட்டால், மல்லாந்து படுத்து இறந்ததைப் போல நடிக்கும். ஓராண்டில் 7-8 தலைமுறைகள் உருவாகும். 

கட்டுப்படுத்துதல்

பயறுகளில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் இவ்வண்டுகள் அதிகளவில் பெருகிச் சேதத்தை ஏற்படுத்தும். எனவே, வெய்யிலில் நன்கு காய வைத்து 10%க்குக் குறைவான ஈரப்பதத்தில் சேமிக்க வேண்டும். பயறு வகைகளைக் காற்றுப் புகாத சேமிப்புக் கிடங்கு அல்லது உலோகக் குதிரில் சேமித்து வைத்தால், மூச்சுக்காற்றுக் கிடைக்காமல் பூச்சிகள் பெருக்கம் தடைப்படும்.

இவ்வண்டுகள் பல்கிப் பெருக, குறிப்பிட்ட அளவுக்கு மேல் வெப்பம் தேவை.  பயறுகளில் இருக்கும் பூச்சிகள் சுவாசிக்கும் போது ஈரப்பதமும், வெப்பமும் அதிகரித்து, வண்டுகள் மேலும் பெருகும் சூழல் ஏற்படும். இதைத் தவிர்க்க, நல்ல வெய்யில் காலத்தில் சேமிப்புக் கிடங்கைத் திறந்து காற்றோட்டமாக வைத்தல், பயற்றைக் கிளறி விடுதல் மூலம், வெப்பத்தைத் தணித்து வண்டுகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். 

வண்டு தாக்கிய பழைய பயறு வகைகள் உள்ள பைகளில் இருந்து, புதிய பயறு வகைகளில் வண்டுகள் பரவலாம். எனவே, பழைய சாக்குகளை 0.1% மாலத்தியான் 50 இசி கரைசலில் நனைத்து உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். மேலும், ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி வீதம் இம்மருந்தைக் கலந்து, 100 ச.மீ.க்கு 3 லிட்டர் அளவில் சாக்குகளில் தெளிக்க வேண்டும்.     

சேமிப்புக் கிடங்கிலுள்ள வெடிப்பு மற்றும் இடுக்குகளில் வண்டுகள் தங்குவதால், அவற்றை சிமென்ட்டால் பூசிச் சுண்ணாம்பால் வெள்ளையடிக்க வேண்டும். உட்சுவரில் 2 மீட்டர் உயரம் வரை தாரைப் பூசலாம். சேமிப்புக் கிடங்கைச் சுத்தமாக வைத்து, வண்டுகளின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க வேண்டும்.

கிடங்கு காலியாக இருக்கும் போது, தரை, சுவர் மீது, மாலத்தியான் 5% தூள் அல்லது மாலத்தியான் 50% திரவத்தைத் தெளிக்க வேண்டும். தரையிலுள்ள ஈரம் ஏறாத வகையில், பலகை அல்லது மூங்கில் கழிகளின் மேல் தகுந்த இடைவெளியில், சுவரிலிருந்து 50 செ.மீ. தள்ளி அடுக்க வேண்டும். அடுக்குக்கும், மேல் தரைக்கும் இடையே 60 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். 

பெரிய சேமிப்புக் கிடங்கில் BFL 225 என்னும் பொருளால் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். இவற்றைப் பிடிப்பதற்காகவே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள பயறு வண்டுப் பொறியைப் பயன்படுத்தலாம்.

வட இந்தியாவில் பூசா 105, பூசா போல்டு போன்ற வகைகளும், தென்னிந்தியாவில் Co.GG 912> LM 131 V 1123, LM 371  போன்ற பச்சைப் பயறு வகைகளும் UH 82-5> IC 8219  மற்றும் SPS 143  போன்ற உளுந்து வகைகளும் இவ்வண்டுகளுக்கு மிதமான எதிர்ப்புத் திறனுள்ளவை. சிறு விவசாயிகள் சேமிப்பு அறைக்குள் கரிக்கொட்டையை எரித்து அறை வெப்ப நிலையை 150 டிகிரி பாரன்கீட்டுக்கு உயர்த்தினால், அறைக்குள் இருக்கும் வண்டுகள், புழுக்கள் மற்றும் முட்டைகள் அழிந்து விடும்.

ஒரு கிலோ பயறுக்கு 10 மில்லி வீதம் தாவர எண்ணெய்யைக் கலந்து வைத்தால் வண்டுகள் முட்டையிடுவது குறைவதுடன், முட்டைகள் பொரிப்பதும் தடுக்கப்படும். காய்ந்த வேப்பிலை, நொச்சியிலை, கறிவேப்பிலை மற்றும் வசம்புத்தூளை ஒரு சத அளவில் கலந்து சேமித்தால் இவ்வண்டுகளின் தாக்குதல் குறையும்.

தோலை நீக்கி உடைத்த பயறுகளில் இவற்றின் தாக்குதல் குறைவாக இருக்கும். வேப்பங்கொட்டைத் தூள் அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள ஊக்குவிக்கப்பட்ட களிமண்ணை 1:100 எனக் கலந்து சேமித்து வைக்கலாம். விதைப்பயறில் 100 கிலோவுக்கு ஒரு கிலோ வீதம் லிண்டேன் 1.3% தூள் அல்லது மாலத்தியான் 5% தூள் அல்லது கார்பரில் 10% தூளைக் கலந்து வைக்கலாம்.

அறுவடைக்கு 3-5 நாட்களுக்கு முன், ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் மாலத்தியான் 50 இசி பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து காய்களில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும். மூட்டைக்குள் வண்டுகள் இருந்தால், ஒரு டன் பயறுக்கு மூன்று அலுமினியம் பாஸ்பைடு மாத்திரை வீதம் வைத்து, நெகிழி உறைகளால் மூடி ஐந்து நாட்களுக்குப் புகையிட்டு அழிக்கலாம்.


பயறு வண்டு V.R.SAMINATHAN e1615921018443

முனைவர் வி.ஆர்.சாமிநாதன்,

மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி, திருச்சி.

முனைவர் சி.விஜயராகவன், முனைவர் என்.மணிவண்ணன், 

தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையம், வம்பன், புதுக்கோட்டை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading