ஜெயந்தி ரோகு மீன்!

ஜெயந்தி ரோகு

செய்தி வெளியான இதழ்: 2018 ஜனவரி.

மேம்பட்ட ரோகு மீன், ஜெயந்தி ரோகு எனப்படுகிறது. இது, அதிக உற்பத்தியைக் கொடுக்கிறது. இந்த ஜெயந்தி ரோகு மீன் உருவான விதம் குறித்து இங்கே காணலாம்.

உலக மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்வதில், மீன்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்திய மீன் வளர்ப்பில் கெண்டை மீன்களின் பங்கு அவசியமாகிறது.

கட்லா, ரோகு, மிர்கால் போன்ற இந்திய பெருங் கெண்டைகள், புல்கெண்டை, வெள்ளிக் கெண்டை, சாதாக் கெண்டை போன்ற அயல்நாட்டுக் கெண்டைகள், இந்தியாவின் அனைத்து நீர் நிலைகளிலும் வளர்ப்பதற்கு ஏற்ற கெண்டை மீனினங்கள் ஆகும்.

இவற்றுள், ரோகு மீன் தனிச் சுவையும், சிறந்த வளர்ச்சியும் மிக்கது. ஆனால், தற்போது மீன் குஞ்சுப் பொரிப்பகங்களில் கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்திக்காக, ஒரே மரபணு மற்றும் குடும்பத்துடன் தொடர்புள்ள தாய் மீன்களைப் பயன்படுத்துவதால், அவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் குஞ்சுகள், வீரியம் குறைந்து காணப்படுகின்றன.

எனவே, இந்திய மீன்வள வல்லுநர்கள், மேற்கிந்திய ஆறுகளின் வெவ்வேறு கிளைகளில் இயற்கையாக வளர்ந்து வரும், தாய் ரோகு மீன்களைச் சேகரித்து, குறுக்கு இனப்பெருக்கச் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, புவனேஸ்வரில் உள்ள மத்திய நன்னீர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலையம், நார்வே நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து, தெரிவு செய்யப்பட்ட இனப்பெருக்கம் மூலம், மரபணு மேம்பபட்ட, ஜெயந்தி ரோகுவை உற்பத்தி செய்தது.

ரோகு என்னும் லேபியோ ரோகிட்டா மீன்களை, மக்கள் விரும்பி உண்பதாலும், கெண்டை மீன் வளர்ப்பில், மற்ற கெண்டைகளை விட, வளர்ச்சிக் குறைவதாக இருப்பதாலும், ரோகு மீன்கள், மேம்பட்ட இனப் பெருக்கத்துக்குத் தேர்வு செய்யப்பட்டன.

இதன்படி, கங்கா, யமுனா, பிரமபுத்திரா, சட்லஜ், கோமதி ஆகிய ஐந்து ஆறுகளில் இருந்தும், மத்திய நன்னீர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு நிலையத்தில் இருந்தும் எடுத்துக் கொள்ளப்பட்ட ரோகு மீன்கள், தேர்வு செய்யப்பட்ட இனப்பெருக்க முறைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த இனப்பெருக்கம் வாயிலாக, ஒன்பது தலைமுறைக்குப் பிறகு உற்பத்தி செய்யப்பட்ட மீன் குஞ்சுகள் 18 சதவீத வளர்ச்சியைப் பெற்றிருந்தன. இப்படி, மரபணு மேம்பட்ட ஜெயந்தி ரோகு மீன்கள், வெவ்வேறு கால நிலைகளில் இந்தியாவிலுள்ள, பஞ்சாப், ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த அனைத்து ஆய்வுகளிலும், மரபணு மேம்பட்ட ரோகு மீன்கள், பண்ணைகளில் உள்ள சாதாரண ரோகு மீன்களை விட, அதிக வளர்ச்சித் திறனைப் பெற்றிருந்தன. மரபணு மேம்பட்ட ரோகு, ஜெயந்தி ரோகு எனப் பெயரிடப்பட்டு, இந்தியாவின் 50ஆம் சுதந்திர நாளில் வெளியிடப்பட்டது.

மரபணு மேம்பட்ட ரோகு மீன் குஞ்சுகளின் முக்கியத்துவம்

இந்த மீன் குஞ்சுகளை, ஏற்கெனவே அமைந்துள்ள பண்ணைக் குளங்களில் வளர்த்தால் உற்பத்தி அதிகரிக்கும். வளர்ப்பின் போது, மற்ற உள்நாட்டு மீன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை. ஜெயந்தி ரோகு மீன் குஞ்சுகளின் விலையும் குறைவு. அதிகமாக உற்பத்தியாகி, இலாபத்தை அதிகமாக்கி, மீன் பண்ணையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.

ஜெயந்தி ரோகுவின் முக்கிய அம்சங்கள்

மரபணுச் சேர்க்கை மாறுபாட்டால் வளர்ச்சி அதிகமாகிறது. ஒதுக்கப்பட்ட கலப்பின வீரியத்தால் வளர்ச்சி உயருகிறது. தனியின மற்றும் பல்லினக் கலப்பு மீன் வளர்ப்பில், முழு உடன்பிறப்புக் குடும்பங்களின் தர வரிசையான ஜெயந்தி ரோகு, வளர்ச்சியில் மிகவும் சீராக உள்ளது.

தேர்ந்தேடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தில் ஒன்பது தலைமுறைக்குப் பிறகு, ஜெயந்தி ரோகு 18 சதவீகித வளர்ச்சியைக் கொடுக்கிறது. பண்ணைச் சோதனைகள், ஜெயந்தி ரோகுவின் அதிகமான வளர்ச்சியை உறுதி செய்கின்றன.

குறைந்தளவு 50 சத அளவில் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. இரண்டு மாதத்திலேயே விற்பனைக்கு உரிய அளவை அடைகிறது. மேலும், கண்ணைக் கவரும் நிறத்தில் இருப்பதால், சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.

நோயெதிர்ப்புத் திறன் மிக்கதாகவும் உள்ளது. ஜெயந்தி ரோகுவின் உற்பத்திச் செலவு குறைவு. புரத உணவு தேவையில்லை. பண்ணையில் தயாரிக்கும் 25-28 சதப் புரதம் நிறைந்த உணவே போதுமானது.

ஒரு நாளைக்கு 2 முறை 3-4 சதவிகித உடல் எடையில் தீவனம் அளிக்கப்படுகிறது. இருப்படர்த்தி நடுத்தரமானது. எ.கா: எக்டருக்கு 6,000- 7,000 விரலிகள். அவ்வப்போது சுகாதாரக் கண்காணிப்பு அவசியம்.

ஜெயந்தி ரோகு மீன்களை வளர்ப்பதால், சுற்றுச்சூழலும், நீர்வாழ் அமைப்பும் பாதிக்கப்படாது. இந்தத் திட்டத்தின் நோக்கம், மீன் வளர்ப்போர் பயனடைவது என்பது மட்டுமே ஆகும்.


க.அருள்ஜோதி, மி.வசந்தராஜன், க.காரல் மார்க்ஸ், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம், நாகப்பட்டினம் – 611 001.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!